திங்கள், 28 ஆகஸ்ட், 2017

ஸ்டாலின்: அவர்களாக கவிழ்ந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான  மு.க.ஸ்டாலின் இன்று (27-082017) திருவாரூரில் நடைபெற்ற மறைந்த முன்னாள் மாவட்ட கழக செயலாளர் கலைசெல்வம் இல்லத் திருமணவிழாவில் பங்கேற்று, மணமக்கள் கயல்விழி – விஜய் ஆனந்த் ஆகியோரை வாழ்த்தி, ஆற்றிய உரை விவரம்:
மணவிழா நிகழ்ச்சிக்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தி உரையாற்றி அமர்ந்திருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் அருமை நண்பர் டி.ஆர்.பாலு அவர்களே, கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா அவர்களே, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களே, இந்திய கம்ப்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வருகை தந்து வாழ்த்தி அமர்ந்திருக்கும் அன்பிற்குரிய அண்ணன் பழனிசாமி அவர்களே, மதிப்பிற்குரிய சிவபுண்ணியம் அவர்களே, செல்வராஜ் அவர்களே மற்றும் மேடையில் அமர்ந்துள்ள முன்னாள், இந்நாள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களே, மாவட்ட கழக, பகுதி கழக, வட்ட கிளைக் கழக செயலாளர்களே, கழக முன்னோடிகளே, அன்புக்குரிய பெரியோர்களே, தாய்மார்களே, மணக்கோலம் பூண்டுள்ள மணமக்களே, மணமக்களின் பெற்றோர், உற்றார், உறவினர்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்.
மறைந்தும் மறையாமல் நமது நெஞ்செமெல்லாம் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நம்முடைய இனிய சகோதரர் பூண்டி கலைசெல்வம் அவர்களின் அருமை மகள் கயல்விழி அவர்களுக்கும், கும்பகோணம் பகுதியைச் சார்ந்த ஆனந்தராஜ் - விஜயலட்சுமி ஆகியோரின் மகன் விஜய் ஆன்ந்த் அவர்களுக்கும் நம்முடைய அன்பான வாழ்த்துகளோடு மணவிழா நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு தலைமைப் பொறுப்பேற்று மணவிழாவை நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. நியாயமாக, இந்த மணவிழா நிகழ்ச்சிக்குத் தலைமையேற்கும் வாய்ப்பு, பெரும் வாய்ப்பாக எனக்குக் கிட்டியிருந்தாலும், என்னைப் பொறுத்தவரையில் இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு நான் தான் வரவேற்புரை ஆற்றியிருக்க வேண்டும். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், நான் தான் நன்றியுரை ஆற்றியிருக்க வேண்டும். ஆனால், எல்லா பொறுப்புகளையும் ஒருவரிடமே தருவது முறையாக இருக்காது எனக் கருதி நம்முடைய கலைவாணன் அவர்கள் மணவிழா நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்கும் வாய்ப்பை எனக்கு வழங்கியிருக்கிறார்.

இங்குப் பேசியவர்கள் அனைவரும், பெரும்பாலும் ஒரு கருத்தை எடுத்துச் சொன்னார்கள். நான் இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு எந்தச் சூழ்நிலையில் வந்திருக்கிறேன் என்று ஆச்சரியத்தோடு எடுத்துச் சொன்னார்கள். நான் வந்ததில் நீங்கள் யாரும் ஆச்சரியப்பட வேண்டிய அவசியமில்லை, வராமல் இருந்திருந்தால் தான் நீங்கள் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும். இன்றைக்கு மாவட்ட கழகத்தினுடைய செயலாளர் கலைவாணன் அழைத்ததால் வந்திருக்கிறேன் என்பது உண்மைதான், மறுக்கவில்லை. ஆனால், அதேநேரத்தில் மறைந்த பூண்டி கலைசெல்வம் அவர்கள் இந்த மாவட்ட கழக செயலாளராக இருந்து, ஒருங்கிணைந்த இந்த மாவட்டத்திற்கு ஆற்றியிருக்கக்க கூடியப் பணிககளை, கழகத்திற்காக செய்தத் தியாகங்களை, பணிகளை ஒட்டுமொத்தமாக எண்ணிப் பார்க்கின்ற நேரத்தில், கழகத்திற்கு வந்த எத்தனையோ சோதனைகளைத் தாண்டி, வேதனைகளைக் கடந்து இன்றைக்கும் கம்பீரமாக நின்றுக் கொண்டிருக்கிறது என்றால், மறைந்த பூண்டி கலைசெல்வம் போன்றவர்களின் அந்த உழைப்புதான் காரணம் என்பதை யாரும் மறுத்திட, மறைத்திட முடியாது.

நீங்கள் அழைப்பிதழின் கடைசிப் பக்கத்தில் போட்டிருக்கக்கூடிய படத்தை பார்த்திருப்பீர்கள். ஏன், நான் ஒவ்வொருமுறை இந்த மாவட்டத்திற்கு வருகை தரும்போதும் அந்த பேனர்கள் வைக்கப்படுவதுண்டு, சுவரொட்டிகள் ஒட்டப்படுவதுண்டு. நான் ஒரு சாரட்டு வண்டியில் உட்கார்ந்துக் கொண்டு, அந்தச் சாரட்டு வண்டியை பூண்டி கலைவாணன் அவர்கள் ஒட்டிவருவது போன்ற அந்தப் படத்தை பார்ப்பதுண்டு, நீங்களும் பார்ப்பதுண்டு. பார்ப்பது மட்டுமல்ல, சாரட்டு வண்டிப் பயணத்தை அனுபவித்த பெருமையும் எனக்குண்டு. இன்னும் என் மனதில் ஆழமாக பதிந்துள்ளது, மறந்துவிடவில்லை.pt;">அவர் இந்தக் கொறடாச்சேரி பகுதியின் எல்லையில் இருந்து என்னை பொதுக்கூட்டத்திற்காக ஊர்வலமாக அழைத்து வந்தார். அப்படி அழைத்து வந்தநேரத்தில், ஒரு சாரட்டு வண்டியை நிறுத்தி அதில் நான் ஏற வேண்டும் என்ற அன்புக் கட்டளையை வழங்கினார். நான் மறுத்தேன். அது தேவையில்லை, ஆடம்பரமாக இருக்கும் என்று திட்டவட்டமாக மறுத்தேன். அவர், “இல்லை, நீங்கள் வந்துதான் ஆக வேண்டும், நீண்ட தூரம் இல்லையென்றாலும், ஒருமுறை உட்கார்ந்துவிட்டு இறங்கிவிடுங்கள். நாங்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஏற்பாடு செய்திருக்கிறோம். நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ நாங்கள் விரும்புகிறோம், இந்தப் பகுதியில் இருக்கும் கழக தோழர்கள் விரும்புகிறார்கள்”, என்று என்னிடத்தில் எடுத்துச்சொல்லி பிடிவாதமாக கட்டாயப்படுத்தி, ஏன், பலவந்தமாகவே அந்த வண்டியில் என்னை ஏற்றி உட்காரவைத்து, அழைத்து வந்த அந்தக் காட்சி, ஒருவேளை நான் அப்போது மறுத்திருந்தால், இப்போது இந்தக் காட்சியைக் காணாமல் போயிருப்பேனோ என்ற எண்ணம் கூட இப்போது எனக்கு ஏற்பட்டிருக்கிறது. அதைதான் இப்போது நான் எண்ணிப் பார்க்கிறேன்.

பூண்டி கலைசெல்வம் அவர்கள் பற்றி இங்கு எல்லோரும் எடுத்துச் சொன்னார்கள், இயக்கத்தின் மீது, தலைவர் கலைஞர் அவர்கள் மீது எவ்வளவு பற்றையும் பாசத்தையும் வைத்திருந்தார் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள், எத்தனையோ சாட்சியங்கள் உண்டு.  அவரது வழிநின்று, அவரது அருமைச் சகோதரர் கலைவாணன் அவர்கள் அந்தப் பணியை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார். அப்படிப்பட்ட நிலையில், இன்றைக்கு இந்த திருமணவிழாவை நம்முடைய செல்வம் அவர்களுடைய மகளுக்கு நம்முடைய கலைவாணன் அவர்கள் இன்று முன்னின்று நடத்துகிறார் என்று சொன்னால், இதை மணவிழா நிகழ்ச்சி என்ற நிலையோடு நிறுத்திவிடாமல், இந்த மணவிழா நிகழ்ச்சி இயக்கத்திற்குப் பயன்பட வேண்டும் என்ற நிலையில், ஒரு மாவட்ட அளவில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநாடு நடைப்பெற்றால் எப்படி நடக்குமோ, அதற்கு ஒப்பாக ஒரு மாநாடு போல் நம்முடைய கலைவாணன் அவர்கள் நடத்திக் கொண்டிருப்பது உள்ளபடியே பாரட்டுக்குரிய ஒன்றாக விளங்குகிறது.

அதுவும் இன்றைக்கு நாட்டில் எப்படிப்பட்ட நிலை இருக்கிறது என்பதையெல்லாம் இங்கு எடுத்துச் சொன்னார்கள். அதுமட்டுமல்ல, அடுத்த முறை நான் வரும்போது இப்படி வராமல், எப்படி வர வேண்டும் என்று சொன்னார்கள். முதலமைச்சராக இருந்தாலும் சரி, ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் சரி, ஆட்சிப் பொறுப்பில் இல்லையென்றாலும் சரி, நான் என்றைக்கும் எப்போதும் உங்களில் ஒருவனாக இருக்கக் கூடியவன். பொறுப்புக்கு வர வேண்டும், பதவிக்கு வர வேண்டும், சிம்மாசனத்தில் அமர வேண்டும் என்ற கொள்கையோடு உருவாக்கப்பட்டதல்ல இந்த இயக்கம். பொறுப்புகள் என்பது, பதவிகள் என்பது மக்களுக்குப் பணியாற்ற, மக்களுக்கு தொண்டாற்ற மட்டுமே.

பேரறிஞர் அண்ணா  இந்த இயக்கத்தை உருவாக்கிய நேரத்தில், “ஏழை – எளிய மக்களுக்காக, விவசாயப் பெருங்குடி மக்களுக்காக, தொழிலாளர் தோழர்களுக்காக, பாட்டாளி பெருமக்களுக்காக, அடித்தளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு பாடுபட வேண்டும், பணியாற்ற வேண்டும் என்ற உணர்வோடுதான் இந்த இயக்கம் உருவாக்கப்படுகிறது”, என்று தெளிவாக எடுத்துச் சொல்லி, இந்த இயக்கத்தை உருவாக்கித் தந்திருக்கிறார். அப்படிப்பட்ட இந்தப் பேரியக்கம் பொறுப்புக்கு வருகிறது என்றால், அந்தப் பொறுப்பைப் பயன்படுத்தி, மக்களால் வழங்கப்படும் அந்தப் பதவிகளைப் பயன்படுத்தி, மக்கள் தொண்டாற்ற, கடமையாற்ற உறுதியெடுக்கும் வகையில் நமது கடமைகளை நாம் தொடர்ந்து ஆற்றி வருகிறோம்.


இன்றைக்கு உள்ள நிலை என்ன? இங்கு பேசியவர்கள் வருங்காலத்தில் என்பது ஒரு மாத காலத்துக்குள் என்று குறிப்பிட்டார்கள். போதாக்குறைக்கு நன்றியுரை ஆற்றிய தம்பி அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் இங்கு பேசியபோது, “எங்களுக்கே தெரியாமல் ஏதோதோ செய்து கொண்டிருக்கிறார், என்னென்னவோ நடந்து கொண்டிருக்கிறது”, என்று ஒரு வார்த்தையை விட்டுச் சென்றுள்ளார். அவர் அப்படிச் சொன்ன காரணத்தினால் இதையும் பேச வேண்டிய அவசியம் வந்து விட்டது. இதை எல்லாம் சொல்லும் காரணத்தால் சில பத்திரிகையாளர்கள் தவறாக புரிந்து கொண்டு தலைப்புச் செய்தியாக வெளியிடுவார்கள். அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, திராவிட முன்னேற்றக் கழகம் ஏதோ சூழ்ச்சி செய்து, சதி வலையைப் பின்னி, இப்படியெல்லாம் எதையும் செய்யவில்லை. தலைவர் கலைஞர் அவர்களைப் பொறுத்தவரையில், திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வராது, மக்களுடைய ஆதரவைப் பெற்றுதான் ஆட்சிக்கு வரும் என்பதை இங்கு அழுத்தம் திருத்தமாக நான் சொல்லிக் கொள்கிறேன். ஆகவே, பத்திரிகையாளர்கள் இதை மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

அவர்களாக கவிழ்ந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. விரைவில் அவர்களாகவே கவிழத்தான் போகிறார்கள். இன்று காலையில், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் திரு. துரைமுருகன் அவர்களின் தலைமையில் நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் மாண்புமிகு ஆளுநர் அவர்களை சந்தித்து விட்டு வந்த செய்தி, இங்கு மேடையில் அமர்ந்திருந்தபோது எங்களுக்கு வந்தது. அவர்களிடத்தில் உறுதி தந்திருந்தாலும், எப்போதும் கவர்னர் உறுதியளிப்பது வழக்கமாக இருந்தாலும், அது நிறைவேற்றப்படுமா என்பது தான் கேள்விக்குறி. எனவே, அது நிறைவேற்றப்படுமா அல்லது நிறைவேற்றப்படாதா என்பது எங்களுக்கு முக்கியமல்ல.<0pt>ஜனநாயகம் காப்பாற்றப்பட்டாக வேண்டும். இல்லையென்றால், அடுத்தகட்டமாக மேதகு ஜனாதிபதி அவர்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை எங்களுக்கு வரும். அவரைச் சந்தித்தும் நியாயம் கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஏற்படும் என்பதை ஒரு எச்சரிக்கையாக நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். மிரட்டவோ, அச்சுறுத்தவோ இதையெல்லாம் சொல்லவில்லை. இன்றைக்கு சின்னாபின்னமாகி உள்ள நாட்டைக் காப்பாற்ற, மக்களைக் காப்பாற்றவே இதையெல்லாம் சொல்கிறோம்.

<0pt>மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்று, அதுவும் 1.1 சதவிகித வாக்கு வித்தியாசத்தின் அடிப்படையில் அந்த ஆட்சி அமைந்தது. அதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், அவருடைய மறைவுக்குப் பிறகு அந்த ஆட்சியின் நிலை என்ன? அந்த நிலை ஏன் ஏற்பட்டது? மக்கள் பணியாற்றுகிறார்களா? இன்றைக்கு அவர்களுக்குள் பதவி மோகம், போட்டி வந்திருக்கிறது என்றால், யார் முதலமைச்சராக இருக்க வேண்டும், யார் தலைமையில் இருக்க வேண்டும் என்றெல்லாம் பிரச்னை எழுந்திருக்கிறது என்றால், அது மக்களுக்குப் பணியாற்ற ஏற்படவில்லை. அடித்து வந்தக் கொள்ளைகளைக் காப்பாற்றிக் கொள்ள, மீண்டும் கொள்ளையடிக்க, தொடர்ந்து ஊழல் செய்யவே. அதையும் தாண்டி, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவற்றினால் ஏற்பட்டுள்ள வழக்குப் பிரச்னைகளில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள, இன்றைக்கு மத்திய அரசிடம் மண்டியிட்டு உள்ள ஒரு மானங்கெட்ட அரசாக ஒரு அரசு தமிழகத்தில் இன்றைக்கு நடைபெறுகிறது என்று சொன்னால், நம்முடைய மாநில உரிமைகள் எல்லாம் பறிக்கப்பட்டுள்ளன.

<0pt>நீட் தேர்வு பிரச்னையில் நமது உரிமை போய்விட்டது. கிராமப்புற, ஏழை – எளிய மாணவர்களின் மருத்துவக் கனவு பறிபோய் விட்டது. இப்படிப்பட்ட நிலையில் உள்ள தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டு இருப்பதால், ஜனநாயகரீதியில் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுகவை சேர்ந்த 19 பேர் ஐந்தாறு நாட்களுக்கு முன்னால் கவர்னரை நேரில் சந்தித்து, ”முதலமைச்சர் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை, எனவே, மெஜாரிட்டியை நிரூபிக்க சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டும், அதற்கு கவர்னர் உரியை வழியை ஏற்படுத்த வேண்டும்”, என்று தனித்தனியாக கடிதம் தந்து விட்டு வந்திருக்கிறார்கள்.

<0pt>அந்த 19 பேருடன் முடிந்ததா என்றால், அதுவுமில்லை. நாள்தோறும் இரண்டு பேர் வேறு அணியில் சேர்ந்தார்கள், ஆதரவு தந்தார்கள் என்று செய்திகள் வருகின்றன. இதற்கிடையில் திமுக சார்பில் நாமும் இந்தப் பிரச்னைகளை எடுத்துச் சொல்லி இருக்கின்றோம். ஆக, மெஜாரிட்டியை இழந்த நிலையில் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.அதனால் தான் ஒரு புதிய பிரச்னையை மேற்கொள்ளும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள். அது என்னவென்றால், தடை செய்யப்பட்ட குட்கா என்ற போதைப்பொருளைப் பயன்படுத்தினால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளது. இந்த நிலையில் கடந்தமுறை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றபோது, காவல்துறை மான்யத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று, பல்வேறு பிரச்னைகளை நான் எடுத்துரைத்த நேரத்தில், “தமிழகத்தில் எங்குப் பார்த்தாலும் குட்கா விற்பனை நடக்கிறது, அதற்கு ஆதாரம் இங்குள்ளது”, என்று சொல்லி, குட்கா பொருட்களை எடுத்து அவையில் காட்டினேன். என்னோடு திமுக உறுப்பினர்கள் பலர் அதனை சட்டமன்றத்தில் எடுத்துக் காட்டினார்கள்.

<0pt>அதில் என்ன தவறு? குட்கா திருட்டுத் தனமாக விற்கப்படுகிறது, அதை பலரும் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள், இதனால் பலருக்கு புற்றுநோய் வருகிறது, அதனால் பலர் இறந்து போகிறார்கள், இளைஞர்கள் அதற்கு அடிமைகளாகும் நிலை உள்ளது, ஆகவே, அதையெல்லாம் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக ஒரு எதிர்க்கட்சித் தலைவர் என்றமுறையில் அதற்கான ஆதாரங்களை எல்லாம் எடுத்துச் சொல்லும் நிலையில், ஜனநாயக நெறிப்படி சட்டமன்றத்தில் சுட்டிக்காட்டினேன். சட்டமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளன்று ஜூலை மாதம் 19 ஆம் தேதியன்று, அந்த குட்கா பொருள் பிரச்னையை நான் எடுத்துக் கூறினேன். அது நடந்து முடிந்து நேற்றோடு 40 நாட்கள் முடிந்து விட்டன.

<0pt>அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? அது தவறென்று அடுத்த நாளோ, மறு நாளோ சொல்லியிருந்தால், ஒரு வாதத்துக்காக நாம் ஏற்கலாம். ஆனால், 40 நாட்கள் கழித்து இப்போது அதைக் கையிலெடுத்துக் கொண்டு, “உரிமைக்குழுவிடம் அனுப்புகிறோம், நடவடிக்கை எடுக்கப்போகிறோம்”, என்று சொல்லி, நாளை அதற்காக ஒரு கூட்டத்தைக் கூட்ட இருக்கிறார்கள். அந்த உரிமைக்குழுவில் நானும் ஒரு உறுப்பினர். திமுகவைச் சேர்ந்த மதிவாணன், பெரிய கருப்பன் என நான்கைந்து பேர் நாம் உறுப்பினர்களாக இருக்கிறோம். எல்லாருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது, ஆனால், எனக்கு அனுப்பவில்லை.இதற்கெல்லாம் என்ன காரணம் என்று கேட்டால், இதற்காக திமுகவைச் சேர்ந்த 10 உறுப்பினர்களை தற்காலிகமாக நீக்கிவிட்டால், அதன் பிறகு, சட்டமன்றத்தைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் நிலை வரும்போது, திமுக உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்க விடாமல் தடுத்து, எடப்பாடி பழனிசாமி அரசு தப்பித்துக் கொள்ளும் என்ற சதி திட்டத்தோடு, இதை முயற்சி செய்கிறார்கள். நான் உறுதியாக, நிச்சயமாக சொல்கிறேன், அது நடக்காது. 

<0pt>சட்டப்படியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தயாராகிக் கொண்டிருக்கிறது.இப்படிப்பட்ட நிலையில் தான் மெஜாரிட்டியை இழந்து விட்ட ஒரு ஆட்சி நடக்கிறது. திருமண விழாவில் இதையெல்லாம் பேசுகிறேனே என்று கூட சிலர் நினைக்கலாம், ஆனால், இதைப் பேசாமல் இருந்தால் தான் என் மீது நீங்கம் கோபம் அடைவீர்கள் என்பதை நான் உணர்ந்து கொண்டுள்ளேன். திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரையில்,  திருமண விழாக்களில் தான் அதிகமான அரசியலை பேசுவது உண்டு, ஏன் தலைவர் கலைஞர் அவர்கள் நெருக்கடி காலத்தில் அரசியலே பேசக்கூடாது என்றிருந்த நேரத்தில், கருத்துகளை எடுத்துச் சொல்வதற்கு அன்றைக்கே திருமணவிழாக்களை பயன்படுத்தி இருக்கிறார். அதில் ஒன்றும் தவறல்ல.<0pt>அந்த நிலையில் இருந்து தான், இந்தக் கருத்துகளை நான் இங்கே எடுத்துச் சொல்லியிருக்கின்றேனே தவிர வேறல்ல. இன்றைக்குப் பூண்டி கலைவாணன் அவர்கள், செல்வம் அவர்கள் விட்டுச் சென்றிருக்கும் இந்தப் பணிகளை சிறப்பாகவும், செல்வம் அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் எந்தளவிற்கு சிறப்பாக நடத்தி இருப்பாரோ அதைவிட பலமடங்கு சிறப்பாக நடத்தியிருக்கிறார். 

<0pt><0pt>அதற்கு முழு காரணம், செல்வம் அவர்களின் முயற்சிகள் தான். மிகவும் அமைதியாக இருப்பார். அதேபோல நம்முடைய கலைவாணன் அவர்களும் பார்ப்பதற்கு அமைதியாக இருப்பார்.ஆனால், நெருங்கிப் பழகுகிறபோது அவர் அமைதியானவரா என்பது பழகுபவர்களுக்கு தெரியும். அதுவேறு. அமைதியாக இருந்தாலும் கழகத்திற்கு வலுசேர்க்கும் வகையில் தான் இன்றைக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இன்னும் பெருமையோடு சொல்ல வேண்டுமென சொன்னால், தலைவர் கலைஞர் அவர்களை இரண்டுமுறை சட்டமன்ற தேர்தலில் வெற்றியடையச் செய்து சட்டமன்றத்திற்கு அனுப்புகிற அந்த பெரும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது.

<0pt>ஒவ்வொரு முறையும் நம்முடைய கலைவாணன் அவர்கள் தலைவர் அவர்களை சந்திக்க வருகின்ற போதெல்லாம், இவர் கேட்கிறாரோ இல்லையோ, நம்முடைய தலைவர் இவரைப் பார்த்து கேட்பார், “என்னுடைய தொகுதி திருவாரூருக்கு எப்போது வர வேண்டும்?”, என கேட்பார். நான் சென்னையில் இருக்கும் போதெல்லாம், காலையிலோ மாலையிலோ ஒருமுறையாவது என்னுடைய கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குச் சென்று வந்துவிடுவேன். பல நேரங்களில் இப்படிப்பட்டச் சுற்றுப்பயணத்தில் இருந்தாலும் வந்தவுடன் தலைவரைக் கூட பார்க்காமல், அறிவாலயத்திற்கு கூட செல்லாமல் தொகுதிக்கு சென்று விடுவேன்.

<0pt>அப்படி போய்விட்டு, தலைவரை சந்திக்க வருவேன், “எங்கே போயிருந்தாய்?”, என கேட்பார். “கொளத்தூர்”, என்பேன். “கொளத்தூரிலேயே நிரந்தரமாக இருக்க முடிவு செய்துவிட்டாயா”, எனக் கேட்பார், அதற்கு நான், “என்றைக்கும் திமுக ஜெயிக்க வேண்டும், உதயசூரியன் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக போவேன்”, என்பேன். உடனே என்னிடத்திலும், நம்முடைய பாலு அவர்களிடத்திலும் கேட்பார், “எப்போது திருவாரூர் போகலாம் என்பார்?”. அதற்கு நான் கூட சொல்வதுண்டு, “இப்போது தானே போய் வந்தீர்கள், உடனே மறுபடியுமா?”, எனக்கேட்க, அதற்குத் தலைவர், “நீ மட்டும் அடிக்கடி கொளத்தூர் போய் வருகிறாயே? நான் போகக்கூடாதா?”, என்பார்.
ஏதோ சட்டமன்ற உறுப்பினர் என்ற நிலையில் மட்டும் இல்லாமல், அவரை ஈன்றெடுத்த மண் இந்த மண் என்றப் பாசத்தோடு தலைவர் கலைஞர் இருக்கிறார் எனச் சொன்னால், அவருடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து என்னென்ன செய்ய வேண்டுமென கண்ணும் கருத்துமாக பார்ப்பதுவரை, இந்தத் திருவாரூர் தொகுதியோடு நெருக்கமாக இருப்பார். இன்றைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் வர இயலவில்லை எனச் சொன்னால், நான் திருவாரூர் வருகிறபோது, தலைவர் அவர்கள் இருந்து என்ன பணிகளெல்லாம் செய்வாரோ, அந்தப் பணிகளையெல்லாம் நானே நேரடியாக சென்று ஆய்வு செய்து, மேற்கொண்டு வருகிறேன் என்பது உங்களுக்கு தெரியும். அந்தப் பாச உணர்வோடு தான், இந்த மணவிழா நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருக்கிறேன்.
நிச்சயமாக சொல்கிறேன், தலைவர் கலைஞர் மட்டும் வெளியில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழலில் இருந்திருந்தார் எனச் சொன்னால், நம்முடைய கலைவாணன் அழைக்காமலேயே இந்த நிகழ்ச்சியில் நிச்சயம் கலந்து கொண்டிருப்பார். அவர் வரமுடியாத காரணத்தால், அவர் சார்பிலே அவர் இருந்து என்னென்ன வாழ்த்துவாரோ, அதே உணர்ச்சியோடு வாழ்த்தும் வாய்ப்பு எங்களுக்கு இல்லையென சொன்னாலும், இன்றைக்கு மணக்கோலம் பூண்டிருக்கும் மணமக்கள் எல்லா நன்மைகளையும் பெற்று, சிறப்போடு வாழ்வாங்கு வாழ்ந்து, வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்ப்பவர்களாக, புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருப்பது போல, ‘வீட்டிற்கு விளக்காக, நாட்டிற்கு தொண்டர்களாக இருந்து வாழுங்கள்’, என மனதார வாழ்த்தி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.’’ நக்கீரன்

கருத்துகள் இல்லை: