ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

பரபரப்பு.. கோவை பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த இருவர் கைது

tamil.oneindia.com -vigneshkumar   :  கோவை: கோவையில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், இது தொடர்பாகக் கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்,
கடந்த வியாழக்கிழமை இரவு கோவை மாவட்டம் சித்தாபுதூர் பகுதியில் மாநகர பாஜக அலுவலகம் மீது அடையாளம் தெரியாத சில நபர்கள் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசினர்.
அதைத்தொடர்ந்து கோவை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறின. இதனால் கோவையில் பதற்றம் ஏற்பட்டது.
கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள துணிக் கடை, பொள்ளாச்சியில் எனப் பல இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தன. இந்தச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்ய வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தினர்,

இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன், அசாதாரண சூழலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை குறித்து விளக்கினார்.

பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்று தெரிவித்த அவர், கைது செய்யப்பட்டவர்கள் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மூலன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

மேலும், கோவையில் நடந்த மற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களிலும் குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம் என்றும் குறிப்பாக 2 வழக்குகளில் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.

கோவையில் பெட்ரோல் வீச்சு சம்பவங்கள் நேற்றுடன் நின்றுவிட்டன என்றும் இதில் தொடர்புடைய அனைவரும் விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

ஜேசுராஜ், இலியாஸ் ஆகிய இருவரை பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் கைது செய்துள்ளனர். அவர்கள் எஸ்டிபிஐ கட்சி பொறுப்பில் இருப்பவர்கள் என்றும் காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: