இந்தியாவில் மக்கள் சுற்றுலா செல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக இந்திய சுற்றுலாத்துறை வர்த்தக பிரிவு ஆய்வு நடத்தியது. அதில் 2009ம் ஆண்டில் மட்டும் 65 கோடி இந்திய மக்கள் உள் நாட்டுக்குள்ளேயே சுற்றுலா சென்று இருப்பது தெரிகிறது. 2008 ல் 56 கோடியாகவும், 2007 ல் 52 கோடியாகவும் இருந்தன.
இந்தியாவில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் மாநிலமாக ஆந்திரா உள்ளது. இங்கு கடந்த ஆண்டு 15 கோடியே 75 லட்சம் பேர் சுற்றுலா வந்துள்ளனர். திருப்பதிக்கு நாடு முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அதனால் தான் ஆந்திரா முதலிடத்தை பிடித்து உள்ளது.
ஆந்திரா மாநிலத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லுமிடமாக திருப்பதி உள்ளது. விசாகப்பட்டினம் 2வது இடத்தையும், ஐதராபாத் 3 வது இடத்தையும் பிடித்து உள்ளன.
சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் 2 வது மாநிலமாக உத்தரபிரதேசம் உள்ளது. அங்கு கடந்த ஆண்டு 13 கோடியே 48 லட்சம் பேர் வந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தாஜ்மகாலை சுற்றிப் பார்க்க வந்துள்ளனர்.
தமிழ்நாடு 3வது இடத்தில் உள்ளது. இங்கு 11 கோடியே 57 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.
கர்நாடகா 4வது இடத்திலும், ராஜஸ்தான் 5வது இடத்திலும், மராட்டியம் 6வது இடத்திலும் உள்ளன. நாட்டிலேயே அழகான மாநிலங்களாக கருதப்படும் காஷ்மீருக்கு 92 லட்சத்து 35 ஆயிரம் சுற்றுலா பயணிகளும், கேரளாவுக்கு 77 லட்சத்து 89 ஆயிரம் பயணிகளும் மட்டுமே வந்துள்ளனர். கோவாவுக்கு 21 லட்சத்து 27 ஆயிரம் பயணிகளே வந்துள்ளனர்.
தமிழ்நாட்டுக்கு வரும் வடநாட்டு சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் ராமேசுவரம் மற்றும் கன்னியாகுமரியை சுற்றி பார்க்கவே வந்துள்ளனர். தொழில் ரீதியாகவும், மருத்துவம் ரீதியாகவும் சென்னைக்கு அதிகம் பேர் வந்துள்ளனர்.
வெளிநாட்டினர் வருகையில் தமிழ்நாடு தான் நாட்டில் முதல் இடத்தில் உள்ளது. இங்கு 23 லட்சத்து 69 ஆயிரம் வெளிநாட்டினர் வந்துள்ளனர். 2வது இடத்தில் மராட்டியம் உள்ளது. அங்கு 19 லட்சத்து 99 ஆயிரம் பேர் வந்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக