செவ்வாய், 27 செப்டம்பர், 2022

தமிழிசை சவுந்தரராஜன் : ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்துவதில் என்ன தவறு?- தெலுங்கானா கவர்னர் தமிழிசை ....

மாலைமலர் : சென்னை:  தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை ஆளுனருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடி சுய சார்பு கொள்கையை பற்றி இப்போது வலியுறுத்தி வருகிறார். இதை அந்த காலத்திலேயே செய்து காட்டியவர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார். பேனா தயாரிப்பது எப்படி? மை தயாரிப்பது எப்படி? மெழுகு தயாரிப்பது எப்படி என்று தொழில் வளர்ச்சி பற்றிய புத்தகத்தையே எழுதி இருப்பது பெருமையாக உள்ளது.
பத்திரிகை செய்தியை தந்தி போல் விரைவாகவும் கொடுக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர். நீதிமன்றம், சட்டமன்றம் என்று எல்லா துறைகளிலும் அவர் வகிக்காத பதவிகள் இல்லை.
பெட்ரோல் குண்டு வீசுவது தமிழர்கள் கலாசாரம் கிடையாது. எந்த மாநிலத்திலும் இந்த மாதிரி சம்பவங்கள் நடக்கக்கூடாது. சமய சார்பற்ற யார் மீதும் பாரபட்சம் காட்டாத அமைதியான வாழ்க்கை தொடர வேண்டும்.

பாதுகாப்பு கருதி சில சோதனைகள் செய்யும் போது அதை தனிப்பட்ட பிரச்சினையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. சில அமைச்சர்கள் மீதான எதிர்ப்பு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி விடக் கூடாது. ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் பல சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இயக்கம்தான்.

நானே முன்பு அந்த இயக்க நிகழ்ச்சிகளில் கலந்து இருக்கிறேன். அந்த இயக்கத்தின் சார்பில் அமைதியாக நடத்தும் ஊர்வலத்தை ஏன் தடை செய்ய வேண்டும்.

காந்தி ஜெயந்தி தினத்தில் எப்படி ஊர்வலம் நடத்தலாம் என்கிறார்கள். அதில் என்ன தவறு. அவர்களும் தேச உணர்வும், பற்றும் உள்ளவர்கள் தான். எனவே அந்த நாளை தேர்வு செய்து இருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: