ஞாயிறு, 4 ஜூலை, 2010

பெண்கள் நினைத்தால், எந்த துறையிலும் முன்னேற முடியும்

Devipala
தர்மபுரி அருகே ஆண்களுக்கு சிகை அலங்காரம் செய்யும் தொழில் செய்து வருகிறார் இளம் பெண். வறுமையால் தந்தை செய்த தொழிலை ஆர்வத்துடன் கற்று முன்னேற துடிக்கும் இப்பெண்ணை, பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேறி, பாரதி கண்ட புதுமைப் பெண் சமுதாயத்தை உருவாக்கி வருகின்றனர். பெண்கள் நினைத்தால், எந்த துறையிலும் முன்னேற முடியும் என்பதை நவீன கால நகர பெண்கள் நிரூபித்து வரும் இந்த காலத்தில், மூட நம்பிக்கை, பெண் அடிமைத்தனம், ஆண் ஆதிக்கம் நிறைந்த கிராமப் பகுதிகள் நிறைய உள்ளன. பெண்களை வெறுத்து ஒதுக்கும் தர்மபுரி மாவட்டத்தில், பெண் கல்வி 49.28 சதவீதமே உள்ளது. குறிப்பாக, பள்ளி செல்லும் பெண் குழந்தைகள் இடை நிற்கும் எண்ணிக்கையும் அதிகம் உள்ளது. பெண் சமுதாயத்தை புறக்கணிக்கும் தர்மபுரி மாவட்டத்தில் இளம் பெண், வறுமை காரணமாக தனது தந்தை செய்த முகச் சவரம் செய்யும் தொழிலை சவாலாக எடுத்துக் கொண்டு, தன் தாயை காப்பாற்ற லட்சியப் பணியாக முடி திருத்தும் தொழில் செய்து வருகிறார்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா அமனிமல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி கமலா. இவர்களுக்கு நான்கு குழந்தைகள். மூன்று மகன்கள், கடைசி பெண் தேவிபாலா(20). கிருஷ்ணன் அமனிமல்லாபுரத்தில் சவரத் தொழில் செய்யும் சலூன் கடை நடத்தி வந்தார். தந்தைக்கு உதவியாக தேவிபாலா அடிக்கடி கடைக்கு சென்று, தன் தந்தை செய்யும் தொழிலை கூர்ந்து கவனித்து வந்தார். அவரது ஆர்வத்தைப் பார்த்த கிருஷ்ணன், முடி திருத்தம் செய்ய வரும் சிறுவர்களுக்கு, தேவிபாலாவை அவரது எட்டாவது வயதில் முடி திருத்தம் செய்ய பழக வைத்தார். கிருஷ்ணனின் மூன்று மகன்களுக்கும் திருமணமாகி தனித்குடித்தனம் சென்று விட்டனர். எட்டு ஆண்டுகளுக்கு முன் கிருஷ்ணன் இறந்துவிட்டார். மகள் தேவிபாலாவுடன், கமலா தனியாக குடும்பத்தை நடத்த முடியாமல் தத்தளித்தார்.
தாய்க்கு ஆறுதல் கூறிய தேவிபாலா, தன் தந்தை நடத்திய சலூன் கடையை தொடர்ந்து நடத்த முடிவு செய்தார். கிருஷ்ணனின் வாடிக்கையாளர்கள் தேவிபாலாவுக்கு ஊக்கம் கொடுக்க, எட்டு ஆண்டாக தேவிபாலா ஆண்களுக்கு முடித் திருத்தம், சவரம் செய்து, அதில் கிடைக்கும் வருவாயில் தாயை காப்பாற்றி வருகிறார். அமனிமல்லாபுரத்தில் 200 குடும்பத்தினர் உள்ளனர். தேவிபாலாவை போல் அங்கு நான்கு ஆண்கள் சலூன் கடை வைத்துள்ளனர். தேவிபாலாவுக்கு தினம் 50 முதல் 100 வரையில் வருவாய் கிடைத்த போதும், வறுமையைப் போக்க தான் கற்ற கைத்தொழில் தனக்கு உதவுவதை நினைத்து அவர் பெருமைப்பட்டு வருகிறார்.
இது குறித்து தேவிபாலா கூறியதாவது: என் தந்தை இறந்த பின், குடும்பத்தை காக்கும் பொறுப்பு ஏற்பட்டதால், என் தந்தையிடம் கற்ற சவரத் தொழிலைச் செய்ய முடிவு செய்தேன். எங்கள் வறுமையை இத்தொழில் போக்கியதால், தொடர்ந்து எனக்கு திருமணம் முடியும் வரையில் இத்தொழிலைச் செய்வேன். என் வாடிக்கையாளர்கள் பலரும் பியூட்டி பார்லர் நடத்த வற்புறுத்தி வருகின்றனர். புதிதாக ஒரு தொழிலை கற்க விரும்பவில்லை. என் குடும்பத்துக்கு ஏற்ற வருமானம் கிடைக்கிறது. எனவே, இத்தொழிலை தொடர்ந்து செய்வேன். வேறு தொழில் எதுவும் கற்க ஆசையில்லை.
சிறு வயதில் இருந்து இத்தொழில் செய்வதால், ஆண்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் என்னால் தொழில் செய்ய முடிகிறது. கிராமப் பகுதி என்பதால் வருவாய் குறைவாகத்தான் கிடைக்கிறது. முகச் சவரனுக்கு 8 முதல் 10 ரூபாயும், முடி வெட்ட 10 முதல் 12 ரூபாய் வரை கூலி கிடைக்கும். என் அப்பாவின் மூலம் கற்ற கைத்தொழில் மூலம் என்னால் முன்னேற முடியும் என்பதால், வேறு தொழில் நினைப்பு எனக்கு துளியும் இல்லை. இவ்வாறு தேவிபாலா தெரிவித்துள்ளார்.
www.mahaveli.com

கருத்துகள் இல்லை: