முதலமைச்சர் கருணாநிதி இன்று (8-10-2010) மத்திய ஜவுளித் துறையின் ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
அவர், ‘’இன்றைக்கு நடைபெறுகின்ற இந்த விழாவிலே கலந்துகொண்டு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். மகிழ்ச்சிக்கு மிக முக்கியமான காரணம், இந்த விழா கைத்தறியையும் இணைத்து முன்னேற்றுகின்ற ஒரு திட்டத்தோடு நடைபெறுகின்ற விழா என்பதாலும், இந்தியாவிலேயே முதன்முதலாக நம்முடைய தமிழகத்திலேதான் இந்தத் திட்டம் தொடங்கப்படுகின்றது என்பதாலும் ஏற்படுகின்ற மகிழ்ச்சியாகும்.
ஒருவர் எனக்கு ஏதாவது வேலை கொடுங்கள் என்று கேட்டபோது, ஒரு பெரியவர் ஒரு ஊசியை எடுத்துக் கொடுத்து, “இந்தா, இந்த ஊசியை வைத்துக் கொண்டு பிழைத்துக் கொள்’’ என்று சொன்னார். அவர் அந்த ஊசியைப் பார்த்தார். ஒரு பக்கத்திலே ஒரு துவாரம் இருந்தது. இருந்தாலும், அந்த ஊசியைப் பயன்படுத்துகிற அறிவு இல்லாத காரணத்தினால், அந்த ஊசியினாலேயே அந்த ஊசியைக் கொடுத்த பெரியவரின் கண்ணைக் குத்தினார். அப்படி ஊசி அவருக்குப் பயன்பட்டது.
இப்படி எவ்வளவோ பேர் இருக்கிறார்கள் நாட்டில். யார் ஊசி கொடுத்தாலும், கொடுத்தவருடைய கண்ணையே குத்துகின்ற ஆட்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் மிக நன்றாக அறிவீர்கள். அப்படி ஊசி கொடுத்தவருடைய கண்ணையே குத்தியவன் அவன்.
இன்னொருவனிடத்திலே ஊசி கிடைத்தது. அவன் உற்று உற்றுப் பார்த்தான் ஊசியை. அந்த ஊசிக்கு ஒரு காது இருந்ததைப் பார்த்தான். அதிலே ஒரு நூலைக் கோர்த்து தைக்க ஆரம்பித்தான். எத்தனையோ உடைகளை தைத்தான். தைத்து, தைத்து அந்த ஒரு ஊசியால் அந்த ஊரிலேயே ஒரு பெரிய வியாபாரியாக ஆனான் என்பது பழைய கதை. (கைதட்டல்)
நம்முடைய கே.கே.எஸ்.எஸ்.ஆர். குறிப்பிட்டதைப் போலவும், நம்முடைய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் எடுத்துக் காட்டியதைப் போலவும், இந்தியாவிலே விவசாயத்திற்கு அடுத்ததாக இருப்பது ஜவுளித் துறை. ஜவுளித் துறைக்கு அடிப்படையாக இருப்பது கைத்தறித் துறை. கைத்தறியாக இருந்தாலும், விசைத்தறியாக இருந்தாலும், இந்தத் துறைதான் அடிப்படையாக உள்ள துறை என்பதை எவரும் மறுத்திட இயலாது.
அதனால்தான், கைத்தறியை வளர்க்க வேண்டும், கைத்தறிக்கு ஒரு செல்வாக்கு பெருக வேண்டும், இந்தியா முழுவதும் கைத்தறிக்கான சந்தை வளர வேண்டுமென்ற எண்ணத்தோடு எங்கள் தலைவர் அறிஞர் அண்ணா அவர்கள், கைத்தறித் துணிகளை மக்கள் வாங்குவதற்கான ஊக்கத்தை ஏற்படுத்த, அவரே முன்னின்று அவரும், எங்களைப் போன்ற கழகத்தினுடைய முன்னணியினரும் முன்னின்று; கைத்தறித் துணிகளைத் தோளிலும், தலையிலும் சுமந்து ஊர் ஊராக விற்று, அப்படி விற்ற காரணத்தால், கைத்தறித் துணிகளை வாங்க வேண்டுமென்ற உணர்வு நம்முடைய மக்களுக்கு ஏற்பட்டு, கைத்தறிக்கு ஒரு செல்வாக்கு வளர்ந்தது.
எப்படி கதரையே கட்டவேண்டும் என்று காங்கிரஸ்காரர்களுக்கு அன்றைக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டு, அந்த உறுதியை மேற்கொண்டு அவர்களும், இன்று வரை கதராடையை அவர்களுடைய உடைகளாக அமைத்திருக்கிறார்களோ, அதைப்போல, இங்கே வாசன் அவர்களைக்கூட பார்க்கிறீர்கள்.
வாசன் அவர்களுடைய தந்தையார் - என்னுடைய அருமை நண்பர் மறைந்த மூப்பனார் அவர்கள் கதராடையோடுதான் வருவார்; அதிலே அவர் அழகாகத் தோன்றுவார். ஏற்கெனவே வசீகரமான மூப்பனார் அவர்களை, கதராடையோடு தோன்றும்போது பார்த்தால், எனக்கே மேலும் மேலும் அவர்மீது பற்றும், பாசமும் ஏற்படும். ஏனென்றால், அவர்களுடைய இயக்கத்தில் எதை உடையாக அணியவேண்டுமென்று கருதுகிறார்களோ, அந்த உடையை அணிந்து வருவார் மூப்பனார் அவர்கள். அவருடைய செல்வன் நம்முடைய வாசன் அவர்களும், எப்போதும் அதே உடையில் வருகிறார்.
இங்கே பரிதி இளம்வழுதி சொன்னார். ஒரு கோரிக்கை வைத்தார். என்ன கோரிக்கை என்றால், நானும், நம்முடைய தயாநிதி மாறனும் நிறைவேற்ற வேண்டுமென்று கைத்தறி நெசவாளர்களுக்கென்று ஒரு கோரிக்கை வைத்தார்.
நான் அவருக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். “தயவு செய்து இனிமேல் நீ தொடர்ந்து கைத்தறியையே கட்டு’’ என்ற ஒரு கோரிக்கையை (பலத்த சிரிப்பு) நான் அவருக்கு வைக்கிறேன். வாய்ச்சொல் மாத்திரம் போதாது. எதையும் நடைமுறைப்படுத்த வேண்டுமேயானால், செயல்படுத்த வேண்டுமேயானால், அதன்படி நாம் நடந்து காட்ட வேண்டும். கேட்டால் சொல்வார்.
“நான் வேட்டி கட்டினால்தானே கைத்தறியை உடுத்த முடியும். பழைய காலத்தில் சட்டசபையில் என்னுடைய வேட்டிக்கே ஆபத்து வந்த காரணத்தினால்தான், (சிரிப்பு)
நான் இந்த பேண்ட் போட ஆரம்பித்தேன்’’ என்று சொல்லக்கூடும். இப்போது அந்த ஆபத்து இல்லாத காலத்தில் கூட ஏன் அதையே கடைபிடிக்க வேண்டும். ஆக, ஆபத்து இல்லாத காலத்தில் கைத்தறி கட்டினால் பரவாயில்லை என்ற உறுதி, உடையிலே கூட என்ன உறுதி; மற்றோர் - அனைவரும் வியப்படைந்து பாராட்டுகின்ற, போற்றுகின்ற முறையிலே நான் இந்த விழாவில் நம்முடைய தோழர்கள் மாத்திரமல்ல.
தமிழர்கள் அனைவருமே, கைத்தறியாளர்களும் தமிழர்கள்தான்; அவர்களுடைய வாழ்வும் நம்முடைய வாழ்வுதான் - அந்த வாழ்வு சிறக்க அனைவரும் கைத்தறி ஆடையைப் பயன்படுத்தி, அவர்களுக்கு வாழ்வு அளிப்போம் என்ற உறுதியை இதுபோன்ற விழாக்களிலே மேற்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டு; மத்திய அரசின் மூலமாகப் போடப்பட்டுள்ள இந்தத் திட்டம் - அந்தத் திட்டத்திற்குத் துணையாக தமிழக அரசும் இருக்கிறது.
இன்னும் சொல்லப்போனால், இந்தப் பயிற்சி பெறுகின்ற ஒவ்வொருவருக்கும், 2000 ரூபாய் ஊக்கத் தொகையாக தமிழக அரசு வழங்கவுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே, இதிலே தமிழகம், மத்திய சர்க்கார் என்றெல்லாம் பிரித்துப் பார்க்காமல், பிரித்துப் பார்ப்பவர்கள் பார்த்துக் கொண்டேயிருக்கட்டும்; ஒன்றாக இருக்கும் நாம், ஒன்றாகவே பார்ப்போம் என்று கூறி இந்த அருமையான விழாவை ஏற்பாடு செய்த தம்பி தயாநிதி மாறனுக்கும், இதிலே கலந்து கொண்டவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களையும், வணக்கத்தையும் தெரிவித்து விடைபெறுகின்றேன், வணக்கம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக