பொன்சேகாவின் விடுதலைக்காகப் போராடுவோம்! கனேடிய தமிழர் பேரவை
ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் சரத் பொன்சேகாவுக்கு விதிக்கப்பட்டிருக்கும் இரண்டரை வருட கடூழிய சிறைத் தண்டனையை எதிர்த்துப் புலம்பெயர் தமிழர்கள் போராடுவார்கள் என்று கனேடிய தமிழர் பேரவை அறிவித்துள்ளது. இலங்கையில் உள்ள சிறைகளில் வாடும் தமிழ் உறவுகளின் விடுதலைக்காக மட்டும் அன்றி சரத் பொன்சேகாவின் விடுதலைக்காகவும் புலம்பெயர் தமிழர்கள் போராடுவார்கள் என்று பேரவையின் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:-”முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுடன்தான் எமக்கு முரண்பாடுகள் இருந்தன. ஆனால் அரசியல்வாதி சரத் பொன்சேகாவுடன் எமக்கு எவ்விதமான பிரச்சினையும் இல்லை. பொன்சேகா நீதிக்குப் புறம்பான விதத்தில் நடத்தப்பட்டுள்ளார். இராணுவ நீதிமன்றத்தால் சிறைத் தண்டனைத் தீர்ப்பு விதிக்கப்பட்டுள்ளார். இவையெல்லாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆசிர்வாதத்துடனும், அறிவுறுத்தலுடனுமே இடம்பெற்றுள்ளன.
ஜனாதிபதியின் குடும்பத்தினரும் இவற்றின் பின்னணியில் உள்ளார்கள். முன்னாள் இராணுவ தளபதியை இப்படியெல்லாம் கொடுமைப்படுத்துகின்ற இச்சர்வாதிகார அரசு தமிழர்களை எப்படிக் கொடுமைப்படுத்தி இருக்கும்? பொன்சேகாவை சிறை வைத்திருப்பதன் மூலம் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு வாக்களித்த மில்லியன் கணக்கான மக்களை அரசு அவமானப்படுத்துகின்றது. சர்வாதிகார மஹிந்த அரசு மனித உரிமைகள், ஜனநாயகம் ஆகியவற்றை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை என்பது பொன்சேகா விடயத்தில் கூட நிரூபணம் ஆகி உள்ளது.”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக