ஞாயிறு, 22 அக்டோபர், 2017

தமிழக காங்கிரஸ் தலைவராக கார்த்தி சிதம்பரமா?


தமிழக காங்கிரஸில் ப.சி. போட்ட பட்டாசு!மின்னம்பலம் : காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிப் பூசல் மீண்டும் தீவிரமாகியிருக்கிறது. தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் பொறுப்பேற்று ஒரு வருடம் பூர்த்தியாகி சில நாள்களே கடந்த நிலையில் தீபாவளியை ஒட்டி, ‘திருநாவுக்கரசர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்’ என்று ஒரு புகைச்சல் பரவியது. ஆனால், உடனே அதை தனது பேட்டி மூலம் ஊதி அணைத்தார் திருநாவுக்கரசர்.
“நான் டெல்லி சென்று ராகுல் காந்தியைப் பார்த்துவிட்டு வந்தேன். அதற்குள் இந்த வதந்தியை யார் கிளப்பிவிட்டது?” என்று நிருபர்களிடமே கேட்டார் திருநாவுக்கரசர்.
இதன் பின்னணி பற்றி காங்கிரஸ் வட்டாரங்களில் பேசியபோதுதான் தீபாவளியை ஒட்டி ப.சிதம்பரம் போட்ட பட்டாசு பற்றி விளக்கத் தொடங்கினார்கள்.

“இந்த மாத இறுதியிலோ, அடுத்த மாதத் தொடக்கத்திலோ காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக ராகுல் காந்தி வந்துவிடுவார். அவர் கட்சியின் தலைமைப் பொறுப்பேற்றதும் கட்சியில் பல மாற்றங்களை செய்ய இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் தேர்தலில் திருநாவுக்கரசர் முறைகேடுகள் செய்ததாக ராகுல் காந்தியிடம் ப.சிதம்பரமும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் புகார் செய்திருக்கிறார்கள். திருநாவுக்கரசர் தனது ஆதரவாளர்களுக்கே பெரும்பாலான இடங்களில் பிசிசி உறுப்பினர் பதவி கொடுத்திருப்பதாகவும், பல பாரம்பர்ய காங்கிரஸ்காரர்கள், முன்னாள் எம்.பிக்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் புகாரில் தெரிவித்துள்ளனர். மேலும் கடலூர், திருவாரூர், நெல்லை, சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பிசிசி உறுப்பினர்கள் தேர்வே இன்னும் நடக்கவில்லை என்றும் அதில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில் தீபாவளிக்கு முதல் நாள், இளங்கோவனை தனது சென்னை இல்லத்துக்கு அழைத்தார் ப.சிதம்பரம். இருவரும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தனர். தீபாவளி முடிந்ததும் அக்டோபர் 20ஆம் தேதி திருநாவுக்கரசரைத் தொடர்புகொண்டு தம் இல்லத்துக்கு அழைத்தார் ப.சி. திருநாவுக்கரசர் அங்கே சென்றபோது ப.சி. வீட்டில் தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், கிருஷ்ணசாமி, வசந்தகுமார் உள்ளிட்டோர் இருந்தனர். தீபாவளியை ஒட்டிதான் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார் ப.சி.
பொதுவாக பேசிக்கொண்டிருந்த ப.சி. பேச்சுவாக்கில், ‘ராகுல் காந்தி தலைவரான பிறகு எல்லா மாநிலத்திலேயும் ஐம்பது வயதுக்குக் குறைஞ்சவங்களைதான் தலைவரா நியமிக்கப் போறாங்கன்னு ஒரு பேச்சு டெல்லியில ஓடிக்கிட்டிருக்கே... இதைப் பத்தி கேள்விப்பட்டீங்களா? அப்படி வந்தா தமிழ்நாட்டுல ஐம்பது வயசுக்குள்ள அப்படி ஒரு திறமையான, செல்வாக்குள்ள, சமாளிக்கக் கூடியவர் யார் இருக்காங்க?’ என்று கேட்டிருக்கிறார்.
இதைக் கேட்டதும் திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்களுக்கு முகம் சிறுத்துப் போனது. ப.சி. தனது மகன் கார்த்தி சிதம்பரத்தைதான் சொல்லாமல் சொல்லி, அதை மற்றவர்கள் வாயில் இருந்து வரவைக்கப் பார்க்கிறாரோ என்று நினைத்தனர் அவர்கள். பதிலேதும் சொல்லாமல் மெல்ல மெல்ல கிளம்பினர்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம் தீபாவளிக்கு முதல் நாளே இதே கேள்வியைக் கேட்டிருக்கிறாராம் ப.சிதம்பரம். ஆனால், இளங்கோவன் இப்போதைக்கு அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் பேனலில் இடம்பெறும் வாய்ப்பில் இருக்கிறார். இந்த நேரத்தில் ஏதாவது செய்து தனது வாய்ப்பை அவர் இழக்க விரும்பவில்லை. அதனால் அவர் ப.சி. கேட்டதற்குப் பதிலேதும் சொல்லாமல் போய்விட்டார்.

கார்த்தி இப்போது வழக்குகளில் சிக்கியிருக்கும் நிலையில் அப்படி ஒரு வாய்ப்பைக் கொடுக்க ராகுல் விரும்புவாரா என்றும் தலைவர்களே பேசிக் கொள்கிறார்கள்” என்று முடித்தனர் நம்மிடம் பேசிய காங்கிரஸார்.
ராகுல் காந்தி தலைவராகப் பொறுப்பேற்றதும் ஐம்பது வயதுக்கு உட்பட்டவர்களைதான் மாநிலத் தலைவராக நியமிக்கப் போகிறார் என்பதும், அதற்காக தன் மகன் கார்த்தியை ப.சி. தயார் செய்வதும்தான் இப்போது தமிழக காங்கிரஸுக்குள் தீபாவளி முடிந்தும் பட்டாசாக வெடித்துக்கொண்டிருக்கிறது.
- ஆரா

கருத்துகள் இல்லை: