ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

ராம் ரஹீம் வழக்கு: சிறைக்கு செல்லும் நீதிபதி!


ராம் ரஹீம் வழக்கு: சிறைக்கு செல்லும் நீதிபதி!மின்னம்பலம் : பாலியல் பலாத்கார வழக்கில் ராம் ரஹீமிற்கான தண்டனை விவரத்தை நாளை (ஆகஸ்ட் 28 ) சிறை வளாகத்திற்கே சென்று நீதிபதி அறிவிக்கவுள்ளார்
ஹரியானாவின் சிர்சா மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். இவருக்கு லட்சக்கணக்கான சீடர்கள் உள்ளனர். கடந்த 1999-ஆம் ஆண்டு ஆசிரமத்தில் தங்கியிருந்த இரு பெண்களை அவர் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து ரஹீம் சிங் மீது வழக்குப் பதிவு செய்து சிபிஐ விசாரித்து வந்தது.
இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், ராம் ரஹீம் குற்றவாளி என்றும் அவருக்கான தண்டனை விவரம் ஆகஸ்ட் 28ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் சிபிஐ சிறப்பு நீதிபதி அறிவித்தார். இதையடுத்து, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் வன்முறை வெடித்தது. ஏராளமான பொது மற்றும் தனியார் சொத்துக்கள் நாசமாக்கப்பட்டன.


இந்த வன்முறையில் 36 பேர் கொல்லப்பட்டனர். இதனால் வட மாநிலங்களில் இன்னும் அசாதாரண நிலை நிலவி வருகிறது. இந்நிலையில், ராம் ரஹீமிற்கான தண்டனை விவரங்கள் நாளை (ஆகஸ்ட் 28) அறிவிக்கப்படவுள்ளன. அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காக ராம் ரஹீம் அடைக்கப்பட்டுள்ள ரோதக் சிறையிலேயே தண்டனை விவரம் அறிவிக்கப்படவுள்ளது.
இதற்காக சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஜகதீப் சிங் ஹெலிகாப்டர் மூலம் ரோதக் சிறைக்கு செல்கிறார். இதையடுத்து, ஹரியானாவின் பஞ்ச்குலா, ரோதக், கைதால், அம்பலா பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிர்சா மற்றும் அம்பலா பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிர்சாவில் சாமியாரின் ஆசிரமம் உள்ள பகுதியில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. ஆசிரமத்தின் உள் இருப்பவர்களை வெளியேற்றும் முயற்சியில் போலீசார் மற்றும் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே தேரா ஆசிரமங்களில் நடத்திய சோதனையில் கட்டைகள், இரும்பு ராடுகள், பெட்ரோல் குண்டு தயாரிப்பதற்கான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் கார் ஒன்றில் இருந்து ஏ.கே. 47 துப்பாக்கிக் கைப்பற்றப்பட்டுள்ளது. ராம் ரஹீம் அடைக்கப்பட்டுள்ள சனோரியா சிறை வளாகத்தைச் சுற்றி பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துணை ராணுவத்தின் 28 படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளன. எல்லை பாதுகாப்பு படை மற்றும் ஹரியானா போலீசாரும் சிறைக்கு வெளியில் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: