வெள்ளி, 30 செப்டம்பர், 2022

காங்கிரஸ்: அடுத்த தலைவர் திக் விஜய் சிங்? கெலாட் ஒதுங்கிய பின்னணி!

 minnambalam.com - Selvam  :  காங்கிரஸ்: அடுத்த தலைவர் திக் விஜய் சிங்? கெலாட் ஒதுங்கிய பின்னணி!
காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சி மூத்த நிர்வாகியுமான திக்விஜய்சிங் இன்று (செப்டம்பர் 29)காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் வேட்புமனு  படிவங்களைப்   பெற்றுச் சென்றுள்ளார்.
காந்தி குடும்பம் அல்லாத ஒருவரை காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கும் நோக்கில், காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி நடைபெற உள்ளது.


இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் முடிவுகள் அக்டோபர் 19-ஆம் தேதி அறிவிக்கப்படுகிறது.
நாளை திருவனந்தபுரம் எம்.பி சசிதரூர் வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ள நிலையில் இன்று காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான திக் விஜய்சிங் வேட்பு மனு படிவத்தை பெற்றுச் சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து திக்விஜய் சிங் நாளை வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார்.
இதனால் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இருவர் மட்டுமே போட்டியிடப்போவது உறுதியாகியுள்ளது.
முன்னதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடப்போவதாக கூறியிருந்த நிலையில், ராஜஸ்தான் முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க மறுத்து விட்டார்.
கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்பதில் கறாராக இருந்த சோனியா காந்தி இதனை அனுமதிக்கவில்லை.
மேலும் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் மல்லிகார்ஜூன கார்கே, அஜய் மக்கான் தலைமையில் ராஜஸ்தானில் நடந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில்,

கெலாட் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சி தலைவராக கெலாட் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே ராஜஸ்தான் முதல்வர் குறித்து ஆலோசனை நடத்த வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினர்.
இதனால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கெலாட் காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்பதில் ஆர்வம் காட்டவில்லை.

இந்தநிலையில், இன்று டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அசோக் கெலாட் தான் காங்கிரஸ் தலைவர் பதவியில் போட்டியிடப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
திக்விஜய் சிங் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவராக உள்ளதால், அவர் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதை சோனியா காந்தி விரும்புவதாகவும், இதனால் அவர் அடுத்த காங்கிரஸ் கட்சி தலைவராவார் என்று காங்கிரஸ் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செல்வம்

கருத்துகள் இல்லை: