வெள்ளி, 3 ஜூன், 2011

2 ஆயிரம் ரூபாய் 4 ஆண்டுகள் 250 வேலையாட்கள் தற்போது இவரிடம்

வறுமையை நினைத்து பயந்துவிடாதே...  திறமை இருக்கு மறந்துவிடாதே...  - என்னும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வரிகளுக்கு வாழும் உதாரணமாய் இருக்கிறார் சென்னை, மடிப்பாக்கத்தைச் சேர்ந்த 31 வயதான இளைஞர் இ.சரத்பாபு.  சத்துணவுக்கூடத்தில் வேலை செய்யும் அம்மாவின் உழைப்பில் படித்து, தொழில்  முனைவோராகியிருக்கும் இவர்,நாடு முழுவதும் பல தொழில்முனைவோர் கூட்டங்களில் பங்கேற்று தனது அனுபவங்களை எடுத்துரைக்கிறார்.  கடந்தாண்டு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அழைப்பின் பேரில் அங்கு நடைபெற்ற "இளைய தலைமுறையினருக்கான அரசியல் தொடர்பான பயிற்சிக் கூட்ட'த்திலும் பங்கேற்றிருக்கும் சரத்பாபு, அண்மையில் மதுரையில் இந்தியத் தொழில் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற தொழில் முனைவோர், தொழிலதிபர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டத்தில்  பங்கேற்க வந்திருந்த சரத்பாபுவிடம் அவரது வாழ்க்கை அனுபவங்களைக் கேட்டோம்.  ""சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள சேரி போன்ற பகுதியில்தான் எங்கள் வீடு இருந்தது. குடும்பத்தில் இரு மூத்த சகோதரிகள், இரு தம்பிகள், தாய் உள்பட என்னையும் சேர்த்து ஆறு பேர். நாங்கள் சிறுவயதாக இருக்கும்போதே குடும்பத்தைப் பராமரிக்கும் பொறுப்பை தந்தை தட்டிக் கழித்ததால், வறுமையின் பிடியில் குடும்பம் சிக்கியது. வேறு வழியின்றி குடும்ப பாரத்தை எனது தாயார் தனது தோளில் சுமந்தார்.  12-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றதால், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிட்ஸ் பிலானி உயர்கல்வி நிறுவனத்தில் 1997-ம் ஆண்டில் பி.இ., ஹானர்ஸ் படிப்பில் சேர்ந்தேன். எனது தாயார் கடன் வாங்கி எனது கல்விக் கட்டணத்தைச் செலுத்தினார். சகோதரியின் நகையையும் எனது படிப்புக்காக அடகு வைத்தேன். மத்திய அரசின் கல்வி உதவித்தொகையும் கிடைத்தது.  அங்கு மூன்றாவது ஆண்டு படிக்கும்போது கல்லூரிக் கூட்டத்தை நடத்தும் பொறுப்பை ஏற்று சிறப்பாக நடத்தியதால், எனக்கு மதிப்பு கிடைத்தது. படிக்கும்போது பயிற்சிக்காக ஆறுமாத காலம் பிகாருக்குச் சென்றேன். அங்கு நடந்த கூட்டத்தின்போது, இந்திய மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் ஏழ்மையில் இருப்பது குறித்து தெரியவந்தது. என் தாயைப் போன்று 7 கோடி தாய்மார்கள் இந்தியாவில் படும் சிரமத்திற்கு என்ன செய்யப் போகிறோம் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது.  2004-ம் ஆண்டில் ஐ.ஐ.எம்.-ல் சேர நுழைவுத் தேர்வு எழுதி வெற்றிபெற்று ஆமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம். நிறுவனத்தில் பிஜிடிஎம் படிப்பை மேற்கொண்டேன். 2-ம் ஆண்டு படிப்பை முடிக்கும் தருவாயில் நிறுவனம் தொடங்க முடிவு செய்தேன். அப்போது, குறைவான முதலீட்டில் வியாபாரம் தொடங்க உணவு வணிகம்தான் சரியானது என்று எனக்குத் தோன்றியது. 2006-ம் ஆண்டில் ஆமதாபாத்திலேயே "சாப்பாட்டு ராஜா' என்ற பெயரில் "ஃபுட்கிங் கேட்டரிங் சர்வீஸ்' என்ற நிறுவனத்தை ஆரம்பித்தேன். இதற்காக நான் போட்ட முதலீடு வெறும் ரூ. 2 ஆயிரம்தான். மற்றபடி எனது நண்பர்கள் மூலம் மொத்தம் ரூ.1 லட்சம் முதலீட்டில் இந்த நிறுவனத்தைத் தொடங்கினேன். தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு தென்னிந்திய, வடஇந்திய உணவைத் தயாரித்து வழங்கத் தொடங்கினேன்.  இந்தத் தொழிலை நாலரை ஆண்டுகளாகச் செய்து வருகிறேன். சென்னை, ஹைதராபாத், ராஜஸ்தான் உள்ளிட்ட இடங்களில் கிளைகள் உள்ளன. சுமார் 250 பேர் வரை எனது நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். ஆண்டுக்கு சில கோடி ரூபாய் அளவுக்கு விற்றுமுதல் நடைபெறுகிறது. இந்த நாலரை ஆண்டுகளில் எனது வியாபாரத்திற்காக நான் செலவழித்த நேரம் ஒன்றரை ஆண்டுகள்தான். 3 ஆண்டுகள் என்னைப் போன்ற தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்தியா முழுவதும் சென்று தொழில் கல்லூரிகள், தொழில்முனைவோர் பங்கேற்கும் விழிப்புணர்வுக் கூட்டங்களில் பேசி வருகின்றேன்.  இதுவரை 800 கூட்டங்களில் பேசியுள்ளேன். எனது அனுபவங்களால் ஈர்க்கப்பட்டு எனக்குத் தெரிந்து 200 தொழில் அதிபர்கள் உருவாகியுள்ளனர்.  இந்தியாவில் பசியால் எத்தனையோ பேர் வாடுகின்றனர். அதை நான் நன்றாக உணர்ந்ததால் பசி இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற லட்சியம் என்னுள் ஏற்பட்டது. இதன் காரணமாக, "ஹங்கர் ஃப்ரீ இந்தியா பவுண்டேஷன்' எனும் அமைப்பைத் தொடங்கியுள்ளேன். இந்த அமைப்பு மூலம் இளம் விதவையர், கணவரால் கைவிடப்பட்டோரின் குழந்தைகளின் கல்விக்கு உதவுவது, ஆதரவற்றோருக்கு உணவளிப்பது உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன.  பத்தாவது மாதமான அக்டோபர் 10-ம் தேதியன்று எங்களால் முடிந்தளவுக்கு சில ஆயிரம் பேரின் பசியை பறந்தோடச் செய்கிறோம். கடந்த ஆண்டு கோவா, நாக்பூர், ஹைதராபாத், சென்னை, வேலூர் உள்ளிட்ட பல இடங்களில் வாழும் ஆதரவற்றோருக்கு உணவு அளித்தோம்'' என்றார் சரத்பாபு.



கருத்துகள் இல்லை: