இலங்கைக்கு இந்திய சுற்றுலாப் பயணிகள் வருகைதந்தவுடன் விசா வழங்கும் முறைமையை அரசாங்கம் நீக்கியிருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்திருந்த செய்தியை குடிவரவுகுடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் டபிள்யூ.ஏ.சூலாநந்த பெரேரா மறுத்துள்ளார். தான் தெரிவித்திருந்த விடயம் தவறாக மேற்கோள்காட்டப்பட்டிருப்பதாக அததெரண இணையத்தளத்துக்கு நேற்று வெள்ளிக்கிழமை கூறியுள்ளார். இந்தத் தீர்மானத்தை இலங்கை எடுத்திருப்பதாக இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை நேற்று முன்தினம் வியாழக்கிழமை குறிப்பிட்டிருந்தது. சிங்கப்பூர், மாலைதீவு நாடுகளைச் சேர்ந்த உல்லாசப் பயணிகளுக்கு மட்டுமே தொடர்ந்தும் வருகைதந்தவுடன் விசா வழங்கும் நடைமுறை மேற்கொள்ளப்படுமெனவும் இந்நாடுகள் இலங்கையர்கள் அங்கு சென்றவுடன் விசா வழங்கும் நடைமுறையைக் கொண்டிருப்பதாகவும் கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்திருந்ததாக இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை குறிப்பிட்டிருந்தது. அதேசமயம், இது தொடர்பாக நேற்று கருத்துத் தெரிவித்த குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம், இந்தியப் பத்திரிகை எதற்கும் தான் கருத்து எதனையும் தெரிவித்திருக்கவில்லை. அதாவது வருகைதந்தவுடன் இந்தியர்களுக்கு விசா வழங்குவது தொடர்பாக எதனையும் குறிப்பிட்டிருக்கவில்லையென்று தெரிவித்துள்ளார். புதிய முறைமையான இணையத்தினூடாக விசா வழங்கும் முறை குறித்தே தான் கதைத்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்தியர்கள் வருகைதந்தவுடன் விசா வழங்கும் முறையை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக