தங்கள் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, வரும் சட்டசபை தேர்தலில், 10 தொகுதிகளில் போட்டியிட்டு, ஆறு தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில், ம.தி.மு.க., மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளன. அதற்கு, தனி சின்னத்தில் போட்டியிட வேண்டியதும் அவசியம். பிடிவாதம்.... இந்த காரணத்திற்காக, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்டவை, குறைந்தபட்சம் தலா, 10 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என, தி.மு.க., கூட்டணியில் பிடிவாதம் பிடிக்கின்றன. ஆனால், இவ்வளவு தொகுதிகள் ஒதுக்கி, தனி சின்னத்தில், இக்கட்சிகள் போட்டியிட்டால், வெற்றி வாய்ப்பு கேள்விக்குறி என, தி.மு.க., கருதுகிறது.மேலும், இக்கட்சிகள் தனிச் சின்னத்தில் போட்டியிட்டால், அந்த தொகுதிகளில், அ.தி.மு.க.,வுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்றும், தி.மு.க., நம்புகிறது.
அ.தி.மு.க.,வின் வெற்றிக்கு, நாமே காரணமாகி விடக் கூடாது என்பதால், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க., - வி.சி., - ஐ.ஜே.கே., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு, குறைந்த அளவில் தொகுதிகளை ஒதுக்க நினைக்கிறது.அதிலும், ம.தி.மு.க., - வி.சி., - ஐ.ஜே.கே., கட்சிகள், தனிச் சின்னத்தில் போட்டியிடுவதை, தி.மு.க., அறவே விரும்பவில்லை. அக்கட்சிகள், தங்களின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டாக வேண்டும் என்றும், நிபந்தனை விதிக்கிறது.அப்படி போட்டியிட்டால், தங்களின் அடையாளம் அழிந்து, கட்சிக்கு தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் கிடைக்காமல் போய் விடும் என, ம.தி.மு.க., - வி.சி., - ஐ.ஜே.கே., உள்ளிட்ட கட்சிகள் அஞ்சுகின்றன.
கொடிபிடிப்பு
அதனால்,
தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்றும், குறைந்தபட்சம், 10
தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும், கொடி பிடிக்கின்றன. இது,
தி.மு.க.,வில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. கூட்டணிக் கட்சிகளுக்கு
ஆதரவாக உள்ள, பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட மூத்த தலைவர்கள் சிலர்,
'வைகோ, திருமாவளவன் போன்றவர்களை அரவணைத்து செல்ல வேண்டும்; அது தான்
தி.மு.க.,வுக்கு நல்லது' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலினிடம்
வலியுறுத்துகின்றனர்.
அதேநேரத்தில், பொதுச்செயலர் துரைமுருகன்
போன்றோர், 'இந்த தேர்தலில் கூட்டணி பலம் தேவையில்லை; அதனால், அக்கட்சிகளை
கழற்றி விட்டு விடுங்கள்' என, ஸ்டாலினிடம் கூறுகின்றனர். இதில், யார்
பேச்சை கேட்பது என்ற, புதிய குழப்பம், ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளது.
சென்னை அறிவாலயத்தில், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு குறித்த
பேச்சு நடந்தபோது, முன்னாள் அமைச்சர் ஒருவர், 'நம்மை மதிக்காத, எந்த
கட்சியுடனும் கூட்டணி வேண்டாம். தனித்தே போட்டியிட்டால், டிபாசிட் கிடைக்க
கூட வழியில்லாத கட்சிகள், நம்மை மிரட்டிப் பார்க்கின்றன. இதை அனுமதிக்கக்
கூடாது.
'அவர்கள் கேட்கும் அளவுக்கு, சீட் தரக் கூடாது. வேண்டாம் என
ஒதுக்கி வைத்து விட்டு, நம் வழி, தனி வழி எனச் சென்றபடி இருக்க வேண்டும்'
என்றார்.அவரது கருத்தை ஏற்காத, மூத்த எம்.பி., ஒருவர், 'அவசரப்பட்டு, எந்த
முடிவும் எடுக்க வேண்டாம். அது, நமக்கு தான் ஆபத்து. கூட்டணி இல்லாமல்,
தி.மு.க., வெற்றி பெற்ற வரலாறு கிடையாது.
தவறான முடிவு
'அதனால், அக்கட்சிகளை திருப்திப்படுத்தும் வகையில், சீட் பங்கீட்டில் நடந்து கொள்ள வேண்டும்' என, எச்சரித்துள்ளார். இதுகுறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
ஒரு பக்கம், அதிக இடங்கள் கேட்டு மிரட்டும் கூட்டணிக் கட்சிகள்; மறுபக்கம், ஆளாளுக்கு மாறுபட்ட கருத்து சொல்லும் நிர்வாகிகள். இவர்களுக்கு இடையில் சிக்கி, ஸ்டாலின் தவிக்கிறார்.கூட்டணி கட்சிகளின் பிடிவாதம், மூத்த நிர்வாகிகளை மட்டுமின்றி, ஸ்டாலினையும் எரிச்சல் அடைய வைத்துள்ளது. அதனால் தான், கூட்டணியா; தனித்து போட்டியா என்ற, குழப்பம் ஏற்பட்டுள்ளது.
போதாத குறைக்கு, 'ஐபேக்' தருகிற ஆலோசனையும், தி.மு.க.,வுக்கு பிரச்னை மேல் பிரச்னையாக உள்ளது. கூட்டணி தொடர்பாக, கட்சித் தலைமை தவறான முடிவு எடுத்து விடக் கூடாது என்பது தான், எங்களுக்கு கவலையாக உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர். - நமது நிருபர் -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக