செவ்வாய், 31 மே, 2011

பிராமணனைப் புரோகிதனாக வைத்து நடத்தாத திருமணம்தான் சுயமரியாதைத் திருமணம்.


கருணாநிதியின் காதல் தோல்வி

பகுத்தறிவு பரப்பும் பிரம்மாண்டமான இதழாக முரசொலியைக் கொண்டுவரவேண்டும் என்பதுதான் கருணாநிதியின் கனவு. அப்படிப்பட்ட இதழை வார அல்லது மாத இதழாக நடத்தினால் கம்பீரமாக இருக்கும் என்று நினைத்தார். ஆசைக்கு நியாயம் இருந்ததே தவிர நிதி இல்லை.
கைவசம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதைக் காட்டிலும் பணம் எப்போது வரும் என்பதுதான் கருணாநிதிக்கு முன்னால் நின்றுகொண்டிருந்த கேள்வி. கிடைத்தபோதுதான் அச்சடிக்கவேண்டும் என்றால் அதைத் துண்டுப்பிரசுரமாக மட்டுமே வெளியிடுவது சாத்தியம். அதைத்தான் கருணாநிதியும் செய்தார்.
பத்திரிகையின் நோக்கம் தொடங்கி பக்க எண்ணிக்கை, முகப்பு, வடிவம், உள்ளடக்கம் வரை அனைத்தையும் கருணாநிதியே முடிவுசெய்தார். பெரியாரின் பகுத்தறிவு, மொழிக்கொள்கை, சுயமரியாதைக் கருத்துகள் ஆகியவற்றைப் பரப்புவதுதான் பத்திரிகையின் நோக்கம். அதை ஒட்டிய கட்டுரைகளுக்கும் செய்திகளுக்குமே முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று முடிவுசெய்தார்.
முரசொலி என்ற தலைப்புக்கு அருகே பெரியாரின் மார்பளவுப் படம் ஒன்றை இடம்பெறச் செய்தார். உலகப் போர் நடந்துகொண்டிருந்த சமயம் என்பதால் பத்திரிகைத் தலைப்புக்கு மேலே V என்ற குறியீடு இடம்பெற்றிருந்தது. இதழை வெளியிடும் அமைப்புக்கு முரசொலி துண்டறிக்கை வெளியீட்டுக் கழகம் என்று பெயர் வைத்தார். அந்தக் கழகத்தின் செயலாளர் பொறுப்பை தனது நண்பர் தென்னனிடம் கொடுத்தார். பொருளாளர் பொறுப்பை இன்னொரு நண்பர் டி.எஸ். ராஜகோபால் ஏற்றுக்கொண்டார். எல்லாம் தயார்.
10 ஆகஸ்டு 1942 அன்று துண்டுப்பிரசுரமாக வெளியாகத் தொடங்கியது முரசொலி. பெரும்பாலான கட்டுரைகளை கருணாநிதியே எழுதினார். ஆனால் கருணாநிதி என்ற பெயரில் அல்ல; சேரன் என்ற பெயரில். புனைபெயர். அவரைத் தவிர வேறு சிலரும் எழுதினர்.
நான்கு பக்கங்கள் என்று தீர்மானித்து இருந்தாலும் சூழ்நிலைக்கு ஏற்ப பக்க எண்ணிக்கையைக் கூட்டவும் குறைக்கவும் செய்தார். சூழ்நிலை என்பது பணம் எவ்வளவு கிடைக்கிறது, எப்போது கிடைக்கிறது என்பதைப் பொறுத்தது. சில சமயங்களில் எட்டு பக்கங்கள், பதினாறு பக்கங்கள் கொண்ட முரசொலியும் வெளியானது. ஒரு அணா, ஒன்றரை அணா என்று பக்கங்களுக்குத் தகுந்தவாறு விலையை மாற்றிக்கொண்டார்.
முரசொலியில் கருணாநிதியின் எழுத்துகள் எப்படி இருந்தன என்பதற்கு அதன் இரண்டாம் ஆண்டில் எழுதிய கட்டுரை பொருத்தமான சாட்சியம். அது, சிதம்பரம் நகரிலே நடைபெற இருந்த வர்ணாசிரம மாநாட்டைக் கண்டித்து எழுதப்பட்ட கட்டுரை. தலைப்பு வருணமா? மானமா?
’மதப்பாத்திரத்திலே ஊற்றிக்கொடுத்த சூத்திர சுராபானம் மறத் தமிழர் வாழ்விலே மயக்கம் தரும் பொருளாயிற்று!’
கட்டுரைகள் எழுதினால் மட்டும் பத்திரிகையைத் தொடர்ந்து வெளியிட்டுவிட முடியுமா என்ன? பணம் வேண்டும். பேப்பருக்குப் பணம். அச்சடிக்கப் பணம். எல்லாவற்றுக்கும் பணம். என்ன செய்வது? முரசொலி இதழிலேயே விளம்பரம் ஒன்றைக் கொடுத்தார் கருணாநிதி.
விரைவில் நன்கொடை அனுப்பி
வைத்தால் முரசொலி உங்களை
நாடி வரும் – அடுத்த ஒலி அக்டோபர் 25ல்!
முரசொலி பத்திரிகை மெல்ல மெல்ல பிரபலமடையத் தொடங்கியது. பெரியார், அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் மத்தியில் முரசொலிக்கு நல்ல வரவேற்பு. எழுத்தாளரின் பெயர் சேரன் என்று இருந்தாலும் அதை எழுதுபவர் கருணாநிதி என்பதைப் படித்தவர்கள் சுலபத்தில் புரிந்துகொண்டனர். முரசொலி எழுத்தாளர் கருணாநிதி என்று கட்சி வட்டாரத்தில் பிரபலமடையத் தொடங்கினார் கருணாநிதி. முரசொலி மூலமாக நீதிக்கட்சி மற்றும் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த பேச்சாளர்கள், இளம் தலைவர்கள் பலருடனும் கருணாநிதிக்கு நட்பு ஏற்பட்டது.
பெரியார் தலைமையில் செயல்படத் தொடங்கிய நீதிக்கட்சியை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்தபோது கட்சிப் பிரசாரத்திலும் முரசொலியை ஈடுபடுத்தினார் கருணாநிதி. அது தொடர்பான விளம்பரம் ஒன்று:
திராவிடர் தலைவர் பெரியார்
அவர்களைத் தலைவராகக் கொண்ட
திராவிடர் கழகத்தில் நீங்கள்
உறுப்பினராகச் சேர்ந்து விட்டீர்களா?
கட்சி, அரசியல், எழுத்து, பத்திரிகை என்று கருணாநிதி பல விஷயங்களில் ஆர்வம் செலுத்தியது நியாயமாக அவருடைய பெற்றோரையும் உறவினர்களையும் மகிழ்ச்சியடையச் செய்திருக்கவேண்டும். மாறாக, பயத்தை ஏற்படுத்தியது. கருணாநிதியின் எதிர்காலம் குறித்த சந்தேகம். கால்கட்டு போட்டுவிட்டால் எல்லாம் கட்டுக்குள் வந்துவிடும் என்ற முடிவுக்கு வந்தனர்.
இருபது வயது என்பது அந்தக் காலத்தில் திருமணத்துக்கு ஏற்ற வயதுதான். ஆகவே, பெண் பார்த்துவிட்டனர். சிதம்பரத்தைச் சேர்ந்த இசைக்கலைஞர் சிதம்பரம் ஜெயராமனின் சகோதரிதான் பெண். பெயர் பத்மாவதி. உறவினர்கள் அனைவருக்கும் பெண்ணைப் பிடித்துவிட்டது. உடனே புறப்பட்டு சிதம்பரத்துக்கு வா என்று தந்தி வந்ததும் கருணாநிதிக்குத் தயக்கம்.
கைவசம் வேலை எதுவும் இல்லை. பத்திரிகை நடத்துவதும் நாடகங்கள் எழுதுவதும் ஆர்வத்தின் வெளிப்பாடு. ஆகாரத்துக்கு உதவாது. குடும்பம் நடத்தக் குந்துமணி அளவுக்குக்கூட பணம் கிடைக்காது என்பது கருணாநிதியின் மனத்தில் பயத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் பெற்றோர் முடிவுசெய்து விட்டார்கள். சிதம்பரத்துக்குப் புறப்படுவதைத் தவிர இப்போதைக்கு வேறு வழியில்லை. புறப்பட்டுவிட்டார். கூடவே, அவருடைய நண்பர் தென்னன்.
உண்மையில் கருணாநிதிக்கு உடனடியாகத் திருமணம் செய்துவைக்கவேண்டும் என்பது பெற்றோரின் விருப்பமில்லை. அதற்குத் தூண்டியது கருணாநிதிக்கு வந்த காதல்தான். எழுதுவது, நாடகம் நடிப்பது போக எஞ்சியுள்ள நேரத்தில் உள்ளூர்ப்பெண் ஒருவரைக் காதலிக்கத் தொடங்கினார். ஆனால் பெண் வீட்டில் முரண்டு பிடிக்கவே காதல் தோல்வி. விரக்தியுடன் திரியத் தொடங்கிய கருணாநிதியை சகஜ நிலைக்குத் திருப்ப திருமணம் என்ற கருவி பயன்பட்டது.
தனக்குப் பெண் பார்க்கப் போகிறார்கள் என்று தெரிந்ததுமே கருணாநிதி நிபந்தனை ஒன்றை விதித்திருந்தார். புரோகிதர்களைக் கொண்டு நடத்தப்படும் திருமணமாக என்னுடைய திருமணம் இருக்காது. சுயமரியாதைத் திருமணம்தான் செய்துகொள்வேன். சரி என்று சொல்லிவிட்டனர் பெற்றோர். பெண்ணைப் பார்த்த்தும் பிடித்துவிட்டது. திருமணத்துக்கு 13 செப்டெம்பர் 1944 என்று தேதியும் குறித்துவிட்டார்கள்.
சுயமரியாதைத் திருமணம் என்பதற்கு பெரியார் கொடுத்த விளக்கம் முக்கியமானது. நம்மை விட உயர்ந்தவன் என்று சொல்லிக்கொள்ளும் பிராமணனைப் புரோகிதனாக வைத்து நடத்தாத திருமணம்தான் சுயமரியாதைத் திருமணம். அதன்படி புரோகிதர்களைப் புறக்கணித்துவிட்டு, சுயமரியாதை இயக்கப் பேச்சாளர்களான இரா. நெடுஞ்செழியன், அவருடைய சகோதரர் இரா. செழியன் உள்ளிட்டோர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார் கருணாநிதி. இத்தனைக்கும் அதேநாளில் அவருடைய மைத்துனர் ஜெயராமனுக்கும் திருமணம். ஆனால் புரோகிதர்களைக்கொண்டு நடத்தப்பட்டது.
திருமணம் ஆகிவிட்டது. குடும்பம் நடத்தவேண்டும். அதற்குப் பணம் வேண்டும். உறுப்படியான தொழில் என்று எதுவும் கருணாநிதியிடம் இல்லை. அப்போதைக்கு அவருடைய கையில் இருந்த ஒரே முதலீடு எழுத்து மட்டுமே. அதைத்தான் மலைபோல நம்பியிருந்தார் கருணாநிதி.
தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்துக்கு நிதி திரட்டும் நோக்கத்துடன் நாடகம் ஒன்றை முன்பு எழுதியிருந்தார் கருணாநிதி. அதன் பெயர், பழனியப்பன். திருவாரூரில்தான் அரங்கேற்றம் செய்தார். ஆனால் அன்றைய தினம் பெய்த மழை காரணமாக வசூல் பாதிக்கப்பட்டது. நாடகத்தில் நடித்த நாயகி உள்பட பலருக்கும் சம்பளம் தரவேண்டும். வழக்கம்போல கையில் பணமில்லை.
நிலைமையைச் சமாளிக்க அந்த நாடகத்தை நண்பர் ஒருவரிடம் விற்றுவிட்டார் கருணாநிதி. அந்த நண்பரின் பெயர் ஆர். வி. கோபால். நாகை திராவிட நடிகர் கழகம் என்ற நாடக்க் குழுவைத் தொடங்க இருந்த அவர், தன்னுடைய குழுவுக்காக அந்த நாடகத்தை வாங்கிக்கொண்டார். நூறு ரூபாய் கிடைத்தது கருணாநிதிக்கு.
பணப்பிரச்னையை சமாளிக்க அன்று உதவிய ஆர்.வி. கோபாலே மீண்டும் உதவிக்கு வந்தார். விழுப்புரத்துக்குச் சென்று நாடகம் போடலாம் என்று நினைக்கிறோம். எங்கள் குழுவுடன் நீங்களும் ஒரு நடிகராக வரவேண்டும். நடித்துக்கொடுக்கவேண்டும். நல்ல சன்மானம் தருகிறோம். கோபாலின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார் கருணாநிதி.
புறப்படச் சம்மதம் சொன்னதற்குப் பணத்தைக் காட்டிலும் முக்கியமான காரணம் ஒன்று இருந்தது. திராவிட நடிகர் கழகம் பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டவர்களால் நடத்தப்படும் குழு. திராவிடர் கழகத்தின் கொள்கைகளைப் பரப்புவதுதான் அவர்களுடைய இலக்கு. போதாது?
விழுப்புரம் புறப்படவேண்டும். திருமணமான புதிது. மனைவியைத் தனியே விட்டுச் செல்ல மனமில்லை. ஆனாலும் வாழ்க்கை முக்கியம். எதிர்காலம் முக்கியம். புறப்பட்டுவிட்டார்.
கருணாநிதி எழுதிய பழனியப்பன் நாடகத்தைத்தான் அந்தக் குழுவினர் முதலில் நடத்தினார்கள். வசூல் ஒன்றும் பிரமாதமாக வரவில்லை. கையைக் கடித்தது. ஆனாலும் நாடகத்தைத் தொடர்ந்து போடாமல் இருக்கமுடியாதே.. என்ன செய்வது? நாடகத்தின் பெயரை சாந்தா என்று மாற்றி விளம்பரம் செய்தனர். ம்ஹூம். அதுவும் எடுபடவில்லை.
சரி, யாரையேனும் பெரிய மனிதர்களை அழைத்துவந்து தலைமையேற்கச் செய்யலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது. அப்போது பிரபலமாக இருந்த உத்தி அதுதான். திராவிட நடிகர் கழகம் என்பதால் பெரியாரே நாடகம் பார்க்க வந்தார். பிறகு அண்ணாவும் வந்தார். வசூல் கூடியதே தவிர லாபம் கிடைக்கவில்லை.
நாடகத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டுகின்றனர். முக்கியமாக, குறைகள் எதையும் சொல்லவில்லை. எனில், ஏன் வசூல் இல்லை?
காரணத்தைத் தேடியபோது விநோதமான விஷயம் ஒன்று காதில் விழுந்தது.
(தொடரும்)
O
ஆர். முத்துக்குமார்

கருத்துகள் இல்லை: