நேற்று சங்கானைப் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: சங்கானை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளான தொல்புரம், அராலி தெற்கு, அராலி கிழக்கு, மற்றும் பகுதிகளில் அநாதரவான பெண்கள் விதவைகளுக்கு உதவி செய்வதற்கான கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிராம அலுவலர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த கிராம அலுவலர்கள் பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொண்டு மேற்படி விடயத்தைத் தெரியப்படுத்தியதையடுத்து இவர் பிரதேச செயலகத்திற்கு வரவழைக்கப்பட்டார். குறித்த நபரது செயற்பாடு தொடர்பாக சந்தேகம் கொண்ட வலிமேற்கு பிரதேச கிராம அலுவலர்கள் இவரது செயற்பாடுகள் தொடர்பில் பல முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டதையடுத்தே சங்கானை பிரதேச செயலக உதவித்திட்டப் பணிப்பாளர் சிவகுமார் தலைமையிலான குழுவினர் குறித்த நபரை கண்காணித்து வந்தனர்.
நேற்று மேற்படி பிரதேசத்தில் கலந்துரையாடலுக்கு வந்திருந்த சமயம் இவரை புத்திசாதுரியமாக இக் குழுவினர் சங்கானை பிரதேச செயலகத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் இவர் குறித்த முறைப்பாடு மானிப்பாய் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தப்பட்டதையடுத்து பொலிஸார் சங்கானை பிரதேச செயலகத்தில் வைத்து இவரைக் கைது செய்தனர்.
குறித்த நபர் அநாதரவான பெண்கள் விதவைகளுக்கு உதவுவதாகத் தெரிவித்து வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள பெண்கள், விதவைகளின் விபரங்களைப் பெற்று அவர்களுக்கு வங்கிகளில் கணக்குகளை ஆரம்பிப்பதாகக்கூறி ஒரு தொகைப் பணத்தை இவர்களிடமிருந்து பெற்றுள்ளார்.
இவர் ஏற்கெனவே இதே வகையான மோசடியிலீடுபட்டு தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். இவ் வழக்கில் இவருக்குப் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக