செவ்வாய், 27 செப்டம்பர், 2022

Hon . K.W. Devanayakam இலங்கை கிழக்கு மாகாணத்தின் விடிவெள்ளி . முன்னாள் அமைச்சர் அமரர் கே டபிள்யு தேவநாயகம்

May be an image of 1 person and standing

  M R Stalin Gnanam : நீயும் துரோகி நானும் துரோகி
அது 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு பின்னரான காலம். ஆயுதமேந்தி அடைய எண்ணிய தமிழீழம் எனும் அற்புதக் கனவு கலைந்து போன நேரம். எங்கள் எதிர்கால நம்பிக்கைகள் அனைத்தும் கண்முன்னே கருகி நின்றன.
ஆயுதம் ஏந்தி நின்ற தோழர்களிடத்தில் அடுத்து என்ன செய்வது? என்கின்ற கேள்விகள் மலையாய் எழுந்து நின்றன.
அவரவர் தகுதிகளுக்கு ஏற்ப அதாவது அவரவர் குடும்பங்கள் சார்ந்த  பண வசதிகளுக்கு ஏற்ப முடிவுகள்  இருந்தன.
"கை" கனமாக இருந்த பலர் வெளிநாடு சென்றனர். கனம் குறைந்த சிலர் இந்தியாவுக்கு அகதியாக சென்றனர்.
கையில் ஏதுமற்றோர்   மண்ணோடு மண்ணாகி போயினர்.
பண வசதி இருந்தும் நாட்டை விட்டு ஓடக்கூடாது என்கின்ற ஓன்மம் இன்னும் ஒரு சிலருக்கு. அவர்கள் நாட்டிற்குள்ளேயே சொந்த வாழ்க்கையை நோக்கி நகர்வது அல்லது ஏதாவது ஜனநாயக அரசியல் ஈடுபாடுகளில் என்று  வெவ்வேறு விதமாக சிந்தித்துக் கொண்டிருந்தனர்.


இப்படித்தான் நானும் இந்த சிக்கல்களுக்குள் அகப்பட்டுத் தவித்தேன்.
ஒருபுறம்  பாடசாலை ஆசிரியர்களுக்கான போட்டிப் பரீட்சையொன்றில் பங்கெடுத்தேன். மறுபுறம் பல்கலைக்கழக வாய்ப்புகளை தொடர்வதற்கான உந்துதல்.
இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தான்  அன்று கல்வி அமைச்சராக இருந்தார்.  அவரை இலகுவாக அணுகும் வாய்ப்புகள் இருக்கவில்லை. எனவே இவை சம்பந்தமாக அன்றைய மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமாக இருந்த தேவநாயகம் அவர்களை சந்திக்க முனைந்தேன்.
ஆரம்பக் கல்வி ஆசிரியர்களுக்கான நியமன போட்டியில் வழங்கப்பட்ட வினாத்தாள்களில் இருந்த பிழைகளை சுட்டிக்காட்டி  வீரகேசரியில் ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். கூடவே ஆசிரியர் பதவி பெற்று தருவதாக கூறி சிலர் லஞ்சம் வாங்கிக் கொண்டிருந்த கயமைத்தனங்களை கண்டனம் செய்து  'சந்தை சரக்காகும் ஆசிரியர் நியமனம்' எனும் தலைப்பிலும்  'வெளிவாரி பட்டதாரிகள் போட்டி பரீட்சைக்காக கண்டிக்குச் செல்ல வேண்டிய நிலைமைகள் மாற்றப்பட வேண்டும்' என்றும் பத்திரிகைகளில் சில குறிப்புகளை எழுதியிருந்தேன். அவற்றின் பிரதிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு அமைச்சரை சந்திக்க சென்றேன்.
தமிழீழம் தேடி காடு மலைகளில் அலைந்த அந்த கால்கள் ஓரு அமைச்சர் அலுவலகத்துக்குள் முதல்முறையாக பதிந்தன. கைகள் மட்டுமல்ல தொடைகளும் நடுங்கின. எம்ஜிஆரை ஒத்த தங்க நிறம். வயது முதிர்ச்சியை மறைத்துக் கொண்ட கம்பீரமான கோட் சூட்.  மார்புச்சட்டையிலே செருகியிருந்த அந்த ரோஜாப்பூ இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவை நினைவூட்டியது.
அவர் முன்னே ஒரு கிராமத்து வெறும் பையனாய் நான்.
 இந்த அரசாங்க அமைச்சர்களால் வெறும் சீர்திருத்தம் மட்டுமே செய்ய முடியும். நாங்களோ புரட்சிக்காரர்கள். என்கின்ற மமதைகளெல்லாம் தொலைந்து நிர்வாணமாகிய உணர்வு மெய்சிலிர்த்து நின்றது.
அந்த பத்திரிகை துணுக்குகளடங்கிய ஒரு ரூபாய் பயிலை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அவர் முன்னே கூனிக்குறுகி நின்றேன்.  
தமிழீழம்,ஆயுதம், இயக்கங்கள் என்று ஏதும் அறியாத அப்பாவி போல கல்விசார் பிரச்சினைகளை ஒப்புவித்து முடித்தேன். எனது வார்த்தைகளை பொறுமையாக செவிமடுத்த அவர் உடனடியாகவே கல்வி அமைச்சர் ரணில் விக்ரமசிங்க அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.  ஆங்கிலத்தில் நிறையவே பேசினார். தொலைபேசியை வைத்த பின்னர் என்னிடம் சொன்னார்.
"உத்தியோகங்கள் எடுப்பதற்காக எந்த விதத்திலும் லஞ்சம் கொடுக்க வேண்டாம் என்று ஊரிலே போய் சொல். போட்டி பரீட்சைகளின் படி நேர்மையாக தேர்வுகள் இடம்பெறும்"என்றும் விரைவில் மட்டக்களப்பில் வெளிவாரி பட்டப்படிப்புகளுக்கான பரீட்சைகளை நடத்த ஏற்பாடு செய்வதாகவும் கல்வி அமைச்சர்  சொல்லுகிறார் என்றும் உறுதி அளித்தார்.
சரி சேர் தாங்யூ... என்று ஒப்புக்கு சொல்லிக் கொண்டு  எழுந்த என்னை நோக்கி.....
"இரு நீ சரியான கெட்டிகாரன் போல இரிக்கி. எல்லாம் சரி. நீ  மட்டக்களப்பில் எந்த ஊர்?ரஸ்தவாத குறூப்புகளில் இருந்து வந்தநீயா உண்மையைச் சொல்ல வேண்டும் உறுக்காமல் உறுக்கினார்.  
கண்ணெல்லாம் இருட்டாகியது. தலை கிறுகிறுத்தது.
வெலிக்கடை, பூசா முகாம்களெல்லாம் கபாலத்துக்குள் குடிகொண்டு நர்த்தனமாடின. என்னை அவரிடம் அறிமுகம் செய்து நேரம் வாங்கித் தந்த நபர் சாடைமாடையாக ஏதோ உளறியிருக்கிறார் என்பது மட்டும் புரிந்தது. முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்க முடியாது. உண்மைகளை பேச வேண்டிய நேரம்..........
மனதை திடமாக்கிக்கொண்டு அனைத்தையும் ஒப்புவித்தேன். மௌனமாக கேட்டுக் கொண்டிருந்த அவர் சொன்னார் "உன் கூட்டாளிகள் எல்லாம் கூட்டிக் கொண்டு வா. அவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்து கொடுப்போம்" மட்டக்களப்பு இளைஞர்கள் "யாழ்ப்பாணத்து ரஸ்தவாதிகளுடன் சேர்ந்து நாட்டை அழிப்பதிலிருந்து விடுபட வேண்டும்"  
நெஞ்சிலே பால் வார்த்த அவரது வார்த்தைகளை சுமந்து கொண்டு புத்துணர்ச்சி யுடன் வெளியே வந்தேன்.
இப்படித்தான் எனக்கும் தேவநாயகம் ஐயா  அவர்களுக்குமான உறவு ஆரம்பித்தது. சிறிது காலமே ஆனாலும் நாளாந்தம் அவரை சந்திப்பதும் உரையாடுவதுமாக சில காலங்கள் கழிந்தன. அவருடனான நெருக்கம் அலுவலக எல்லைகளைத் தாண்டி அவரது வீடு வரை சென்றது.
அது குறித்து விவரமாக எதிர்காலத்தில் எழுதுவேன். இப்போது சுருக்கமாக விடயத்தை வருகின்றேன்.
1965 தொடங்கி சுமார் 25 வருடங்களாக கல்குடா தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வருபவர் அவர். இப்போது 1989 மட்டக்களப்பில் மீண்டும் அவர் தேர்தல் களமாட வேண்டிய நிலை.  சுமார் பத்து ஆண்டுகள் மட்டக்களப்பு பக்கம் தலை வைத்து படுக்க முடியாத பயங்கரவாத சூழல்.
ஆனாலும் அவர் அமைச்சர். முதலில் நீதி அமைச்சர். பின்னர் உள்நாட்டு அலுவலர்கள் அமைச்சர்.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் படி இந்திய அமைதி காக்கும் ராணுவம் மட்டக்களப்பிலும் நிலை கொண்டிருந்த காலம் அது. இத்தனைக்கும் மத்தியில் தான் கிழக்கு மாகாணத்துக்கான அந்த பல்கலைக்கழகத்தை அவர் கட்டியமைத்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர். அமைச்சர். இவை போதுமே துரோகி என்று சுட்டுக் கொல்வதற்கு. எனவே சொந்த மண்ணில் களம் இறங்கி
தேர்தலில் போட்டி போட்டு பிரச்சாரம் செய்ய எவ்வித வாய்ப்புகளும் அவர் முன் இருக்கவில்லை.
இந்திய ராணுவமும் அமைதியை ஏற்றுக்கொண்ட ஒரு சில முன்னாள் தீவிரவாத இயக்கங்களும் ஒரு புறம். மறுபுறமோ அமைதியா? அது நாமிருக்கும்  வரை நடக்காதது என்கின்ற புலிப்படையினர்.
இதற்கிடையே தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. அவரது அலுவலகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றேன். நான் வாசலை அடையவும் அவரது வாகனங்கள் வாசலின் ஊடாக வெளியே புறப்பட்டு செல்கின்றன.
ஐயாவுக்கு மிக நெருக்கமானவரான வாழைச்சேனை 'பக்கர் நானா' உள்ளே இருந்து ஐயாவின் வீட்டுக்கு சென்று காத்திருக்குமாறு எனக்கு சைகை செய்கிறார்.
'ஜனாதிபதி அழைத்திருக்கிறார். அதனால் தான் அவசரமாக செல்கிறார்கள்.'
என்று அந்த பாதுகாப்பு அதிகாரி சொன்னதை  புரிந்து கொள்ளும் அளவுக்கு சிங்களமும் தெரியத் தொடங்கியிருந்தது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தேவநாயகம் அய்யாவை நோக்கி சொல்லுகிறார்.
"நீங்கள் தேர்தலில் எல்லாம் போட்டி போட வேண்டாம்.தேசியப் பட்டியலில் எம்பி ஆகுங்கள்" அதற்கு அவர் சொன்னார்.
"இல்லை நான் என்னால் முடிந்த
வரை மட்டக்களப்புக்குத் தொண்டாற்றியிருக்கின்றேன். மட்டக்களப்பில் போட்டியிடுவேன். ஒன்றில் வெற்றியடைவேன். இல்லாவிட்டால் மட்டக்களப்பு மடையர்கள் என்னை தோற்கடித்தார்கள் என்கின்ற வரலாறு இருக்கட்டும். ஆனாலும் என்றோ ஒரு நாள் அதையிட்டு எனது மக்கள் மனந்திரும்பும் காலம் வரும். அப்போது அவர்களுக்கு எனது மகிமை புரியும்"
தோல்வி நிச்சயம் என்று தெரிந்தும் அதனை எதிர்கொண்டே தேர்தலில் போட்டியிடுவதற்கு தனியான நெஞ்சுறுதி வேண்டும். படுதோல்வி அடைந்தார்.
மட்டக்களப்பில் அவர்  தோல்வி கண்டு 30 வருடங்கள் கடந்துவிட்ட ன. அவர் காலமாகியும் சுமார் 20 வருடங்கள் ஓடிவிட்டன.
ஆனால் இன்று மட்டக்களப்பு தமிழகத்தில் அவரது மகிமை புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.
அவர் கட்டி எழுப்பிய கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அவரது திரு உருவச்சிலை எழுப்பப்பட்டிருக்கிறது.
யாழ் மையவாத தமிழ் தேசியம் கற்பித்த  "நேற்றைய துரோகிகள்" இன்று மட்டக்களப்பு தமிழகத்தில் துதிக்கப்படுகின்றார்கள். சிலை வடித்து போற்றப்படுகிறார்கள்.
இதுபோலத்தான் "இன்றைய துரோகி"களுக்கும் நாளை.....
ஆம் இனி தீர்ப்புகள் திருத்தி எழுதப்படும் காலம்.

கருத்துகள் இல்லை: