நாங்கள் எதை எதிர்த்தோம்? ஏன் நிராகரித்தோம்? - மனம் திறக்கிறார்கள் ‘மக்கள் பிரதிநிதிகள்!’
அமெரிக்காவில் நியூயோர்க் நகரிலும், இங்கிலாந்தில் லண்டன் நகரிலும், பிரன்சில் பாரிஸ் நகரிலும் நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசுக்கான இரண்டாவது அமர்வில் என்ன நடந்தது என்பதை எமது சக உறுப்பினர்களுக்கும், மக்களுக்கும் தெளிவு படுத்த வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளதால், நடைபெற்று முடிந்த அத்தனை நிகழ்வுகளையும் எங்கள் மனம் திறந்து உங்கள் அனைவர் முன்பாக வைக்கின்றோம்.
எமது தேசியத் தலைவர் மீது ஆணையாகவும், எங்களது மாவீரர்களின் கனவுகள் மீது ஆணையாகவும், எங்கள் மக்களது அர்ப்பணிப்புக்கள் மீது ஆணையாகவும் நடைறெற நிகழ்வுகளை உண்மையாகவும், நேர்மையாகவும், துணிவோடு இங்கே தெரிவிக்கின்றோம்.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின், ஒரு வருடங்கள் நிறைவுறும் காலப்பகுதியில் 2010 மே 2 ஆம் நாள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல் நடைபெற்றது. தேசியத் தலைவர் அவர்களின் இருப்பை மறுதலிக்கும் கே.பி. குழுவினரின் கைகளில், நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலை முன்னெடுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்தத் தேர்தலில் தமது தரப்பின் கைகள் ஓங்க வேண்டும் என்ற காரணத்திற்காக, இதில் போட்டியிட முன்வந்த தமிழ் உணர்வாளர்களைப் புறக்கணிக்கவே முற்பட்டார்கள். ஆனால், தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் இந்த 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' புதிய பரீட்சார்த்தமான களமாக இருப்பதால், இதற்குப் போட்டியாக இன்னொன்று உருவாகாமல், இந்தத் தேர்தலில் பங்கு பற்றுவதன் மூலம் இந்தப் போர்க் களம் திசை மாறிச் செல்வதைத் தடுத்து நிறுத்தலாம் என்ற நம்பிக்கையுடன் ஜனநாயக முறைமையில் தாம் இந்தத் தேர்தலில் பங்குபற்றுவதைத் தடுக்க முடியாது என்ற வாதத்தை முன் வைத்து, இந்தத் தேர்தலில் போட்டியிடும் உரிமையைப் பெற்றார்கள்.
கடந்த மே 02 ஆம் திகதி நடைபெற்ற இந்தத் தேர்தலின் முடிவு கே.பி. குழுவினருக்கு திருப்தி அளிக்கவில்லை. பிரான்சுக்கான 10 ஆசனங்களில் 5 இடங்களை தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் கைப்பற்றியிருந்தார்கள். இது திரு. வேலும்மயிலும் மனோகரன் தலைமையிலான கே.பி. குழுவினரின் மேலாதிக்கத்திற்கு சவாலாக அமைந்ததனால், தேர்தல் முடிவுகளை எவ்வாறேனும் மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டது. மே 02 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலின் முடிவு 03 ஆம் திகதி அதிகாலை அறிவிக்கப்பட்டு, 05 ஆம் திகதி அதனை உத்தியோக பூர்வமாக அறிவிப்பதாகவும், அன்றைய தினம் சான்றிதழ்களும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் தேர்தலின் முடிவுகளை மாற்றுவதற்கான மந்திராலோசனை நடாத்தப்பட்டு, 05 ஆம் திகதி அரங்கத்தில் வைத்து இரு தேர்தல் முடிவுகளைத் தேர்தல் மோசடிகள் காரணமாகத் தாம் நிராகரிப்பதாக அறிவித்து, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்கள்.
நியாயமற்ற, ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களால் இந்தத் தேர்தல் முடிவுகள் மாற்றப்பட்டு, தமிழ்த் தேசிய உணர்வாளாகளின் பலம் குறைக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொண்ட ஈழநாடு ஆசிரியர் சிவகுரு பாலச்சந்திரன் அவர்கள் ஊடகவியலாளர் என்ற நிலையில் இந்தத் தேர்தலுடன் தொடர்புடைய ஏற்பாடாளர்கள், பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள் எனப் பல தரப்பிடம் விசாரணைகளை மேற்கொண்டதில், இந்த மோசடி நாடகம் கே.பி. குழுவினரால் சோடிக்கப்பட்டது என்பது தெளிவாகப் புரிந்தது.
அனைவரிடமும் வாக்கு மூலங்கள் பெறப்பட்டு, ஒலிப்பதிவு செய்யப்பட்டு, அது எழுத்து வடிவில் அப்போதைய ஏற்பாட்டாளர் திரு. வி. ருத்ரகுமாரன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், இது குறித்து தொலைபேசி மூலம் நேரடியான விளக்கங்களும் கொடுக்கப்பட்டது.
இந்த இரு தேர்தல் தொகுதிகளுக்குமான தேர்தல் முடிவுகள் ஐந்து மாதங்கள் கடந்த நிலையிலும் அறிவிக்கப்படாமலேயே உள்ளது. இது திரு.ருத்ரகுமாரன் அவர்கள்மீது தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் கொண்டிருந்த நம்பிக்கையைத் தவிடுபொடியாக்கியது.
கே.பி. அவர்களால் தனது வெளிநாடுகளுக்கான செயற்பாடுகள் அனைத்தையும் பிரான்சில் உள்ள வேலும்மயிலும் மனோகரன் அவர்களே கட்டுப்படுத்துகிறார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நாடு கடந்த தமிழீழ அரசின் கட்டுப்பாட்டு அதிகாரியாகவும் திரு. மனோகரன் அவர்களே பணியாற்றுவது தமிழ்த் தேசிய உணர்வாளர்களை அச்சத்துள் தள்ளியது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஜி.ரிவி.யில் திரு மனோகரன் வழங்கிய செவ்வியைப் பார்த்தவர்களுக்கு தமிழ்த் தேசிய உணர்வாளர்களது இந்த அச்சத்திற்கான காரணம் நிச்சயமாகப் புரிந்திருக்கும்.
இந்த நிலையில், நாடு கடந்த தமிழீழ அரசுக்கான இரண்டாவது அமர்வுக்கான திகதி அறிவிக்கப்பட்டது. இந்த அமர்வை அமெரிக்காவில் நடாத்துவதாகவும், பாரிசிலும் லண்டனிலும் காணொளித் தொடர்பாடல் மூலம் இணைப்புக்களை உருவாக்கிக் கொள்வதாகவும் முடிவு செய்யப்பட்டது.
135 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டிய நிலையில், இந்த அமர்வில் மொத்தம் 85 பிரதிநிதிகளே கலந்து கொண்டனர். இது அதிர்ச்சியான சந்தேக அலையை தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மத்தியில் உருவாக்கியது. திட்டமிட்ட ரீதியில் கே.பி. குழுவினர் தமக்குச் சாதகமில்லாத இடங்களில் தெரிவுகளை நிராகரித்தும், முடிவுகளை அறிவிக்காமலும், தேர்தல்களை நடாத்தி முடிக்காமலும் மேற்கொண்டிருந்த சதி இந்த இடத்தில் அம்பலமானது.
அரசியல் யாப்பில் முன்வைக்கப்பட்டது போல் பிரதமர் ஒருவரும், பிரதிப் பிரதமர்கள் மூவரும் தெரிவு செய்யப்பட வேண்டும். உலகம் முழுவதும் பரந்த நிலப்பரப்பெங்கும் பரந்து வாழும் புலம்பெயர் தமிழர்களை ஒரே பிரதமர் கட்டுப்படுத்துவதும், அவர்களுக்காகச் செயலாற்றுவதும் முடியாத காரணம் என்பதால் முன்மொழியப்பட்ட இந்த மூன்று பிரதிப் பிரதமர்களையும் மூன்றாகப் பிரிக்கப்பட்ட அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா ஆகிய பகுதி மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுப்பது என்ற இரு முடிவுகளையும் திரு. ருத்ரகுமாரன் அவர்கள் உடனடியாக நிராகரித்தார். ஒரு பிரதிப் பிரதமரை மட்டுமே, அதுவும் அவரைப் பிரதமரே தேர்ந்தெடுப்பார் என்ற வாதம் அவரால் முன் வைக்கப்பட்டது. அத்துடன் 9 பேர் என நிர்ணயிக்கப்பட்ட மந்திரிகளையும் பிரதமரே தேர்ந்தெடுப்பார் என்ற கருத்தும் அவரால் முன் வைக்கப்பட்டது.
இந்த வாதம், தமிழ்த் தேசிய உணர்வாளாகள் மத்தியில் புதிய அச்சங்களை உருவாக்கியது. இதனால், யாப்பின் பரிந்துரைப்படி மூன்று பிரதமரைத் தெரிவு செய்வது என்ற முடிவில் உறுதியாக நின்றனர். இந்த வாதப் பிரதிவாதம் முடிவுக்கு வராத நிலையில், இது குறித்த வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் தமிழ்த் தேசிய உணர்வாளர்களது வாதம் இரண்டு மேலதிக வாக்குக்களால் வெற்றி பெற்றது.
ஆனால், இந்த அபாய நிலையை உணர்ந்து கொண்டு சுதபகரித்துக்கொண்ட கே.பி. குழுவினர் நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும், ஸ்கைப் மூலமாகவும் பல உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டு தான, பேத, தண்டல் மிரட்டல்களால் அவர்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பிரான்சில் நேரடியாகக் கலந்து கொண்ட உறுப்பினர் ஒருவர் இந்த வாக்கெடுப்பில் சுயமாக முடிவெடுத்தது அவர்களது முடிவெடுக்கும் கட்டுப்பாட்டாளராகப் பிரசன்னமாகிய திரு. சுகிந்தன் அவர்கள் தனது மிரட்டல் பார்வையால் கட்டுக்குள் கொண்டவந்த காட்சியை நேரடியாகப் பார்க்க முடிந்தது. அத்துடன், லண்டனிலிருந்து பதவி ஆசை காட்டப்பட்டு வரவழைக்கப்பட்ட பெண் உறுப்பினர் திரு. சுகிந்தன் அவர்களது முற்றான கட்டுப்பாட்டில் இருந்து வாக்களிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். இதற்காகவே, அவர் லண்டனில் நடைபெற்ற அமர்வில் கலந்து கொள்ள விடாமல் பாரிசுக்கு விசேடமாக அழைக்கப்பட்டிருந்தார் என்பதை அவரே ஒப்புக்கொண்டார்.
இந்தக் களநிலை தமிழ்த் தேசிய உணர்வாளாகள் எதிர்பார்க்காதது. இதனால், அடுத்து வந்த அனைத்து வாக்கெடுப்புக்களும் திரு ருத்ரகுமாரன் அவர்களது பெரு விருப்புகளுக்கு இசைவாகத் திருப்பப்பட்டது அவதானிக்கப்பட்டது. இதே வேளை, பாரிஸ் அமர்வில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் விடுதலைப் புலிகள் என்றும், அவர்களை விஷ ஊசி போட்டுக் கொல்ல வேண்டும் என்றும் அங்கு பிரசன்னமாகியிரந்த கே.பி. குழு ஆதரவாளரான உறுப்பினர் ஒருவர் மிரட்டல் விட்ட நிகழ்வும் நடைபெற்றது. இந்த நிலையில், பிரதிப் பிரதமர் மூவரையும் பிரதமரே தெரிவு செய்வார் என்ற முடிவு எடுக்கப்பட்டது. இதன் அபாயத் தன்மை தமிழ்த் தேசிய உணர்வாளாகளால் சபைக்கு எடுத்துரைக்கப்பட்டது.
பிரதமரே மூன்று பிரதமர்களையும், மந்திரிசபையையும் அமைக்கும் அதிகாரத்தைக் கொண்டிருப்பாராயிரந்தால் நாடு கடந்த தமிழீழ அரசு ஜே.ஆரின் எல்லைகளற்ற அதிகாரம் கொண்டவராகிவிடுவார். பின்னர் எந்த சந்தர்ப்பத்திலும் அவர் எடுக்கும் எந்தத் தவறான முடிவையும் மாற்ற முடியாது போய்விடும் என்ற தமது அச்சத்தை தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் பதிவு செய்தார்கள்.
அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே முடிந்தது. மூன்று பிரதி அமைச்சர்களையும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுத்தால், அது பிரதமரின் வேகத்தைக் கட்டுப்படுத்திவிடும் என்ற காரணம் கே.பி. குழு சார்பு உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டது. திரு. ருத்ரகுமாரன் அவர்களே அவர்களுக்கான பிரதமராக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, அதற்காக அந்த உறுப்பினாகள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்ற போதனை ஏற்கனவே செய்யப்பட்டிருந்த பரிதாபகர நிலையையும் புரிந்து கொள்ள முடிந்திருந்தது.
திரு. ருத்ரகுமாரனுடைய வேகம் நாங்கள் அறியாததல்ல. முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து ஒன்றரை வருட காலத்தில், அந்தப் பாவப்பட்ட மக்களுக்காக அவர் எத்தனை துரும்புகளை எடுத்துப் போட்டார் என்பதும், தேர்தல் நடைபெற்று 5 மாதங்களில் எந்தத் தேர்தல் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டார் என்பதையும் நாங்கள் நேராகத் தரிசித்தவர்கள். அவரது இந்த வேகத்தை நத்தை கூட எட்டாது என்பது நாம் புரிந்து கொண்ட காட்சி.
திரு. ருத்ரகுமாரன் அவர்கள் தான் மட்டற்ற அதிகாரங்களைக் கொண்ட அதி உன்னத தலைவராக முனைவதைப் புரிந்து கொண்டாலும், அவரது செயல்திறன் கேள்விக்குறியானதே. அது மட்டுமல்லாமல், இதுவரை எந்தத் துரும்பையும் நகர்த்தாத நாடு கடந்த தமிழீழ அரசை இரண்டாவது அமர்வுகரை நகர்த்தி வருவதற்கு சுமார் 150,000.00 டொலர்கள் செலவிட்டதாகக் கணக்கும் வைத்துள்ளார். இதற்காக உறுப்பினர்கள் அனைவரும் தலா 1500.00 டொலர்கள் செலுத்த வேண்டும் என்ற ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எந்தவித நகர்வையும் மேற்கொள்ளாத நாடு கடந்த தமிழீழ அரசின் ஆறு மாதங்களுக்கான செலவு ஒன்றரை இலட்சம் டொலர் என்றால் (இதில் நாடுகள் வாரியாக உறுப்பினர்கள் செலவழித்ததும், அவர்களது பயண, தங்குமிட, மண்டப, தொலைத்தொடர்பு போன்ற செலவுகள் உள்ளடக்கப்படவில்லை) திரு. ருத்ரகுமாரன் வேகங்கொள்ளப்போகும் எதிர்வரும் காலங்களில் இந்தச் செலவு எத்தனை மடங்குகளாக இருக்கும்? அதை யார் சுமப்பது? என்ற பல கேள்விகளும் எழுவது தவிர்க்க முடியாததாகும்.
அதி உன்னத பிரதமராக அதிகாரபீடத்தில் அமரும் ருத்ரகுமாரன் அவர்கள் இனிமேல் நடாத்தப்போகும் தர்பாரது செலவுகளும் கேள்விகளுக்கு அப்பாற்பட்தாகவே இருக்கும். அது வரியாக மக்களிடம் வசூலிக்கப்படுமா? அல்லது, தமிழீழ மக்களையும் மண்ணையும் மீட்பதற்காகத் துணிவோடு களமிறங்கிய மக்கள் பிரதிநிதிகள் மொட்டையடிக்கப்படப் போகிறார்களா? என்பது பல மில்லியன் டொலர்களுக்குரியதும், பல மில்லியன் கேள்விகளுக்கும் உரியது.
இந்த அதிகாரப் பகிர்வினை திரு. ருத்ரகுமாரனும், அவரைக் கடவுளாகக் காண்பதே தாம் பெற்ற பிறவியின் பயன் என கே.பி. குழுவினரால் மூளைச் சலவை செய்யப்பட்ட பரிதாபத்திற்குரிய உறுப்பினர்களும் நிராகரித்த நிலையில் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் இந்த அபாயகரமான கள நிலமையை முற்றாக மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டார்கள். மூன்றாம் நாள் அமர்வின்போது தமிழ்த் தேசிய உணர்வாளர்களது கைகள் சபையில் ஓங்கும் நிலை ஏற்பட்டது.
தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கும் ஒரு நிகழ்ச்சிநிரலுக்குள் நாடு கடந்த தமிழீழ அரசு செல்வதைத் தடுத்து நிறுத்தும்படி நிலமையைப் புரிந்து கொள்ளக்கூடிய அமர்வில் பங்கேற்காத பலரைத் தொடர்பு கொண்டதனால் அவர்களுக்காக சபையில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றார்கள். இதன்படி, என்ன காரணத்திற்காகவோ அவசரமாக அறிவிக்கப்பட்ட அவுஸ்திரேலிய தேர்தல் முடிவின்படி தெரிவான நான்கு உறுப்பினர்கள் உட்பட்ட 6 பிரதிநிதிகளது வாக்களிக்கும் உரிமை பெறப்பட்டு, அது சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட நிலையில், சபாநாயகரால் அதிர்ச்சியான அறிவிப்பு ஒன்று வெளியாகி, தமிழ்த் தேசிய உணர்வாளாகளை அதிர்ச்சிக்குள் தள்ளியது.
தமது அத்தனை முயற்சிகளும் நியாயமற்ற வகையில் நிராகரிக்கப்பட்டதனால் அதிருப்தியடைந்த தமிழ்த் தேசிய உணர்வு உறுப்பினர்கள் தமது எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள். அவர்களில் ஒருவர் இங்கிருந்த குண்டர்களால் தாக்கப்பட்டதாகவும், சிலரது தலையீட்டால் அவர்களது ஆயுத பிரயோக எத்தனிப்பு தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் சபையில் தெரிவித்துவிட்டு, அச்சம் காரணமாக அங்கிருந்து வெளியேறுவதாக அறிவித்துவிட்டு வெளியேறினார்.
தமிழ்த் தேசிய உணர்வாளர்களில் ஒருவர் தாக்குதல்களுக்குள்ளாக்கப்பட்டு, நீதி கிடைக்காத நிலையில் சபையிலிருந்து வெளியேறியதை அடுத்து அமெரிக்காவின் அமர்வுகளில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அனைவரும் வெளியேறினார்கள்.
இவர்கள் வெளியேறிய செய்தி பாரிஸ் அமர்வுகளில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய உணாவாளர்களது மன நிலையையும் பாதித்தது. ஏற்கனவே, விஷ ஊசி போட்டுக் கொல்ல வேண்டும் என்று கே.பி. குழு ஆதரவு உறுப்பினர் ஒருவரால் அச்சுறுத்தப்பட்ட நிலையில் தொடர்ந்தும் அங்கிருந்து அவர்களது தமிழ்த் தேசிய சிதைவுக் கருத்துக்களுக்கு எதிராக வாக்களிப்பதற்கு அச்சம் கொண்ட காரணத்தால் அவர்களும் அங்கிருந்து வெளியேறினார்கள். தமது பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டே, அவர்கள் விடுதலைப் புலிகளது பெயரையும் உச்சரித்தவிட்டு வெளியேறினார்கள்.
135 மொத்த உறுப்பினர்கள் கலந்துகொண்டு பரிசீலித்து ஏற்றுக்கொள்ளவேண்டிய அரசியல் யாப்பை 48 உறுப்பினாகளை சபையில் வைத்துக்கொண்டு நிறைவேற்றியதும், அதே போல் 48 உறுப்பினர்களால் பிரதமர், சபாநாயகர், பிரதிச் சபாநாயகர் ஆகியோரது தெரிவும், அதற்குப் பின்னரான நியமனங்களும் சட்டப்படியும், நியாயப்படியும், சம்பிரதாயப்படியும், ஒரு நாட்டுக்கான அரசியல் முறைமைப்படியும் செல்லுபடியற்றது என்பதே எமது நிலைப்பாடு.
இது சட்டம் பயின்ற அதி உன்னத தகைமையைக் கைப்பற்றுவதன் மூலம் எம்மையெல்லாம் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள திரு. ருத்ரகுமாரன் அவர்களுக்கும் தெரிந்தே இருக்கும் அல்லது அவரது நகர்வுகளுக்குத் துணையாக நிற்கும் அறிஞர்களும் கல்விமான்களும் கற்றுக்கொடுப்பார்கள் என்று முழுமையாக நம்புகின்றோம்.
எமக்கான நீதியைத் தேடி நாங்கள் எமது மக்கள் மத்தியில் செல்வதற்கு முடிவு செய்துள்ளோம். சாத்தியமான அத்தனை வழிகளாலும் நாடு கடந்த தமிழீழ அரசை நேர் பாதையில் செல்ல நிர்ப்பந்திப்போம். சாத்வீகமான எமது இந்தப் போராட்டங்களும் தோல்விகாணும் பட்சத்தில், திலீபன் வழியில் போராடுவதற்கான ஆத்மீக பலத்தையும் எங்கள் மண்ணில் புதைந்துள்ள மாவீர மாணிக்கங்கள் எமக்கு அளித்துள்ளார்கள் என்ற உண்மைத் தகவலையும் தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளோம்.
எதிரியுடன் போராட வேண்டிய காலத்தில் நாங்கள் எமக்குள் மோதிக்கொள்ளும் அசிங்க நிலையை எம்மால் புரிந்து கொள்ள முடித்தாலும், எமது மக்களுக்கான இந்தப் போர்க்களமும் எதிரியின் நிகழ்ச்சி நிரலுக்குள் சென்று புதைந்துவிடுவதை எம்மால் அனுமதிக்க முடியாது.
பாரிஸ் நகர அமர்வில் கலந்துகொண்ட
தமிழ்த் தேசிய உணர்வாளர்களான
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்
மக்கள் பிரதிநிதிகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக