ஞாயிறு, 9 ஜூன், 2019

டி.ஆர்.பாலுவுடன், பா.ஜ., மந்திரிகள் சந்திப்பு.. மத்திய அரசில் சேர அழைப்பு?

தினமலர் : லோக்சபா, தி.மு.க., குழு தலைவர், டி.ஆர்.பாலுவை, மத்திய பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, இணை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர்.
அப்போது, ஆறு மாதம் கழித்து, தி.மு.க., விரும்பினால், மத்திய அமைச்சரவையில் இடம் பெறலாம் என, அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.அதற்கு, டி.ஆர்.பாலு, 'இது கட்சியின் கொள்கை முடிவு. இது தொடர்பான முடிவை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தான் எடுக்க வேண்டும்' எனக் கூறியதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய லோக்சபாவின் முதல் கூட்டத்தொடர், வரும், 17ல் துவங்கி, 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. கூட்டத்தொடரின் முதல் நாளன்று, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட, எம்.பி.,க்கள் அனைவரும் பதவி ஏற்க உள்ளனர். ஆலோசனைவரும், 19ம் தேதி, சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்; 20ம் தேதி, ஜனாதி பதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்துகிறார்.
ஜூலை, 4ம் தேதி, பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
5ம் தேதி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.இந்நிலையில், லோக்சபா கூட்டத்தொடரில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து, எதிர்க்கட்சிகளிடம் ஆலோசனை கேட்கும் வகையில், பார்லி மென்ட் விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி. இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் ஆகியோர், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், லோக்சபா, தி.மு.க., குழு தலைவர், டி.ஆர்.பாலுவை சந்தித்து, அவர்களின் கருத்துகளையும், ஆலோசனைகளையும் கேட்டுள்ளனர்.

அப்போது, ஆறு மாதம் கழித்து, மத்திய அமைச்சரவையில், தி.மு.க., இடம் பெறுவது குறித்தும், டி.ஆர்.பாலுவிடம், மத்திய அமைச்சர்கள் ஆலோசனை நடத்திய தகவல் வெளியாகி உள்ளது.

அறிக்கை

இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:லோக்சபா தேர்தல் தோல்விக்கு பின், அ.தி.மு.க., மேலிடம் மீது, பா.ஜ., கடும் அதிருப்தி அடைந்துள்ளது. 'பிரசாரத்தில், மத்திய அரசின் சாதனைகளையும், பிரதமர் மோடியையும் முன்னிலைப்படுத்தாமல், அ.தி.மு.க., மேலிடம் செயல்பட்டதால் தான், படுதோல்வி ஏற்பட்டது' என, பா.ஜ., மேலிடத்திற்கு, மத்திய உளவுத் துறை அறிக்கை அளித்துள்ளது.
கடந்த, 2004 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., வுடன் கூட்டணி அமைத்தும், தமிழகத்தில், பா.ஜ., வெற்றி பெறவில்லை. 2009, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க, ஜெயலலிதா விரும்பவில்லை.தற்போதைய லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., உடன் கூட்டணி அமைத்தும், பா.ஜ.,வுக்கு எந்த லாபமும் இல்லை.

எனவே, அடுத்த லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் கணிசமான பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என, பா.ஜ., மேலிடம் கருதுகிறது. அதனால், கூட்டணியை மாற்றி அமைக்க, பா.ஜ., மேலிடம் விரும்புகிறது.இந்த சூழலில் தான், டி.ஆர்.பாலுவை, மத்திய அமைச்சர்கள் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது, டி.ஆர்.பாலுவிடம், பிரகலாத் ஜோஷி கூறுகையில், 'லோக்சபாவில், தி.மு.க., மூன்றாவது பெரிய கட்சி. அமைச்சரவையில், தி.மு. க.,வுக்கு நீண்ட நெடிய அனுபவம் உண்டு.

'எனவே, தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், தி.மு.க., விரும்பினால், ஆறு மாதம் கழித்து, மத்திய அமைச்சரவையில் சேரலாம்' எனக் கூறியுள்ளார்.அதற்கு, டி.ஆர்.பாலு, 'இது கட்சியின் கொள்கை முடிவு. இது தொடர்பான முடிவை, ஸ்டாலின் தான் எடுக்க வேண்டும். என்னால், எந்த முடிவும் தெரிவிக்க முடியாது' என, கூறியுள்ளார்.இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் கூறின.

- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை: