வியாழன், 29 செப்டம்பர், 2022

நாடார் வகுப்பு மக்களும் பாஜகவும்

  Sugumaran Ramasamy   : பாஜகவை தூக்கி சுமக்கும் வகுப்பினருள் நாடார் வகுப்பு மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கிறது.  
ஆனால் சனாதனத்தை தூக்கி பிடிக்கும் பாஜக எப்போதுமே அய்யர் மற்றும் அய்யங்கார் வகுப்புக்கு மட்டும் முன்னுரிமை முக்கியத்துவம் தருவதை நாம் அனைவரும் அறிந்ததே.
நாடார்கள்   தங்கள் வீட்டு நல்ல கெட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏன் மந்திரம் ஓதிட  பார்ப்பனர்களை அழைப்பதில்லை தெரியுமா?
வீட்டுப் பெரியவர்கள் அல்லது சமூகத்தில் மதிப்புமிக்க மனிதர்கள் தான் தாலி எடுத்து கொடுப்பார்கள். இன்று ஆங்காங்கே பார்ப்பனர்கள் மூலம் திருமணம் நடந்தாலும் வெகுவாக வைதீக முறைப்படி நடப்பதில்லை.
ஏன்? அந்த காலத்தில்!!
நாடார்களின் ஆலய நுழைவுப் போராட்ட நிகழ்ச்சிகள் வைத்தியநாத அய்யருக்குத் துணைபோகும் தமிழர்களைத் தோலுரித்துக் காட்டுவதாக அமையும்.
திருச்செந்தூர் கோவிலில் நாடார்கள் உள்ளே நுழைய முடியாது. வெளியில் இருந்துதான் தேங்காய் உடைத்து சாமி கும்பிட வேண்டும். 1872இல் இதை மீறி ஏழு நாடார்கள் உள்ளே நுழைந்தனர். கோவில் நிர்வாகம் இவர்கள் மீது வழக்குத் தொடுத்தது. டோபி, பார்பர் போன்ற இதர கீழ்ஜாதியினர் கொடிமரம் வரை செல்ல அனுமதியிருக்கும்போது நாடார்கள் உள்ளே நுழைந்ததால் கோவில் புனிதம் கெட்டுவிடாது எனக்கூறி விடுதலை செய்தது. இதனால் நாடார்கள் கொடிமரம் வரை செல்ல முடிந்தது.


1874இல் மூக்க நாடார் மதுரை--- கோவிலுக்குள் கிளி மண்டபம்வரை சென்றுவிட்டார். அடையாளம் கண்டுகொண்ட கோவில் பணியாளர்கள் அவரைக் கொன்றுவிட்டனர். நாடார்கள் பணியாட்கள் மீது வழக்குத் தொடுத்தனர். கோவிலுக்குள் நுழைய நாடார்களுக்கு உரிமையில்லை என நீதிபதி தீர்ப்பளித்து விட்டார்.
1876_78இல் சிறீவில்லிபுத்தூர் தாலுகா திருத்தங்கலில் கோவில் உள்ளே நுழைய நாடார்கள் போராட்டம் நடந்தது. மாவட்ட நீதிபதி தடை உத்தரவு பிறப்பித்து கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் ஊர்வலம் செல்ல அனுமதி அளித்தார்.
1885இல் கமுதி கோவிலுக்குள் நுழைய அனுமதி கேட்டனர். கோவில் நிர்வாகம் காணிக்கையை உயர்ஜாதியினர் மூலம் கொடுத்துவிடச் சொன்னது. நாடார்கள் மறுத்துவிட்டனர். கோவில் நிர்வாகம் அனைத்து ஜாதியினரையும் நாடார்களைப் பகிஷ்கரிக்க வைத்தது.
1890இல் திருச்சுழி கோவிலுக்குள்ளும், மதுரை கோவிலுக்குள்ளும் நாடார்கள் செல்ல முயன்றபோது அபராதம் விதிக்கப்பட்டது.
1897இல் இருளப்ப நாடார் தலைமையில் அய்ந்தாறு நாடார்கள் காவடி எடுத்துக்கொண்டு இரவில் கோவிலுக்குள் நுழைந்தனர். பூசாரி பூசை செய்ய மறுத்தார். அவர்களே தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர். கோவில் நிர்வாகம் வழக்குத் தொடுத்தது. கோவிலில் நுழைய நாடார்களுக்கு உரிமையில்லை. கோவிலைச் சுத்தம் செய்ய ரூ.500/_ நாடார்கள் தரவேண்டும் என கீழ்க்கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. உயர் நீதிமன்றத்திலும், இங்கிலாந்து பிரிவி கவுன்சிலும் இதையே உறுதி செய்தது.
1895இல் சிவகாசி கோவில் தர்மகர்த்தா தன் பதவியை ராஜினாமா செய்தார். அந்தப் பதவியை நாடார்கள் கேட்டனர். சிருங்கேரி சங்கராச்சாரியின் ஆணைப்படி மறுக்கப்பட்டது.
1896இல் கோவிலுக்குள் நுழைய முயன்றனர். கோவில் கதவுகள் மூடப்பட்டன. பூட்டை உடைத்து உள்ளே போய் தரிசனம் செய்தனர். மோதல்கள் நடந்தன. 1899இல் கலவரம் வெடித்தது. பல உயிர்கள், சொத்துகள் நாசமாயின.
இப்படிப் பல்வேறு சூழல்களால் 1910இல் நாடார் மகாஜன சங்கம் உருவாக்கப்பட்டது.
இப்படி நாடார் என்று ஆலய நுழைவு மறுக்கப்பட்ட காரணம், சனாதன கொள்கைப் படி பிராமணர்களில் பட்டர்கள் கர்ப்பக் கிரகத்துக்குள் போகலாம், இதர பிராமணர்கள் அர்த்த மண்டபம் வரை போகலாம். சூத்திரர்கள் மகா மண்டபம் வரையிலும், தீண்டத்தகாதாரும், நாடார்களும் வெளியில் நின்று கோபுரத்தை மட்டுமே ரசிக்க வேண்டும் என்ற இந்துமதத்தின் அடிப்படையே
நாடார் பணைமரம் வளர்த்தால் வரி,பணை மரம் ஏற காலில் போட்டு ஏறும் கயிற்றுக்கு வரி,மாடு வளர்த்தாள் வரி,மண்வெட்டி இருந்தால் வரி,தலைப்பாகை கட்டினால் வரி,வெள்ளி,தங்க நகைகள் போடவே கூடாது.மெத்தை வீடு கட்டக்கூடாது.மீசை வைத்தால் வரி. பெண் மார்பகத்துக்கு வரி, வரி கேட்டதால் தன் மார்பகத்தையே அறுத்து கொடுத்த நாடார் வீர பெண்மணியும் வாழ்ந்தார்கள்.
இதுபோன்று இன்னும் நிறைய வரலாற்று நிகழ்வுகள் நாடார்களை பற்றி உண்டு ஆகவேதான் வழக்கமாக நாடார் இனத்தில் பார்ப்பனர்களை அழைப்பது இல்லை என்று வழக்கமாக இருந்து வந்தது...
குறிப்பு.
தந்தை பெரியாரும் திராவிட இயக்கமும் இந்து மதத்தின் இந்த மக்கள் விரோத சனாதனக் கொள்கையை ஒழிக்க  வேண்டும் என்று போராடியதன் நியாயத்தை இப்போதுதான் நிறைய பேர் உணர்ந்து வருகிறார்.
கிறிஸ்தவ மிஷனெரிகளும், பெருந்தலைவர் காமராஜரும் கொடுத்த கல்வி அறிவும், பெரியாரின் சமூகநீதியுமே நாடார் இனத்தின் முன்னேற்றத்துக்கு மிகமுக்கிய காரணம் என்பது எனது தாழ்மையான கருத்து!
இந்த கடந்தகால கொடுமைகளை மறந்து இன்று பா ஜ க வையும், அ தி மு க வையும் தங்களின் சுயலாபத்துக்காக ஆதரிக்கும் நாடார் அமைப்புகளின் தலைவர்களை நினைத்தால் வேதனையாக இருக்கிறது!
(அய்யமுள்ளோர் நம் பக்கத்து நாடார் வீட்டு பெரியவர்களை கேட்டால் விவரம் தெரியும்.)

கருத்துகள் இல்லை: