திங்கள், 20 ஜூன், 2011

ராகுல் காந்தி பிரதமர் பதவியை ஏற்க இது சரியான நேரம்: திக் விஜய் சிங்



ராகுல் காந்தி பிரதமர் பதவியை ஏற்க இது சரியான நேரம் என்று நான் நினைக்கிறேன் என, திக் விஜய் சிங் கூறினார்.
அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் 41வது பிறந்த நாள் மத்திய பிரதேச மாநிலத்தில் கொண்டாடப்பட்டது. அதில் அந்த மாநில முன்னாள் முதல் மந்திரியும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான திக் விஜய் சிங் கலந்து கொண்டார்.

அப்போது, அவர் கூறியதாவது: ராகுல் காந்திக்கு 40 வயது முடிந்து 41 வது வயது பிறக்கிறது. அவர் புதிய சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்று எனது பிறந்த நாள் வாழ்த்தாக தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறேன்.

ராகுல் காந்தியின் பிறந்த நாள் உத்தரப்பிரதேசம் முழுவதும் விவசாயிகளின் உரிமை நாளாக கொண்டாடப்படுகிறது. ராகுல் காந்திக்கு பாரதிய ஜனதா தலைவர்களில் ஒருவரான உமா பாரதி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர், எதிர்கட்சியினரை மதிக்க ராகுல் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார். ராகுல் எதிர்கட்சியினரை மதிக்க என்றும் தவறியதில்லை.
ராகுல் கடந்த 8 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்து வருகிறார். அவர் அரசியலில் நல்ல அனுபவம் பெற்றுள்ளார். காந்தி குடும்பத்தின் வழித்தோன்றலான அவர் சிறந்த பண்பு, இயற்கை அறிவு, சிறந்த அனுபவம் ஆகியவற்றைப் பெற்று பிரதமர் பதவியை ஏற்ககூடிய தகுதியைப் பெற்று விட்டார்.
எனவே அவர் பிரதமர் பதவியை ஏற்க இது சரியான நேரம் என்று நான் நினைக்கிறேன். அவர் சிறுபான்மை மக்களை திருப்திபடுத்த அரசியல் செய்வதாக கூறுவதை ஏற்க முடியாது.

சிறுபான்மை ஆதரவு அரசியல் நடத்துவதான என்னை குறை கூறுகின்றனர். தற்போதைய முதல் மந்திரி சிவராஜ் சிங்கை முஸ்லிம்கள் பாராட்டுகின்றனர். அதற்காக, அவரை சிறுபான்மை ஆதரவு அரசியல் நடத்துவதாக யாரும் கூறுவதில்லை. நான் மத்திய பிரதேச முதல் மந்திரியாக இருந்தபோது சிமி மற்றும் பஜ்ரங் தள் ஆகிய இரண்டு அமைப்புகள் மீதும் நடவடிக்கை எடுத்தேன். பா.ஜனதாவில் இருந்து வெளியேற்றப்பட்ட உமா பாரதிக்கு வேறு எங்கும் புகலிடம் கிடைக்காததால் மீண்டும் பா.ஜனதாவிலேயே சேர்ந்து விட்டார் என்றார்.

கருத்துகள் இல்லை: