வியாழன், 7 அக்டோபர், 2010

லஞ்சம் கொடுத்ததை ஊரறிய தெரிவிக்கலாம்: இணையதளம் அறைகூவல்

லஞ்சம் கொடுத்ததை தெரிவிக்க அச்சமா? இனி வேண்டாம் என்கிறது ஜனகிரகாவின் இணையதளம். லஞ்சத்தை எதிர்த்து பிரசாரம் செய்யும் வகையில், பெங்களூரில் சமீபத்தில் துவக்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தில், யார் வேண்டுமானாலும் லஞ்சத்தை பற்றிய தங்களது அனுபவங்கள், கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.

"ஜனகிரகா' என்ற அமைப்பின் மூலம் துவங்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தில், www.ipaidabribe.com என்ற முகவரியை திறந்து உள்ளே சென்றால், நான்கு பிரிவுகளின் கீழ் கருத்துக்களை பதிவு செய்ய வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. முதல் வாய்ப்பில் லஞ்சம் கொடுத்த அனுபவத்தை பதிவு செய்யலாம். இரண்டாவது பகுதியில், லஞ்சம் கொடுக்காதவர்கள் பதிவு செய்யலாம். மூன்றாவது கொடுக்கப்பட்டிருக்கும் பகுதியில், லஞ்சம் கொ டுக்க தேவையில்லை என்றும், நான்காவது பகுதியில், நான் லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை என்று தெரிவிப்பவர்கள், தங்களது கருத்துக்களையும் பதிவு செய்யலாம்.

இதுகுறித்து ஜனகிரகா அமைப்பின் நிறுவனர் சுவாதி ராமநாதன் கூறியதாவது: பெருகிவிட்ட லஞ்சத்தால் பாதிக்கப்படாதவர்கள் இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, லஞ்சத்தை வேரறுக்கும் வகையில் இந்த புதிய இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. இது பண்டமாற்று சாலை போன்று செயல்படும். சர்ச்சுக்கு போய் குற்றத்தை ஒப்புக்கொள்வது போல், லஞ்சம் வாங்கியவரும், லஞ்சம் கொடுத்தவரும் தங்களது கருத்துக்களை ஒப்புக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. லஞ்சம் பெறுபவர்கள் சிறு தவறு செய்து, அதிக வெகுமதி பெறுகின்றனர்.அவர்கள் செய்யும் தவறு யாருக்கும் தெரியாது என்ற மமதையில் அவர்கள் அடுத்தடுத்து தவறுகளை தொடர்கின்றனர்.ஆனால் லஞ்சம் பெற்றால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று அவர்கள் உணர்ந்தால், கண்டிப்பாக லஞ்சம் வாங்கும்போது யோசிப்பார்கள். ஆனால் இந்த இணையதளம்அரசு ஊழியர்களையும்,தனி நபர்களையும் குறிவைத்து துவங்கவில்லை.லஞ்சத்தை தடுப்பதை மட்டும் குறிக்கோளாக கொண்டு துவக்கியுள்ளோம். இவ்வாறு சுவாதி ராமநாதன் கூறினார்.

கடந்த ஆகஸ்ட் 15ந்தேதி துவக்கப்பட்ட இந்த இணையதளத்தில், இதுவரை 109 நாடுகளிலிருந்து 35,000 பேர் தங்களது லஞ்ச அனுபவ கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். பெங்களூரில் மட்டும் லஞ்சம் கொடுத்தது தொடர்பாக 535 புகார்களும்,லஞ்சம் கொடுக்காதது குறித்து 100 தகவல்களும் பதிவாகியுள்ளன. நாடு முழுவதும்,52 நகரங்களை சேர்ந்தவர்கள் தங்களது லஞ்ச அனுபவத்தை பதிவு செய்துள்ளனர்.லஞ்சம் கொடுத்த கதையை பதிவு செய்ய நீங்களும் புறப்பட்டு விட்டீர்கள்தானே.
rajamohamed - riyadh,சவுதி அரேபியா
2010-10-07 01:44:28 IST
சபாஷ் !.இந்தியன் என்று சொல்வது இப்போ பெருமையா இருக்கு. லஞ்சத்தை பற்றி யோசிக்கவும் ஒரு குழுமம் இருக்கிறதே என்று.!....
கே.கைப்புள்ள - nj,இந்தியா
2010-10-07 00:51:58 IST
லஞ்சத்தை வேரறுக்கும் வகையில் இந்த புதிய இணையதளம் துவக்கப்பட்டுள்ளது-எப்படி? எப்படி வேரறுக்கும்? சொல்லுங்க. பாக்க போனால் இது லஞ்சத்தை மேலும் வளர்க்கும். ங்கோ.... அநியாயமா லஞ்சமா இவளோ பணத்த புடுங்கிட்டானே, ச்ச... லஞ்சம் கொடுத்து இத முடிச்சிட்டோமே, அயயையோ லஞ்சம் வாங்கிட்டோமே, இவளவு கஷ்டம் வந்ததுக்கு அப்புறமும் இன்னும் லஞ்சம் வாங்கிட்டு இருக்கேனே, அப்படி இப்படின்னு ஒவ்வொருத்தனும் மனசுக்குள்ள கொமஞ்சு கொமஞ்சு புழுங்கி புழுங்கி வெந்து சாவனும். ஏண்டா கொடுத்தோம், ஏண்டா வாங்கினோம்ன்னு ஒவ்வொரு நாளும் அவனுகளோட மனசாட்சியே அவனுகள கொல்லனும். அதுதான் உலகத்தில மிக பெரிய சக்தி. அதனால கூட ஊர்ல ஒன்னு ரெண்டு பேரு திருந்தி வாழ்ந்துகிட்டு இருப்பானுக. நீங்க போட்ட இந்த வெப்சைட் வந்து ஒரு வடிகால் மாறி ஆகி போச்சு. மனசுல இருக்கிற சுமைய இறக்கி வெச்சுட்டா மனசு லேசாய்டும். அதுதான் தப்ப ஒத்துக்கிட்டோமே அப்புறம் என்ன. மறுபடியும் வாங்குவோம்ன்னு தோணும். ஆனா ஒண்ணுங்க, வெளிநாட்டு வெள்ளக்காரன் கூகிள், ப்பெஸ்புக், ட்விட்டர், ஹுலு ன்னு வெப்சைட் போட்டு உலகத்துக்கே வழிகாட்டியா இருக்கானுக. நாம பாத்தீங்களா எதுக்கெல்லாம் வெப்சைட் போட்டு நம்ம ஊரு மானம் காத்துல பறக்குது. ஏண்டா உங்க நாட்ல லஞ்சம் கொடுக்காம எதுவுமே நடக்காதா ன்னு பரிகாசத்துடன் கேட்க்கும் போதும் ரொம்ப வலிக்குதுடா. திருந்தி தொலைங்களேண்டா சனியனுகளா....
மு அமானுல்லா - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-07 00:14:20 IST
இது ஒரு நல்ல முயற்சி. வெற்றிகரமாக செயல்பட மனபூர்வ வாழ்த்துக்கள். தமிழகத்திலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பத்திரிக்கைகள் போன்ற மக்கள் நல சக்திகள் இந்த முயற்சியினை தொடங்க வேண்டும். இது போன்ற ஒரு நிலை ஏற்பட்டால் எதிர்காலத்தில் கழக ஆட்சியில் லஞ்சம் வாங்குவதை சட்டபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் சம்பந்தபட்டவர்களிடம் இருந்து எழலாம்....

கருத்துகள் இல்லை: