சனி, 1 அக்டோபர், 2022

ஓசி டிக்கெட் மூதாட்டி மீது வழக்கில்லை : காவல்துறை விளக்கம்!

மின்னம்பலம் : ஓசி டிக்கெட் வேண்டாம் என்று சண்டையிட்ட மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்று  கோவை மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
மகளிர் இலவசப் பயணத் திட்டம் தொடர்பாக பேசிய உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி `ஓசி’ என்று கூறிய நிலையில்,
கோவை அரசுப் பேருந்தில் பயணித்த குரும்பாளையத்தைச் சேர்ந்த துளசியம்மாள் என்கிற மூதாட்டி, நடத்துனரிடம் ஓசி டிக்கெட் வேண்டாம் காசு வாங்கிக்கொள் என்று கூறிய வீடியோ வைரலானது.
இது திட்டமிட்டு எடுக்கப்பட்ட வீடியோ, அ.தி.மு.க ஐ.டி விங்கைச் சேர்ந்த பிரித்திவிராஜ் என்பவர் மூதாட்டியை அழைத்துச் சென்று நடத்துனரிடம் பிரச்னை செய்ய வைத்து வீடியோ எடுத்து பதிவிட்டதாக திமுக புகார் அளித்தது.
கோவை மதுக்கரையைச் சேர்ந்த திமுக நிர்வாகி காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், மூதாட்டி துளசியம்மாள், அதிமுக ஐடி விங்கைச் சேர்ந்த பிரித்திவிராஜ், மதிவாணன், விஜய் ஆனந்த் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மூதாட்டி துளசியம்மாளை வெறும் சாட்சியாக மட்டுமே சேர்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மற்ற மூவர் மீதும் அரசுக்கு எதிராக அவதூறு பரப்புதல், பொது இடத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், தகராறு செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

கலை.ரா

கருத்துகள் இல்லை: