புதன், 28 செப்டம்பர், 2022

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை.. சட்டவிரோதமாக அறிவித்த ஒன்றிய அரசு

tamil.oneindia.com -  Noorul Ahamed Jahaber Ali : டெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சட்டவிரோத அமைப்புகளாக அறிவித்து இருக்கும் மத்திய அரசு அதற்கு 5 ஆண்டுகள் தடை விதித்து உத்தரவிட்டு இருக்கிறது.
பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நாடு முழுவதும் கிளைகளை பரப்பி செயல்பட்டு வருகிறது. இஸ்லாமியர்களுக்கு எதிரான அடக்குமுறைகள், சட்டங்களுக்கு எதிராகவும், மத்திய அரசு, பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறது.
அதே நேரம் பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கலவரங்களை தூண்டி வருவதாக குற்றம்சாட்டி அவற்றை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தன.
பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கவே முடியாது: உச்சநீதிமன்றத்தில் திமுக எம்.பி வில்சன் வாதம் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கவே முடியாது: உச்சநீதிமன்றத்தில் திமுக எம்.பி வில்சன் வாதம்

என்.ஐ.ஏ. சோதனை
இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் சோதனை செய்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முக்கிய தலைவர்கள் பலரை கைது செய்து இருக்கிறார்கள். இதனை அந்த அமைப்பினர் மட்டுமின்றி பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், மதசார்பற்ற இயக்கங்களும் கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.


போராட்டங்கள்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் நடத்தப்பட்ட என்.ஐ.ஏ. சோதனையை கண்டித்து நாடு முழுவதும் அந்த அமைப்பும், எஸ்.டி.பி.ஐ, இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு, எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. கேரளாவில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

மீண்டும் சோதனை
இந்த நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் நேற்று மீண்டும் காவல்துறை சோதனை நடத்தியது. பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆளும் உத்தரப்பிரதேசம், குஜராத், கர்நாடகா, அசாம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் பி.எஃப்.ஐ. நிர்வாகிகள் வீடுகளில் காவல்துறை சோதனை மேற்கொண்டது.

5 ஆண்டுகள் தடை
நேற்று நடைபெற்ற சோதனைக்கு பின்னர் நாடு முழுவதும் 250க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளை சட்டவிரோதமானவை என அறிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், அதற்கு 5 ஆண்டுகள் தடை விதித்து இருக்கிறது. சட்டவிரோத பண பரிவர்த்தனை, பிரதமர் மோடியை கொல்ல சதி என பல்வேறு குற்றச்சாட்டுகளை அந்த அமைப்பு மீது என்.ஐ.ஏ. சுமத்தியது.

கருத்துகள் இல்லை: