வியாழன், 2 ஜூன், 2011

குழந்தைக்கு கல்வி கட்டணம் கட்டமுடியாமல் தாய் தற்கொலை!

தன் குழந்தை படிக்க இயலாமல் தற்குறியாய் அலைய வேண்டியிருக்குமோ என்று எண்ணி அதை கற்பனை செய்யக்கூட சகிக்காமல் தற்கொலை செய்து கொண்டார் சங்கீதா.
கோவை மசக்காளிபாளையத்தை சேர்ந்தவர்  சங்கீதா. பட்டதாரியான‌ சங்கீதா தன்னை விட படிப்பில் குறைந்த, எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த தர்மராஜை சாதி கட்டுப்பாடுகளை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டார். பணி புரியும் இடத்தில் இயல்பாக ஏற்பட்ட இக்காதலை திருமணம் வரை கொண்டு செல்வதற்கு அவர் கடுமையாகப் போராடினார்.
சமூகத்தில் அரதப் பழசாகிப் போன சாதி நம்பிக்கையைத் தூக்கி எறிந்தவருக்கு, தனியார்மயம் தாராளமயம் உருவாக்கிய புதிய சமூகச் சீர்குலைவுகளைப் புரிந்து கொள்ளவது அவ்வளவு எளிதாகக் கைவரவில்லை. தன்னுடைய கணவரைப் போல் தன்னுடைய மகன் படிப்பில் சோடை போய் விடக் கூடாது என்பதற்காக தன்னுடைய சக்தியை மீறி செலவு செய்து, அந்தப் பகுதியிலேயே சிறந்த பள்ளி என்று கூறப்படும் பெர்க்ஸ் மேல்நிலைப் பள்ளியில்   சேர்த்துள்ளார் .
அவரது மகன் U K G செல்லும் போது ரூ.12,000 /- கட்டணம் செலுத்துமாறு பள்ளி நிர்வாகம் கூறியதை ஏற்றுக்கொண்டு ரூ.5000 /- செலுத்தியுள்ளார். மீதிப் பணத்திற்கு பல இடங்களில் கடன் கேட்டு பார்த்துள்ளார். ஆனால் எங்கும் பணம் கிடைக்கவில்லை. விரக்தியடைந்த சங்கீதா கடைசியாக‌ மண்ணெண்ணெய் ஊற்றித் தன் மேல் தீ வைத்துக் கொண்டார்.  தன் குழந்தை படிக்க இயலாமல் தற்குறியாய் அலைய வேண்டியிருக்குமோ என்று எண்ணி அதை கற்பனை செய்யக்கூட சகிக்காமல் இந்த உலகை விட்டே சென்றுவிட்டார் சங்கீதா.
குழந்தைக்கு கல்வி கட்டணம் கட்டமுடியாமல் தாய் தற்கொலை!
மனைவியை காப்பாற்றும் முயற்சியில் அடைந்த தீக்காயங்களுடன் தர்மராஜ்
ஒரு புறம் தனியார்மயம், தாராளமயம் உருவாக்கிய நுகர்வுக் கலாச்சாரம் சாதாரண மக்களது மனதை ஊடுருவிச் சீரழிக்கிறது. முதலாளித்துவ ஊடகங்கள் பிரதிபலிக்கும் மேட்டுக்குடி வாழ்க்கையைத்தான் உண்மையான வாழ்க்கை என்று எண்ணிக் கொண்டு, தானும் அதுபோல வாழத் தலைப்படும் முயற்சி பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்தவர்களிடமும் ஊடுருவி  செல்வாக்கு செலுத்துகிறது. ஒருபுறம் நுகர்வுக் கலாச்சாரம், மறுபுறம் தனியார் பள்ளி முதலாளிகளின் கொள்ளை லாபவெறி.
பிரச்சனைக்குட்பட்ட பள்ளியில் நீதிபதி கோவிந்தராசன் கமிட்டி நிர்ணயித்த கட்டணம் என்னவோ ரூ.3558 தான். ஆனால் பள்ளி நிர்வாகம் வசூலிக்கும் தொகையோ ரூ.12000. கோவிந்தராசன் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் சுமார் 3  மடங்கு அதிகம். குழந்தைகளை கடத்திப் பணம் பறிக்க அவர்களைத் தேடிப்போய், கடத்திப் பணம் பறிக்க வேண்டும். ஆனால்  இந்தக் கல்விக் கொள்ளையர்களிடம் பெற்றோர்களே தமது குழந்தைகளை ஒப்படைக்கின்றனர். குழந்தைகளின் எதிர்காலம் இந்தக் கல்விக் கொள்ளையர்களின் கையில்தான் உள்ளது என்று எண்ணிக் கொள்கின்றனர். இந்தக் கொள்ளையர்களின் உத்திரவுக்கு குரங்குகள் போல் ஆடுகின்றனர்.
இந்த நாட்டு மக்களின் நலன்கள், உரிமைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டிய அரசோ, புதிதாக அரசுப் பள்ளிகள் எதையும் கடந்த 20 ஆண்டுகளாகத்  திறக்கவில்லை. அப்படியே திறந்திருந்தாலும் அது இந்த நாட்டின் மக்கள் தொகையைக் கணக்கிலெடுத்துப் பார்க்கும் போது ஒன்றுமேயில்லை.
அரசியலமைப்புச்  சட்டம் 21-4 பிரிவின்படி இலவசக் கல்வி அளிக்க வேண்டிய அரசே உலக வங்கி , உலக வர்த்தகக் கழகம் ஆகியவற்றின் உத்திரவின் பேரில் அரசியலமைப்புச் சட்டத்தைக் காலில் போட்டு மிதித்து விட்டு, மக்களுக்குக் கல்வி கற்பிக்கும் வேலையையே கந்து வட்டி, லேவா தேவிக்காரர்களிடமும், கருப்புப் பண முதலைகளிடமும், பகற்கொள்ளையர்களிடமும் ஒப்படைத்து விட்டது.
இந்திய அரசியல் சட்டம் வரையறுத்துள்ள சில சில்லறை உரிமைகள் கூட  உலகம் முழுவதும் அதற்கு முன் நடந்த‌ மக்கள் போராட்டத்தின் விளைவே ஆகும். மக்களின் போராட்ட குணம் இன்று நீர்த்துப் போய்விட்ட படியால் மக்களின் எதிரிகள், பகற் கொள்ளையர்களின் கை மேலோங்கியுள்ளது.
மக்களின் உரிமைகளை மீண்டும் நிலைநிறுத்திக் கொள்ள, மக்களை ஒன்று திரட்டிப் போராடும் முயற்சியில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம், கல்விக் கட்டணத்திற்கு  எதிராகத் துண்டுப் பிரசுரங்களை மக்களிடம் விநியோகித்து, சங்கீதாவை தற்கொலைக்குத் தூண்டிய பெர்க்ஸ் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சுவரொட்டிகளும் ஒட்டியுள்ளனர்.
தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் நடத்தும் கல்விக் கட்டணக் கொள்ளைக்கெதிராகவும், கோவிந்தராசன் கமிட்டியின் கட்டணத்தை நடைமுறைப் படுத்தக் கோரியும் கடந்த 20.05.2011  அன்று மனித உரிமைப் பாதுகாப்பு மையம் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
குழந்தைக்கு கல்வி கட்டணம் கட்டமுடியாமல் தாய் தற்கொலை!
ஆர்பாட்டத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தினர்
ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் உறுப்பினர்கள் மற்றும் பொதுவான‌ ஜனநாயக ஆர்வல‌ர்களும் கலந்து கொண்டனர். மாவட்டப் பொருளாளர் அபு தாகிர் ஆர்ப்பாட்டத்தைத் துவக்கி வைக்க, மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உரையாற்றினார். மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் மணிவண்ணன் சிறப்புரையாற்றினார் .
சங்கீதாவின் கொலைக்கு காரணமான பள்ளிக் கொள்ளையர்களின் இலாப வெறியை கோவை மக்கள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக உணரத் துவங்கியிருக்கின்றனர். மனித உரிமைப் பாதுகாப்பு மையத் தோழர்களிடம் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மக்கள் தத்தமது பகுதி தனியார் பள்ளிகளின் சுரண்டலை எதிர்த்து புகார் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். சங்கீதாவின் மரணம் அந்த வகையில் ஒரு தீப்பொறியாக பயன்பட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை: