இதுகுறித்து திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கலி.பூங்குன்றன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தேவையில்லாமல் திராவிடர் கழகத் தலைவரைச் சீண்டுகிறார் வம்புக்கும் இழுக்கிறார். அவ்வப்போது விரக்தி நோயினால் அவர் வார்த்தைகளைக் கொட்டும் பொழுதெல்லாம் அதிர்ச்சி வைத்தியம் உள்பட பல வகையான மருத்துவ உதவிகளை நாம் செய்திருந்தும், குணப்படுத்தப்பட முடியாத அளவுக்கு விஷயம் முற்றிப் போய்விட்டது என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
ஜாதிவாரிக் கணக்கெடுப்புப்பற்றி அவர் பேசியதாக வெளிவந்துள்ள செய்தியாவது: ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் தி.மு.க.வுக்கு உடன்பாடு இல்லாததுபோல பா.ம.க.வினர் கற்பனை செய்து கொண்டு, அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்டு கிளர்ச்சி செய்கிறார்கள் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதில் எவ்வித கற்பனையும் இல்லை. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் தி.மு.க.வுக்கு உடன்பாடு இல்லை என்பதுதான் உண்மை. இதை நாங்கள் பகிரங்கமாக குற்றஞ்சாட்டுகிறோம். திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியைப்போல, நானும் இந்த அரசை எப்போதும் போற்றிப் புகழ்ந்து கொண்டு மட்டும் இருக்க முடியாது.
மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி போராட்டங்களை பா.ம.க. தொடர்ந்து நடத்தும், அதைத்தான் முதல்வர் கருணாநிதியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று சென்னை சைதாப்பேட்டை பொதுக்கூட்டத்தில் ராமதாஸ் பேசியுள்ளார்.
ஜாதிவாரி கணக்கெடுப்பில் தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து முதல்வர் கருணாநிதி தெளிவாகவே தெரிவித்துவிட்டார். மத்திய அமைச்சரவையே ஒப்புக்கொண்டு, அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. இதில் மருத்துவருக்கு என்ன குழப்பம் என்று தெரியவில்லை! தேர்தல் கூட்டணிக் குழப்பம் மேலோங்கிப் போயிருப்பதால், தாம் இருப்பதைக் காட்டிக் கொள்ளவேண்டும் என்ற தடுமாற்றத்தில் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார் போலும்!
கோபாலபுரத்துக்கும், போயஸ் கார்டனுக்கும் இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் அலைவது என்று அலுத்துக் கொண்டிருக்கிறார்.
இதன்மூலம் இனிமேல் இந்த வகையில் அலைய மாட்டார் என்று எவரும் அவசர முடிவுக்கு வந்துவிடவேண்டாம். கடந்த காலத்தில் அவரின் கால்கள் எப்படி எப்படியெல்லாம் அலைந்தன வாய் எப்படி எப்படியெல்லாம் பேசியது என்பது அனைவருக்கும்தான் தெரியுமே!
பிற்படுத்தப்பட்டோர்பற்றிய ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது தமிழ்நாட்டைப் பொறுத்து மட்டும் அமைந்துவிடக் கூடியதல்ல. அகில இந்திய அளவில் தேவைப்படக்கூடியதாகும்.
இட ஒதுக்கீடு 50 சதவிகிதத்துக்குமேல் போகக்கூடாது என்ற ஒரு நிலை உச்சநீதிமன்றத்தின் முட்டுக்கட்டையால் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகையில் எத்தனை சதவிகிதம் என்று காட்டப்படவேண்டிய நெருக்கடி உள்ளது.
ஆழமாகச் சிந்திக்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினையில் அரசியல் கண்ணாமூச்சி விளையாட்டுக்கு இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டிருப்பது மருத்துவர் அவர்கள் ஆரம்பப்பள்ளிக்கூட நிலையிலேயே அரசியலில் இருக்கிறார் என்பதற்கான அடையாளமே!
மத்திய தேர்வாணையம் இட ஒதுக்கீடுப் பிரச்சினையில் மிக மோசமான குளறுபடிகளைச் செய்திருக்கிறது. திறந்த போட்டியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற தாழ்த்தப்பட்டவர்களை, பிற்படுத்தப்பட்டவர்களை தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலுக்குக் கொண்டு சென்று, திறந்த போட்டி என்பது உயர்ஜாதியினருக்கே தாரைவார்ப்பு என்ற நிலை நிலவி வருகிறது. உச்சநீதிமன்றமும் இந்தச் சட்ட விரோத செயலுக்குப் பச்சைக் கொடி காட்டிவிட்டது.
மருத்துவரின் மகன் மத்திய அமைச்சரவையிலே இருந்த போதும் இது நடந்திருக்கிறது.
இந்த உயிர்நாடி, அடிப்படைப் பிரச்சினைகளில் எல்லாம் கடுகளவு கவனம் செலுத்தாதவரா திராவிடர் கழகத் தலைவரை விமர்சிப்பது?
இந்தப் பிரச்சினைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதும் வீதியில் நின்று தொடர்ந்து போராடுவதும் திராவிடர் கழகமும், அதன் தலைவர் வீரமணி அவர்களுமே!
திராவிடர் கழகத் தலைவர் இந்த அரசை எப்போதும் புகழ்கிறார் என்று குற்றஞ்சாற்றுகிறார். புகழ்வது உண்மைதான். எந்த அடிப்படையில்? கருத்தைச் செலுத்திக் கவனிக்க வேண்டாமா?
இந்த ஆட்சியிலேதானே அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை சட்டம் செய்யப்பட்டது! இட ஒதுக்கீடு அடிப்படையில் அனைத்து ஜாதியினருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த ஆட்சியில்தானே தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தரப்பட்டது? தைமுதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று சட்டம் செய்யப்பட்டது பெரியார் நினைவு சமத்துவப்புரங்கள் உண்டாக்கப்பட்டது! தீட்சதர்ப் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் இருந்த சிதம்பரம் கோயில் இந்து அறநிலையத் துறையின்கீழ் கொண்டுவரப்பட்டது எவ்வளவுக் காலத்து ஆதிக்கம் நொறுக்கப்பட்டது வடலூர் வள்ளலாரின் சத்திய ஞானசபையிலிருந்து பார்ப்பன அர்ச்சகன் வெளியேற்றப்பட்டது இந்த ஆட்சியில்தானே!
இந்த ஆட்சியில்தானே மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், அருந்ததியினருக்கு தனி இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது! மருத்துவருக்குத் தேவைப்பட்டால், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தந்த வள்ளல் கலைஞர் என்பார், தனியே நாற்காலி போட்டு இவர்தான் முதலமைச்சர் என்பார்.
தனது சுயநலம் பாதிக்கப்பட்ட நேரத்தில் இதனையே கூட, வேறு மாதிரி திரித்துக் கூறுவார். இரட்டை நாக்கு என்று ஆரியத்தைப்பற்றிதான் அண்ணா எழுதினார்.
அது மருத்துவருக்கும் பொருந்துகிறதே, என்ன செய்ய...?
அரசுகள் வரலாம், போகலாம்; சாலைகள் போடலாம், தெருவிளக்குகள் போடலாம்; ஆனால், இந்த அடிப்படை சமூகக் கலாச்சார கட்டுமானத்தில் கை வைக்க யார் துணிந்தார்கள்? இந்தப் பிரச்சினைகளில் மருத்துவர் ராமதாசு அவர்களின் பங்களிப்பு என்ன? காதுடைந்த ஊசி முனை அளவுக்காவது உண்டா?
இந்த அடிப்படைப் பணிகள் கலைஞர் ஆட்சியில் நடைபெற்று இருப்பதற்கு திராவிடர் கழகமும், அதன் தலைவரின் அழுத்தமான பலமும், ஆதரவும் முக்கியமானவையல்லவா!
திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் ஒரு பார்ப்பன அம்மையார் துணைவேந்தராக நியமிக்கப்பட்டாரே அங்கு பணியாற்றிய சிறப்புத் தகுதி வாய்ந்த தமிழினப் பேராசிரியர்கள் அதிரடியாக வெளியேற்றப்பட்டனரே மருத்துவர் ராமதாஸ் மலைவாசம் சென்றிருந்தாரா? ஒரே ஒருவரி விமர்சனம் உண்டா? திராவிடர் கழகத் தலைவரும், விடுதலையும்தானே வீறுகொண்டு எழுந்தது?
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நடைபாதைக் கோயில்களைத் தமிழ்நாடு அரசு அகற்றவேண்டும்; இல்லையேல் திராவிடர் கழக இளைஞரணியினர் சம்மட்டியோடு புறப்படுவார்கள் என்று அறிவித்தது திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்கள்தானே!
பெரியார், பெரியார் என்று வார்த்தையளவில் கூறினால் மட்டும் போதுமா? அவரின் அடிப்படைக் கொள்கைபிரச்சினைகள் பக்கம் எப்பொழுதாவது மருத்துவர் தலை வைத்துப் படுத்ததுண்டா?
சரி, ராமதாஸ் முதல்வர் கருணாநிதியைப் பற்றி மனம் போன வாக்கில் விமர்சிக்கிறாரே அவரின் அருமை மகனுக்கு கலைஞர் அவர்கள் ஒரு ராஜ்யசபை சீட்டுக் கொடுத்திருந்தால், எல்லாமே தலைகீழாக மாறியிருக்குமே! மாறாக எப்படி எப்படியெல்லாம் துதி பாடியிருப்பார்?!
தமிழ்நாட்டில் மேலவை கொண்டுவரும் சட்டசபை தீர் மானத்துக்கு ஆதரவு கொடுத்ததே... தன் மகனுக்கு மாநிலங் களவையில் இடம் கிடைக்கஎன்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டவர் கொள்கைகள்பற்றியும், சமூகநீதிபற்றியும் பேசலாமா?
சாதாரண மக்கள் மத்தியிலும் மருத்துவர் ராமதாசு நடத்தும் அரசியல் கேலிக்கும், பரிகாசத்துக்கும் ஆளாகிவிட்டதே அதன் விளைவுதானே கடந்த மக்களவைத் தேர்தலின் முடிவுகள்!
அதிலிருந்தும் பாடம் கற்றுக்கொள்ளவில்லையே! இன்னும் கெட்டுப் போகிறேன்& என்ன பந்தயம் கட்டுகிறாய்? என்று சொல் பவரிடம் ஏன் பந்தயம் கட்டவேண்டும்? அவர்தான் தானாகவே தோற்கப் போவதாக முடிவு எடுத்துவிட்டாரே!
அரசியலில் யாரிடம்தான் கொள்கை இருக்கிறது நாங்கள் உள்பட என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தவர், ஓட்டுப் பொறுக்க அவசியம் இல்லாத திராவிடர் கழகத்தோடு மோதவேண்டாம்!
கண்ணாடி கல் மலையோடு மோதினால், நட்டம் கண்ணாடிக்கே தவிர, கல் மலைக்கு அல்ல என்று கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக