திங்கள், 23 அக்டோபர், 2017

அமெரிக்கா.. காணமல் போன இந்திய குழந்தை சடலமாக மீட்பு


dinamani :ஹூஸ்டன்: அமெரிக்காவில், சிறு குழந்தையின் உடலை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர். அது, 2 வாரங்களுக்கு முன்பு காணாமல் போன 3 வயது இந்தியக் குழந்தையின் உடலாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது.< அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இந்தியத் தம்பதியரால் பிகாரில் இருந்து தத்தெடுத்துக் கொள்ளப்பட்ட 3 வயது குழந்தை ஷெரின் 2 வாரங்களுக்கு முன்பு மாயமானார். இந்த நிலையில், காணாமல் போன குழந்தையின் வீட்டுக்கு அரை மைல் தொலைவில் ஒரு குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டிருப்பதாக ரிச்சர்ட்சன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அந்த உடல், மாயமான ஷெரினின் உடலாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும், அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளனர்.

 கல்வெர்ட் பெனீத் சாலையில் மோப்ப நாயின் உதவியோடு காவல்துறையினர் நடத்திய சோதனையில், குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. எனினும், குழந்தை எப்படி இறந்தது என்பது குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை.

டெக்ஸாஸ் மாகாணத்தின் ரிச்சர்ட்சன் நகரில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த வெஸ்லி மாத்யூஸ், அவரது மனைவி சினி மாத்யூஸ் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள், பிகார் மாநிலம், நாளந்தாவில் உள்ள அரசு சாரா அமைப்பு ஒன்றிலிருந்து கைக் குழந்தையை கடந்த ஆண்டு தத்தெடுத்துக் கொண்டு அமெரிக்கா சென்றனர்.
இந்நிலையில், அந்தக் குழந்தை கடந்த 7-ஆம் தேதியிலிருந்து காணவில்லை. இரண்டு வாரங்கள் ஆகியும் அந்நாட்டு போலீஸாரால் குழந்தையைக் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது.
இது தொடர்பாக தந்தை வெஸ்லி மாத்யூஸிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, பால் குடிக்க மறுத்ததை அடுத்து அதிகாலை 3 மணிக்கு வீட்டுக்கு வெளியே குழந்தையை விட்டுவிட்டதாக அவர் தெரிவித்தார்.
அந்த சமயத்தில் தாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததாக சினி மாத்யூஸ் தெரிவித்தார்.
வெஸ்லி மீது சந்தேகம் எழுந்ததை அடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர். பிறகு அவர் ஜாமீனில் வெளிவந்தார்.
அவர்களது வீட்டிலிருந்து பல்வேறு பொருள்களை காவல்துறையினர் கைப்பற்றியிருந்தனர். அவர்களது காரிலிருந்தும் சில பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வீட்டுக்கு வெளியே நிறுத்திவைக்கப்பட்டிருந்த அவர்களுக்குச் சொந்தமான கார் ஒன்று, குழந்தை காணாமல்போன அன்றைய தினம் காலை 4 மணியிலிருந்து 5 மணி வரை வெளியே இல்லை. இது தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், வீட்டுக்கு மிக அருகே குழந்தையின் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: