வெள்ளி, 30 செப்டம்பர், 2022

அண்ணாவின் வேலைக்காரி தந்த விழிப்புணர்வை மடைமாற்ற கல்கி புனைந்த பொன்னியின் செல்வன்

Ovia Rajamoni : பொன்னியின் செல்வன்…..
ஒரு மாதமாக எழுத நினைத்து ஒரு வழியாக நாளை படம் வெளிவருகின்ற நிலையில் இன்றாவது எழுதி விடுவோம் என்று இந்த பதிவை எழுதுகிறேன். 
பொன்னியின் செல்வன் நாவலை முழுமையாக நமக்கு எதிரணியில் நிறுத்தும் அணியினர் ஒரு புறம்.  கல்கியின் கற்பனை வரலாறாகுமா என்கின்ற கேள்வி ஒரு புறம்.  

கல்கியின் “பொன்னியின் செல்வன்” குறித்து …… | வி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்
இது பற்றி அலட்டிக் கொள்ளாமல் கல்கியின் கதாபாத்திரத்துக்கான நடிக நடிகையர் தேர்வு பற்றிய அலசல் ஒருபுறம் அப்புறம் இசை ….
அந்த இசைக் கலைஞர்கள் சார்ந்த அரசியல் என்று கடந்த ஒரு மாதமாக சமூக ஊடகங்கள் நிரம்பி வழிகின்றன.  
அறிஞர் அண்ணா அவர்களின் வேலைக்காரி நாடகம் மாபெரும் வெற்றியடைந்து திராவிட இயக்க செல்வாக்கு பெருகிய வேளையில் மக்களை திசை திருப்ப கல்கியின் நாவல்கள் பங்காற்றின என்கிறார் மருத்துவர் காந்தராஜ்.



மேலும் சுந்தர சோழனின் மகன் ஆதித்ய கரிகாலன் பார்ப்பனர்களால் சூழ்ச்சியாகக் கொல்லப்பட்ட கதையை சற்றே திரித்து அதனை மறைத்து எழுதப்பட்ட நாவலே பொன்னியின் செல்வன் என்றும் அவர் கூறுகிறார். இராஜஇராஜ சோழன் காலத்தில்தான் பார்ப்பனர் செல்வாக்கு பெருகியது என்பதும் பெண்களைக் கோவிலுக்கு பொட்டு கட்டி விடும் தேவதாசி மரபு அப்போது தோன்றியதுதான் என்றும்  வரலாற்றில் பதிவாகியிருக்கிறது என்பதுடன் சதுர்வேதி மங்கலங்கள் போன்ற பார்ப்பனர்களுக்கு தானமாக நிலமளிக்கும் பழக்கம் தோன்றியதும் இச்சோழர்கள் காலந்தொட்டே என்பதும் வலிமையாக முன்வைக்கப் படுகிறது.  

பொதுவாக இந்து மதத்துக்கு மிக ஆதரவானவர்கள் சோழர்களும் பல்லவர்களும்.  எனவேதானோ என்னவோ கல்கி இந்த இரு மன்னர் குலத்தையும் போற்றி எழுதியிருக்கிறார்.  பாண்டவர்களைப் பற்றி அவர் எந்த நாவலும் எழுதவில்லை என்று கருதுகிறேன்.  ஆனால் பிற நாடுகளிலும் புகழ் பரப்பி தமிழர் பெருமையை நிலை நாட்டியதில் பாண்டியர்கள் பங்கு குறிப்பிடத் தக்கது என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.  
சரி.  இவையெல்லாம் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய அடிப்படைப் பிரச்சினைகளாக இருக்கும் அதே வேளையில் வெளியிடப் பட்ட காலந் தொட்டு இன்று வரை இந்நாவல்களில் இருக்கும் வெகுமக்கள் ஈர்ப்புத் தன்மையை எவரொருவரும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.  

அப்படி யார் எதன் பொருட்டு கூறினாலும் அது காழ்ப்பின் மீதான கூற்றாகவே களங்கம் கொண்டு நிற்கும்.  மேலும் அத்தகைய நீண்ட நாவல்கள் அதற்குப் பிறகு தோன்றவில்லை என்பது இந்நாவல்களின் சிறப்பை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.  
பொன்னியின் செல்வன் ஒரு சில வரலாற்றுக் குறிப்புகளை அடிப்படையாக வைத்து புனையப் பட்ட கற்பனையே.  அந்த வரலாற்றுக் குறிப்புகள் கல்கியாலேயே இடையிடையே சுட்டப் படுகின்றன.  இந்த நாவல் மீதான அரசியல் பார்வைகளைப் பார்த்து விட்டோம்.  இப்போது அதைவிட பெரிய விசயம் என்னவென்றால் இந்த நாவலை மணிரத்னம் ஜெயமோகன் அண்ட் கோ தயாரித்திருப்பது.  எனவே இந்த நாவலை இவர்கள் பங்கிற்கு என்னவாத திரையாக்கம் செய்திருக்கிறார்கள் என்று கவனிப்பது ஒரு கடமையுமாகிறது.  

மேலே தரப்பட்டிருக்கும் அரசியலைத் தாண்டி வேறு சில கோணங்களில் இந்தத் திரைப்படம் என்ன சொல்லப் போகிறது என்பதை அறியும் ஆவல் எனக்கும் மிகுதியாகவே இருக்கிறது.  எனவே திரைப்படம் பார்க்கு முன்பு அந்த விசயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.  ஏனெனில் இவர்கள் நவீன சமுதாயத்தின் முகங்களாக அறியப் படுகிறார்கள்.  இவர்களின் நவீனத்தை சரியாக மொழிபெயர்க்க இந்த முன்பார்வை உதவக் கூடும்.

1.  கல்கியின் நாவல் வானில் தோன்றும் தூமகெது என்கின்ற வால் நட்சத்திரத்தைப் பற்றி துவக்கத்திலேயே குறிப்பிடுகிறது.  குடந்தை
ஜோதிடரின் கணிப்பு முகாமையாக எடுத்து வைக்கப் படுகிறது.  ஆனால் அதே நேரத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் ஜோதிடத்தின் உண்மை குறித்து கேள்விகளை அவ்வப் போது எழுப்பிக் கொண்டேயிருக்கிறார்கள்.    ஒரு வேளை நாம் மேலே பார்த்தபடி ஆதித்த கரிகாலனின் மரணத்துக்குக் காரணமானவர்களைக் கொலைப் பழியிலிருந்து காப்பாற்ற தான் வால்நட்சத்திரத்தின் துணையை கல்கி நாடினாரா என்பதும் தெரியவில்லை.  ஆனால் படத்தின் டிரெயிலரைப் பார்த்த போது கல்கி ஒரு கேள்வியோடு வைத்த வால் நட்சித்திரத்தின் ஜொலிப்பு  மணிரத்னம் ஜெயமோகன் அண்ட் கோவின் கைவண்ணத்தில் பலமடங்கு அதிகரித்து விட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

2. மந்தாகினி …..இந்த நாவலின் மூலகதாபாத்திரம்…  காற்றைப் போல் சுதந்திரமானவள்.  இந்த சோழ மன்னர் பரம்பரையின் வீராதி வீரர்களைப் பலமுறை தன் உடல் வலிமையாலும் அறிவாற்றலாலும் காப்பாற்றித் தருபவள்.  அவள் சோழ மன்னனுடன் வாழ்ந்தாள் … அந்தச் சோழ மன்னன் மன்னனாக இல்லாத போது… மன்னன் அவளுக்கு துரோகமிழைத்து அரியணை ஏறும் பொருட்டு அவளை விட்டுப் பிரிந்தான்.  அவள் அதன்பின் பாண்டிய மன்னனிடம் இணைந்து வாழ்ந்து இரண்டு பிள்ளைகள் பெறுகிறாள்.  கல்கி மிக வசதியாக இந்த காலத்தில் அந்தப் பெண் சித்த சுவாதீனமின்றி இருந்ததாக திரித்து விடுகிறார்.  பின் மீண்டும் நினைவு வந்ததும் அந்தப் பிள்ளைகளையும் மறந்து பழைய சோழ மன்னன் நினைவாக அலைகிறாள்.  அவர் மகனான அருண்மொழி வர்மனை நிழலாய்த் தொடர்ந்து காத்து கடைசியில் சுந்தர சோழனைக் காக்க உயிர் விடுகிறாள்.  இந்தப் பெண்ணின் மகள்தான் நந்தினி.  இந்தப் பெண் கதாபாத்திரத்தை இந்தத் திரைப்படம் எப்படி சித்தரிக்கப் போகிறது எனக் காண ஆவல்.

3. வர்ணாசிரமம் காக்கப் பட வேண்டும் என்பது இரண்டு கதாபாத்திரங்களின் வழியாக மிக வலிமையாக முன்மொழியப் படுகிறது.  ஒன்று அந்தணராகிய முதன் மந்திரி அனிருத்த பிரம்மராயர்.  மந்தாகினியை அழைத்து வந்தால் சுந்தர சோழன் அவளை மணம் முடித்து விடக் கூடும் என்றெண்ணி  மன்னனிடம் அவள் இறந்து விட்டதாக பொய் சொன்னவர்.  இரண்டு வானமாதேவி அரச குலத்தில் பிறக்காத ஒரு குழந்தைக்கு நான் தாயாகலாம்.  ஆனால்  குலமறியாத அந்தக் குழந்தை அரச பதவிக்கு வரக் கூடாது என்று அரசருக்குரிய வீரமும் திறமையுமின்றி கோழையாக ஒரு குழந்தையை திட்டமிட்டு பக்திப் போர்வையில் வளர்த்து வந்தவர்.  இந்த உண்மைகளை நமது நவீன படைப்பாளிகள் எப்படி காட்டப் போகிறார்கள் என்று பார்ப்போம்,

4. பூங்குழலி …. மந்தாகினியின் உறவுக்காரப் பெண்.  இயற்கையின் காதலி.  ஆர்ப்பரித்தெழும் கடலின் மகள்.  அரசர்களின் துரோகங்களைக் கேள்வி கேட்க நினைத்தவள்.  ஆனால் கல்கியால் முடக்கப் பட்டு பூக்கட்டும் அத்தை மகனைக் கட்டிக் கொண்டு சேவையாற்றப் போய் விட்டவள்.  சரி நான் மேலே சொல்ல விரும்பவில்லை.  ஏனெனில் கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு முன் வாசித்த அந்த நாவலின் பெயர் கூட மறக்காமல் என்நினைவில் இருந்த ஒரே கேரக்டர் பூங்குழலிதான்.  ஆனால் …நான் இவர்களின் பூங்குழலியைப் பார்த்தேன்.  என்ன சொல்ல… முதல் மரியாதையில் இராதா படகோட்டும் பெண்ணாக வருவார்.  அவரும் இரவிக்கை அணியாமல்தான் நடித்தார்.  ஆனால் எவ்வளவு வித்தியாசம்..,,,சரி அந்த நவீனத்தையும் திரையில் பார்ப்போம். (அந்த இராதாவையே பூங்குழலியாக நினைப்பது கூட சற்று நன்றாகதான் இருக்கிறது)

5. குந்தவை…..பெண்களுக்கு நேரடியான இராஜபரிபாலனம் தடை செய்யப் பட்டிருந்த நிலையில் தனது சகோதரர்கள் மூலமாக தனது இராஜாங்க ஆசைகளை நிறைவேற்ற நினைக்கிறவள்.  வானமாதேவி வரிசையில் குந்தவையையும் சொல்ல வேண்டும்.  தோட்டக்காரக் குடும்பப் பெண் என்றதும் நந்தினியை அவமானப் படுத்தி விரட்டுவதும் பின்னர் அவளும் மன்னர் குல வாரிசு என அறிய வந்ததும் தன் செயல் குறித்து வருந்துவதும் ….உண்மையில் குல தர்மம் பேண வேண்டும் என்கின்ற கொள்கையுள்ளவரே இவரும்.  

6. ஆதித்த கரிகாலன் இந்த கதாபாத்திரத்துக்கு கல்கியே நியாயம் செய்யவில்லை.  ஆனால் அதனையும் மீறி அந்தக் கதாபாத்திரம் திமிறிக் கொண்டு நிற்கும்.  அவரின் மரணம் குறித்த கல்கியின் கற்பனை கூட இயற்கையாய் வெற்றி பெறவில்லை.  கடைசி வரை தெளிவில்லாத கதை அமைப்பு.  நந்தினி பாண்டியனின் மகளா ,,,, காதலியா……

7. வந்தியத் தேவன்….குந்தவையிடம் வெளிப் படும் குல ஆணவத்தை  குலதர்மம் குறித்து கேள்வி கேட்கும் ஒரே கதாபாத்திரம். மேலும் வந்தியத் தேவனிடம் எந்த இடத்திலும் மதப் பற்று மேலோங்கவில்லை,  மதம் அரச தர்மம் இரண்டிற்கும் வெளியே நிற்பதான ஒரு பாத்திரம்தான். திரைப்படத்தில் என்ன பேசப் போகிறார் என்பது தெரியவில்லை..

8. இலங்கையில் சிங்களவர்களோடு பாண்டியர்கள்  உறவு வைத்திருந்ததாகக் காட்டப் படுகிறது.  பவுத்த மதத்தோடு சோழர்கள் நல்ல உறவு கொண்டிருந்தார்கள் என்று காட்டப் படுகிறது.  இலங்ககையில் ஆட்சியாளர்களைத் தீர்மானிப்பதில் பவுத்த மத மடங்களுக்கிருந்த செல்வாக்குக் காட்டப் படுகிறது.  இதெல்லாம் இத்திரைப்படத்தில் பிரதிபலிக்கிறதா எனத் தெரியவில்லை.
இந்த நாவல் பெண்களை மய்யமாகக் கொண்டது.  ஆனால் படம்….?????    மீண்டும் படம் பார்த்த பிறகு தொடரும்.

கருத்துகள் இல்லை: