திங்கள், 26 செப்டம்பர், 2022

செந்தில்பாலாஜி செலக்ட் செய்த மாசெக்களின் பின்னணி!

மின்னம்பலம் : கோவை மாவட்டத்தில் ஏற்கனவே இருந்த ஐந்து மாவட்டங்களை மூன்றாகக் குறைத்தார் அம்மாவட்ட பொறுப்பு அமைச்சரான செந்தில்பாலாஜி. ஏற்கனவே இருந்த ஐந்து மாவட்டச் செயலாளர்களில் மாநகர் மாவட்டத்தின் கார்த்திக் முன்னாள் எம்.எல்.ஏ.வை தவிர மற்ற நான்கு பேர்களையும் பதவியில் இருந்து நீக்கிவிட்டார் செந்தில்பாலாஜி.
அவர்களுக்கு பதிலாக கோவை தெற்கு மாவட்டத்துக்கு தளபதி முருகேசன், கோவை வடக்கு மாவட்டத்துக்கு தொ.அ.ரவி ஆகியோரையும் கோவை மாநகர் மாவட்டத்துக்கு கார்த்திக்கையும் தேர்வு செய்திருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி.  23 ஆம் தேதி அறிவாலயத்தில் இவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் தினத்தன்று காலை தன் வீட்டுக்கு அழைத்து பேசி நிர்வாகிகள் மத்தியில் புதிய மாவட்டச் செயலாளர்களை அறிமுகப்படுத்தினார். அதன் பிறகுதான் அவர்கள் அறிவாலயத்துக்கே சென்று தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்கள்.

இந்த நிலையில் செந்தில்பாலாஜி செலக்ட் செய்த மாவட்டச் செயலாளர்களின் பின்னணி என்ன என்ற விவரத்தைப் பார்ப்போம்.

கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் நா. கார்த்திக்

coimbatore senthil balaji selected district secretary Background

சிங்காநல்லூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் கார்த்திக். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார். நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர். திமுகவின் தலைமைக்கு நெருக்கமான அமைச்சர் எ.வ. வேலு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கோவை மாவட்டத்தை கவனித்துக் கொண்டிருந்தார்.

அப்போது வேலுவுக்கு மிகவும் நெருக்கமானவராக மாறினார் கார்த்திக். வேலு மூலம் பல பலன்களையும் அடைந்தார். ஆட்சிக்கு வந்ததும் கோவை மாவட்டத்துக்கு செந்தில் பாலாஜி பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதன் பின் வேலுவை பார்ப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டார் கார்த்திக்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் திமுக வேட்பாளராக கார்த்திக் போட்டியிட்டார். கார்த்திக்கின் வீடு அமைந்துள்ள அவரது சொந்த பூத்திலேயே அவர் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். இவர் திமுகவில் இருந்து மதிமுகவுக்கு சென்று மீண்டும் திமுகவுக்கு வந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

ஆரம்பத்தில் கார்த்திக்கை மீண்டும் மாவட்டச் செயலாளர் ஆக்கும் எண்ணம் செந்தில்பாலாஜிக்கு இல்லை. ஆனால் இந்த மாவட்டத்தில் நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்தவரை மாவட்டச் செயலாளராக தேர்வு செய்வதுதான் உசிதம் என்பதால் அதே சமுதாயத்தைச் சேர்ந்த வேறு சிலரை தேடியிருக்கிறார் செந்தில்பாலாஜி.

ஆனால் மாவட்டச் செயலாளர் அளவுக்கு அந்த சமுதாயத்தில் யாரும் கிடைக்காததால், கார்த்திக்கே இருக்கட்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் செந்தில்பாலாஜி என்கிறார்கள் அமைச்சருக்கு நெருக்கமானவர்கள்.

கோவை தெற்கு தளபதி முருகேசன்

coimbatore senthil balaji selected district secretary Background

தளபதி முருகேசன் தற்போது சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளராக இருக்கிறார். கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். கொரோனா காலத்திலும் ஆக்டிவ்வாக செயல்பட்ட ஒன்றிய செயலாளர்களில் ஒருவர்.

இவர் ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றியவர். பின் தேமுதிகவுக்குச் சென்று அங்கிருந்து திமுகவுக்கு வந்தவர். இப்போது செந்தில்பாலாஜியால் மாவட்டச் செயலாளர் என்ற அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டிருக்கிறார்.

கோவை வடக்கு தொ.அ. ரவி

coimbatore senthil balaji selected district secretary Background

தொண்டாமுத்தூர் ஒன்றிய செயலாளராக இருந்த தொ.அ.ரவி கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக அமைச்சர் செந்தில்பாலாஜி நியமிக்கப்பட்டபோதே அவருடன் நெருக்கமாகிவிட்டார்.

ஒக்கலிக கவுடர் சமுதாயத்தைச் சேர்ந்தவரான தொ.அ.ரவியின் மனைவி தற்போது தொண்டாமுத்தூர் பேரூராட்சித் தலைவராக இருக்கிறார். ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ரவி ஆரம்ப காலத்தில் திமுகவில் இருந்து பின் மதிமுக சென்று மீண்டும் திமுகவுக்கு வந்தவர்.

இன்னமும் தலைமையால் முறைப்படி மாசெவாக அறிவிக்கப்படாவிட்டாலும் செந்தில்பாலாஜி தன் சென்னை வீட்டில் வைத்து அறிவித்து விட்ட அடிப்படையில் இன்று (செப்டம்பர் 25) ஞாயிற்றுக் கிழமை தன் வீட்டில் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற தொடங்கிவிட்டார்.

coimbatore senthil balaji selected district secretary Background

தளபதி முருகேசன், ரவி ஆகிய இருவருமே பெரிய அளவு பொருளாதாரப் பின்னணி கொண்டவர்கள் இல்லை என்கிறார்கள் லோக்கல் திமுகவினர்.

மேலும், “மாவட்டச் செயலாளர்களும் சரி, புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மாவட்ட நிர்வாகிகளிலும் கணிசமானோர் வேறு கட்சிகளில் இருந்து திமுகவுக்கு வந்தவர்கள்” என்ற முணுமுணுப்பு கோவை முழுதுமே பரவலாகக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

வேந்தன்

கருத்துகள் இல்லை: