dinkaran : சென்னை: புகழ்பெற்ற எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமான இளவேனில் (70) மாரடைப்பால் காலமானார். கலைஞரின் கதை, வசனத்தில் உருவான உளியின் ஓசை படத்தை இயக்கியவர் இளவேனில்; பல நூல்களையும் எழுதியுள்ளார்.
LR Jagadheesan : · இந்த ஆண்டும் இப்படியொரு பேரிழப்போடு தொடங்கியிருக்க வேண்டாம். எனது ஊடக உலகின் ஆசான் சின்னக்குத்தூசி தியாகராஜன் அறையில் அறிமுகமான பலப்பல அற்புத ஆளுமைகளில் மறக்க முடியாதவர். மக்களை நேசித்த; மண்ணில் தம் கால்கள் நிலைகொண்டவர்கள் மட்டுமே தினம் தினம் கூடிக்கலைந்த வேடந்தாங்கலாக அந்த அறை இருந்தது. Seasonal வேடந்தாங்கல் அல்ல. வருஷம் முழுக்க அது நிரந்தர வேடந்தாங்கலாக நீடித்தது. புன்னகை மாறா முகம். கூர்மையான அதேசமயம் நகைச்சுவை ததும்பும் பேச்சு. வலுவான வாதங்கள். அவரது கேள்விகள் எளிமையாய்த்தான் வெளிப்படும். ஆனால் அவை ஒவ்வொன்றுமே எதிர்தரப்பை சிக்கவைக்கும் கொக்கிகள் என்பதை அவர்கள் உணர்வதற்குள் அவர்கள் இவரிடம் வாதத்தில் தோற்றுவிட்டிருப்பார்கள்.
அவர் அரசியலில் கம்யூனிஸ்டாகத்தான் உருவானார். ஆனால் திராவிடத்தின் மீது தீராக்காதல் கொண்ட தமிழ்க்காதலனாகவே அவர் இறுதியில் பரிணமித்தார். உண்மையான கம்யூனிஸம் தேங்கிய குட்டையோ என்றோ எழுதப்பட்ட எழுத்தின் புனிதத்தை காக்கும் மத அமைப்போ அல்ல; மக்களின் வாழ்வியலில் அவர்களின் வரலாற்றுப்பயணத்தில் கால, தேச வர்த்தமான தேவைகளுக்கேற்ப தன்னை தொடர்ந்து புதுப்பித்து மாற்றியமைத்துக்கொண்டு வளர்ந்து பரவி வியாபிக்கும் வற்றாத ஜீவநதி என்கிற கோணத்தில் இடதுசாரி அரசியலை முன்னெடுத்த மிகச்சில கம்யூனிஸ்டுகளில் அவர் முதன்மையானவர். அதன் விளைவு அவர் விரும்பிய கம்யூனிஸம் தமிழ்மண்ணில் திராவிடர் இயக்கமாக வேர்பிடித்து வளர்ந்தோங்கி நின்றதை அவர் வெளிப்படையாக ஆமோதித்தார். ஆதரித்தார். உண்மையான தமிழ் படைப்பாளியாக ஒருவகையில் அவர் அதை ஆராதிக்கவும் செய்தார். அதற்கான அவரது சாட்சியங்களே அவரது பலப்பல அரசியல் கட்டுரைகள்; புத்தகங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக