கீதை - யாருக்குப் புனித நூல் என்னும் என் கட்டுரையைத் தொடர்ந்தும்,
கீதை குறித்த என் உரையைத் தொடர்ந்தும், நம் வலைப்பூவில் ஒரு நீண்ட விவாதம் நடைபெற்றது.
அதில் நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர் என்றாலும், வினோத், கணேஷ்வேல், விருபாக்ஷன் ஆகிய மூவரும் குறிப்பிடத் தக்கவர்கள். அறிவார்ந்த முறையிலும்,
நாகரிகமாகவும் தங்கள் வாதங்களை முன்வைத்த அம்மூவருக்கும் முதலில் என் நன்றியையும்,
பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.கிருஷ்ணதாஸ் என்று ஒரு நண்பர் இடையில் தன் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
கீழ்த்தரமான, குறுக்குப்புத்தி கொண்டவன் என்று என் மீது தனி மனிதத் தாக்குதலை அவர்
தொடுத்துள்ளார்.
இவை போன்ற பதிவுகள், தரமற்றவை என்பதை நண்பர்கள் உணர வேண்டும். ஆயிரக்கணக்கான கீதையின் பாடல்களில்,ஏதோ ஒன்றிரண்டை எடுத்துக் கொண்டு விவாதிக்க கூடாது என்று அவர் கூறுகின்றார். ஒரு நூலில் உள்ள எல்லாப் பாடல்களும் முதன்மையானவையே என்பது என் கருத்து. அத்துடன், கீதையில் ஆயிரக்கணக்கான பாடல்கள் இல்லை, 700 பாடல்கள்தாம் உள்ளன.
இவை போன்ற பதிவுகள், தரமற்றவை என்பதை நண்பர்கள் உணர வேண்டும். ஆயிரக்கணக்கான கீதையின் பாடல்களில்,ஏதோ ஒன்றிரண்டை எடுத்துக் கொண்டு விவாதிக்க கூடாது என்று அவர் கூறுகின்றார். ஒரு நூலில் உள்ள எல்லாப் பாடல்களும் முதன்மையானவையே என்பது என் கருத்து. அத்துடன், கீதையில் ஆயிரக்கணக்கான பாடல்கள் இல்லை, 700 பாடல்கள்தாம் உள்ளன.
இவ்விவாதத்தில் கூடுதலாக இடம்பெற்றுள்ள கீதையின் பகுதிகள் மூன்று!.
(1) இயல் 4, பாடல் 13
(2) இயல் 9, பாடல் 32
(3)இயல் 18, பாடல்கள் 41-47.
இவற்றுள், 18ஆம் இயலில், குணத்தின் (சுபாவம்) அடிப்படையில்தான் வருணங்கள் பிரிக்கப் பட்டுள்ளனவே தவிர, பிறப்பின் அடிப்படை என்று கூறவே
இல்லை என்பது நண்பர் வினோத்தின் வாதம். அதற்கு ஆதாரமாக, சுவாமி பிரபுபாதா மற்றும் சமற்கிருத
வல்லுனர்களின் மொழிபெயர்ப்பை அவர் காட்டியுள்ளார். தான் காட்டியுள்ள மேற்கோள் எந்த
மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டது என்பதை சுபவீ கூற வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.
நான் மேற்கோள் காட்டியுள்ள மொழிபெயர்ப்பு, பிரேம்நாத் பசாஜ் எழுதியுள்ள
'இந்திய வரலாற்றில் பகவத் கீதை' என்னும் நூலில் உள்ளது. பிரேம்நாத் பசாஜ் காஷ்மீர்
இந்து. சமற்கிருதப் புலமை மிகுந்தவர். எனினும், வினோத் எழுப்பியுள்ள வினாவை மனத்தில்
கொண்டு, பிரபுபாதா உள்ளிட்ட பலரின் மொழிபெயர்ப்புகளையும் நான் படித்தேன். அவை அனைத்தும்,
வினோத் கூறியுள்ளதை ஒத்தே இருக்கின்றன. பொதுவுடமைச் சிந்தனையாளரான தோழர் ஜவஹரும் என் மொழிபெயர்ப்பு தவறானது
என்பதைச் சுட்டிக் காட்டினார். எனவே, பல தரவுகளையும் சரி பார்க்காமல் ஒரு குறிப்பிட்ட
மொழிபெயர்ப்பை வெளியிட்டமைக்கு என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டு என் மன்னிப்பைக்
கோருகின்றேன். தெளிவு படுத்திய நண்பர்களுக்கு என் நன்றி!
இவ்விடத்தில் இன்னொன்றைச் சுட்ட வேண்டியுள்ளது. நண்பர் வினோத்தே 9ஆவது
இயலில் 32ஆம் பாடலுக்கு பிரபுபாதா எழுதியுள்ள உரை தவறானது என்று கூறியுள்ளார். வினோத்
தனக்கும் சமற்கிருதம் தெரியாது என்று கூறுகின்றார். எனவே நாம் அனைவரும் ஆங்கில அல்லது
ஆங்கில வழித் தமிழ் மொழி பெயர்ப்பையே நம்ப வேண்டியுள்ளது. எனவே என் சமற்கிருத - தமிழ் மொழிபெயர்ப்புக்கு உள்நோக்கம் ஏதும்
இல்லை. .
இனி மீண்டும் நாம் விவாதத்தைத் தொடரலாம்.
வருணம் என்பது குணத்தின் அடிப்படையில்தானே தவிர, பிறப்பின் அடிப்படியில்
என்று கீதையில் கூறப்படவில்லை என்பதை மட்டுமே திரும்பத் திரும்பக் கூறுவதன் மூலம் நாம்
ஒரு பெரிய உண்மையை மறைத்துவிட முடியாது, கூடாது. ஒரு நூலில் உள்ள சொற்களுக்கும், அவை நடைமுறையில் உணர்த்தும் பொருளுக்கும்
இடையில் உள்ள இமாலய வேறுபாட்டை எப்படி மறப்பது? குணத்தின் அடிப்படையில்தான் வருணம்
என்றால், குணம் மாறும்போது வருணம் மாறுமா? எங்காவது மாறியுள்ளதா? மதம் மாற முடியும்,
நாடு விட்டு நாடு கூட மாற
முடியும், ஆண் கூடப் பெண்ணாக மாற முடியும். ஆனால் சாதி மட்டும் மாறவே முடியாது என்றால்
அது எத்தனை இறுக்கமாகக் கட்டப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து அதனை ஒழிக்கப் பாடுபட வேண்டாமா?
எந்தச் சிறுவனுக்காவது குணம் பார்த்துப் பூணூல் அணிவிக்கப் படுகின்றதா?
பார்ப்பனர்களில் கூடப் பெண்களுக்குப் பூணூல் உண்டா? சமற்கிருதச் சொற்களுக்கு 'வியாக்கியானம்'
சொல்லித் தப்பித்துவிடுவது நேர்மையானதுதானா? இந்த வருண சாதி அமைப்பை எதிர்த்துப் போராடிய
பூலே, பெரியார், அம்பேத்கர் ஆகியோருக்கு நாம் நன்றி உடையவர்களாக இருக்க வேண்டாமா? அவர்களைப்
பின்பற்றிப் போராட வேண்டாமா?
கீதையைப் புனித நூல் என்று போற்றுவதன் மூலம் குண அடிப்படை என்ற பெயரில்,
நடைமுறையில் பிறப்பின் அடிப்படையிலான வருண வேறுபாடுதானே தொடரும்? அது நண்பர்
விநோத்திற்குச் சம்மதமா?
வருண சாதி அடிப்படையில் பெருவாரியான உழைக்கும் மக்களும்,
பால் அடிப்படையில் ஒட்டுமொத்தப் பெண்களும் இழிவுபடுத்தப்படும் சமூக அமைப்பை எதிர்த்துப்
போராடாமல். கீதையைக் காப்பாற்றுவதை மட்டுமே நாம் நோக்கமாகக் கொள்ளலாமா?
அடுத்ததாக, சம்பூகன் பற்றிய விவாதத்தில் வினோத் ஒரு பெரிய உண்மையை அப்படியே
மறைக்கப் பார்க்கிறார். சம்பூகன் ஒரு சூத்திரன் என்பதற்காக ராமர் அவரைக் கொல்லவில்லை.
தன் உடலோடு அவர் சொர்க்கம் செல்ல விரும்பினார். அதற்காகத்தான் அவரைக் கொன்றார்
என்பது எவ்வளவு உண்மைக்கு மாறானது! சரி, அப்படியே வைத்துக் கொண்டாலும், சம்பூகன் உடலோடு
சொர்க்கம் செல்ல முயன்றதில், ராமருக்கு என்ன பிரச்சினை? அதற்காக ஏன் அவரைக் கொல்ல வேண்டும்?
உண்மை அதுவன்று! 'சங்கீத பீஷ்ம, சங்கீத விமர்சகாசார்ய, அபிநவ
த்யாஹபிரம்ம, கீர்த்தனாசார்ய ஸ்ரீ உ,வே.சி.ஆர்.சீனிவாச ஐயங்கார் அவர்களால் மொழிபெயர்க்கப்
பட்டுள்ள 'உத்தரகாண்டம்-தமிழ் வசனம்' என்னும் நூலிலிருந்து அந்நிகழ்வைக் கீழே தருகின்றேன்.
உத்தரகாண்டத்தின் 'தபஸ்வியைக் காணுதல்' என்னும் 75ஆவது சருக்கத்தில்
ராமரும், சம்பூகனும் சந்திக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. 'இந்தச் சரீரத்துடன் தேவ
பதவியை அடைய விரும்புகிறேன்' என்று சம்பூகன் சொல்வது உண்மைதான். ஆனால் அதனை அவர் தானாகச்
சொல்கின்றார். ராமர் கேட்ட கேள்வி என்ன தெரியுமா? "இவ்வளவு உறுதியாய்த் தவம் செய்யும்
நீ யாரென்று அறிய ஆசை கொண்டேன். நான் அயோத்தியாதிபதி . தசரத புத்திரனான ராமன். நீ எந்த
வருணத்தைச் சேர்ந்தவன்? நீ பிராமணனா? பராகிரமசாலியான ஷத்திரியனா? நான்காம் வருணத்தவனா?
நிஜத்தைச் சொல்" என்றுதான் கேட்கிறார். ஆக, ராமரின் நோக்கம் சம்பூகனின்
வருணத்தை அறிந்து கொள்வதுதானே தவிர, தவத்தின் நோக்கத்தை அறிந்து கொள்வதில்லை.
'நான் நான்காம் வருணத்தவன். சம்பூகன் என்று பெயர்" என்று கூறியவுடன்,
வேறு எதுவும் பேசாமல், தன் வாளால் அவர் தலையைக் கொய்து விடுகிறார்
ராமர்.
இதற்குப் பிறகும் வினோத் என்ன சமாதானம் சொல்லப் போகிறார் என்று தெரியவில்லை.
இறுதியாக இன்னொரு வினாவையும் முன்வைக்கிறேன். குணத்தின் அடிப்படையில்தான்
வருணம் என்றால், மனிதர்களுக்கு அந்தக் குணத்தைப் படைத்தவர், பக்தி அடிப்படையில், கடவுள்தானே?
ஏன் ஒரு பிரிவினருக்கு நல்ல குணத்தையும், இன்னொரு பிரிவினருக்குத் தீய குணத்தையும் அந்தக்
'கடவுள்' கொடுக்க வேண்டும்? சமத்துவமின்மையை, ஏற்றத் தாழ்வை உங்கள் கடவுள் திட்டமிட்டே
உருவாக்கினாரா?
அறிவார்ந்த விவாதத்தை மீண்டும் நண்பர்கள் விரும்பினால் தொடரலாம். புதிய நண்பர்களும் இதில் பங்கேற்கலாம் subavee-blog.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக