புதன், 28 செப்டம்பர், 2022

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை கோரிய திருமா! உச்ச நீதிமன்றத்திற்கு போகச்சொன்ன உயர்நீதிமன்றம்

தினமலர் : ஆர்எஸ்எஸ், திருமாவளவன், சென்னை உயர்நீதிமன்றம், சென்னை ஐகோர்ட், உயர்நீதிமன்றம்,
சென்னை: ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்ய முடியாது. உச்சநீதிமன்றத்தில் தான் மேல்முறையீடு செய்ய முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
தமிழகம் முழுதும், 50 இடங்களில், அக்., 2ம் தேதி, ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க, போலீசாருக்கு உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், பல்வேறு நிபந்தனைகளை விதித்து, செப்டம்பர் 28க்குள் அனுமதி வழங்கும்படி, போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை வாபஸ் பெறக் கோரி, வி.சி., தலைவர் திருமாவளவன் மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி, நீதிபதி இளந்திரையன் முன்பு முறையீடு செய்யப்பட்டது. 'ஏற்கனவே உத்தரவு பிறப்பித்த வழக்கில், பிரதிவாதியாக இல்லாத நிலையில், இந்த மனுவை எப்படி விசாரிக்க முடியும்' என, நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அவசர வழக்காக விசாரிக்க மறுத்து விட்டார். மனுவுக்கு எண் வழங்கும் நடைமுறை முடிந்த பின்னே விசாரிக்க முடியும் எனவும், தேவை என்றால், அனுமதி வழங்கிய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யலாம் எனவும் அறிவுறுத்தினார்.

இந்நிலையில், அணிவகுப்பு ஊர்வலத்திற்கு எதிராக திருமாவளவன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி தலைமையிலான 2 நீதிபதி அமர்வு கூறுகையில், ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்ய முடியாது.

திருமாவளவனின் மேல்முறையீடு விசாரணைக்கு உகந்ததல்ல. குற்றவியல் சார்ந்த வழக்கு என்பதால் உச்சநீதிமன்றத்தில் தான் மேல்முறையீடு செய்ய முடியும் என உத்தரவு பிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை: