tamil.oneindia.com - Nantha Kumar R : திருவனந்தபுரம்: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மற்றும் அதன் துணை அமைப்புகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. 2 ஆண்டுக்கு முன்பே தடை செய்ய கூறினேன். இப்போது தடை செய்துள்ளனர் எனக்கூறி பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா தடை பற்றி அஜ்மீர் தர்ஹாவின் தலைவர் ஜெயினுல் அபிதீன் அலி கான் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 22ம் தேதி திடீரென்று என்ஐஏ, அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்பட மொத்தம் 15 மாநிலங்களில் 90க்கும் அதிகமான இடங்களில் சோதனை நடந்தது.
இந்த சோதனையானது பிஎப்ஐ எனும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு, எஸ்டிபிஐ கட்சியின் அலுவலகம், நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.
என்ஐஏ சோதனை
பயங்கரவாதத்துக்கு நிதி உதவி செய்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி வழங்கல், பயங்கரவாத செயலுக்கு ஆட்சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. மொத்தம் 106 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கேரளாவில் முழுஅடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு நேற்று கர்நாடகா, அசாம், குஜராத், மகாராஷ்டிரா, தெலுங்கானா உள்பட 8 மாநிலங்களில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தொடர்புடைய இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போதும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவுக்கு தடை
இந்த 2 சோதனைகளை தொடர்ந்து பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு மத்திய அரசு இன்று அதிரடியாக தடை விதித்து உத்தரவிடப்பட்டது. 5 ஆண்டுகள் வரை செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா தவிர அதன் 8 பிற துணை அமைப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. இதற்கும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முஸ்லிம் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த தடை ஒருதலைபட்சமானது. தடை உத்தரவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கேரளா முஸ்லிம் லீக் எம்எல்ஏ கருத்து
இதற்கு மத்தியில் தான் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதை கேரளாவை சேர்ந்த முஸ்லிம் லீக் கட்சி எம்எல்ஏ ஏகே முனீர் வரவேற்றுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மீதான தடை நியாயமானதாக இருந்தால் நாங்கள் வரவேற்போம். ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராக மதச்சார்பற்ற முறையில் நாம் அனைவரும் போராட வேண்டும். ஏனென்றால் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மீதான தடை மட்டுமே அனைத்து பிரச்சினைகளையும் சரிசெய்துவிடாது'' என்றார்.
அஜ்மீர் தர்கா தலைவர் வரவேற்பு
இதேபோல் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் தடையை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற அஜ்மீர் தர்காவின் தலைவர் ஜெயினுல் அபிதீன் அலி கான் வரவேற்றுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛பயங்கரவாத செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் சட்டத்துக்கு உட்பட்டு மத்தியஅரசு பிஎப்ஐ அமைப்பை தடை செய்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை அனைவரும் வரவேற்க வேண்டும். தேசம் பாதுகாப்பாக இருந்தால்தான் நாம் பாதுகாப்பாக இருக்க முடியும். எந்த நிறுவனத்தையும், சித்தாந்தத்தையும்விட இந்த தேசம் மகத்தானது. தேசம் தான் மிகப்பெரியது.
2 ஆண்டுக்கு முன்பே கூறினேன்
தேசத்தை பிளவுப்படுத்தும் வகையில் ஒற்றுமையைக் குலைக்கும் நோக்கில், அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தினால் யாராக இருந்தாலும் அவர்களுக்கு இந்த நாட்டில் வாழ உரிமையில்லை. பிஎப்ஐ அமைப்பு தேசத்துக்கு விரோதமான செயல்களைச் செய்வதாக அரசுக்கு தகவல்கள் கிடைத்தன. நாட்டின் நலன் கருதி இந்த தடையை அரசு விதித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே பிஎப்ஐ அமைப்பை தடை செய்யுங்கள் என்று நான் அரசிடம் வலியுறுத்தினேன்" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக