வியாழன், 7 அக்டோபர், 2010

DMK-Congress வெற்றி கூட்டணி தொடரும்: ஜெயந்தி நடராஜன்

சென்னை: முதல்வர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில், அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் இன்று காலை சந்தித்தார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர்,

மரியாதை நிமித்தமாகவே முதல்வரை சந்தித்தேன். தமிழக, டெல்லி அரசியல் நிலவரம் குறித்து அவரோடு பேசினேன். திமுக- காங்கிரஸ் கூட்டணி ஒரு வெற்றிக் கூட்டணி.

இந்தக் கூட்டணியின் ஆட்சியில் மத்திய அளவிலும், மாநில அளவிலும் பெரிய அளவிலே பணிகள், திட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்பதை மக்கள் நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள். எனவே அடுத்த தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடரும் என்றார்.

கேள்வி: சோனியா காந்தியின் தமிழக வருகை குறித்துப் பேசினீர்களா?

பதில்: சோனியா காந்தி எங்கள் கட்சிக் கூட்டத்திற்காக வருகிறார். எனவே, அது குறித்து முதல்வருடன் பேசவில்லை.

கேள்வி: இலங்கைத் தமிழர்கள் நிலை குறித்து அறிய சிறப்புத் தூதராக வெளியுறவுத்துறைச் செயலாளர் நிருபமா ராவ் அனுப்பப்பட்டார் அவரது அறிக்கை வந்துவிட்டதா?.

பதில்: அவரது அறிக்கை மத்திய அரசிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அது பரிசீலனையில் உள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் குறித்து, தமிழக முதல்வருடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தமிழக சட்டசபை புதிய காங்கிரஸ் தலைவர் யார்?:

தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவராக இருந்த சுதர்சனம் கோவை செம்மொழி மாநாட்டுக்கு சென்றபோது மரணமடைந்தார். அவரது மறைவுக்கு அந்தப் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை.

இந் நிலையில் நவம்பர் 8ம் தேதி தமிழக சட்டசபை கூடுகிறது. அதற்குள் புதிய தலைவரை காஙகிரஸ் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இந்தப் பதவிக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. தற்போது துணை தலைவராக உள்ள யசோதா, கொறடா பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிகிறது.

இதற்கிடையே முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்டி அதில் தான் சட்டசபை காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந் நிலையில் வரும் 9ம் தேதி திருச்சி வரும் காங்கிரஸ் தலைவர் சோனியா, காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி சட்டசபை காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வார் என்று தெரிகிறது.

இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் குளறுபடி:

இதற்கிடையே தமிழகத்தில் நடந்து முடிந்த இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் 01.01.75ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்களே போட்டியிட தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

சில மாதங்களுக்கு முன் இந்த விதியின் அடிப்படையில் தான் தேர்தலும் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

ஆனால், இதில் சிலர் தங்களது வயதை குறைத்துக்காட்டி தேர்தலில் நின்று வெற்றி பெற்றுள்ளதாக இளைஞர் காங்கிரசுக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: