Veerakumar - tamil.oneindia.com : சென்னை: திமுக கூட்டணியில் உள்ள மொத்தம் மூன்று கட்சிகள் வரும் சட்டசபை தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட போவதில்லை என்றும் தங்கள் கட்சி சின்னத்தில் தான் போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளன. இந்த மூன்று கட்சிகளுமே கடந்த லோக்சபா தேர்தலின்போது தங்கள் கட்சி வேட்பாளர்களை உதயசூரியன் சின்னத்தில் நிற்க வைத்து வெற்றி பெற வைத்தவர்கள் என்பதுதான் இதில் கவனித்து பார்க்கப்படும் அம்சமாக இருக்கிறது. யார் அந்த மூன்று கட்சிகள்? எதற்காக சட்டசபை தேர்தலுக்கு மட்டும் இவர்கள் திடீரென சின்னத்தை ஒரு பிரச்சினையாக கிளப்புகிறார்கள்?
பார்க்கலாம் வாருங்கள். தனிச் சின்னத்தில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளதில் ஒருவர், வைகோ.
மதிமுக கட்சிக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே அந்த
சின்னத்தில் நிற்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். கடந்த ஓராண்டாகவே
பொதுவெளிகளில் திமுக கூட்டணிக்கு அவர் ஆதரவு தெரிவித்து அதிகம் பேட்டிகள்
கொடுத்து பார்த்ததில்லை. ஆனால் கட்சி சின்னம் விஷயத்தில் மட்டும் கறாராகப்
பேச தொடங்கிவிட்டார்.
விடுதலை சிறுத்தைகள்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தங்கள் கட்சியும் தனி
சின்னத்தில் தான் போட்டியிடும் என்று தெரிவிக்கிறார். ஆனால் விசிகவின்
மோதிரம் சின்னம் இப்போது அவர்களிடம் இல்லை. எனவே, புதிதாக ஒரு சின்னத்தை
அவர்கள் பெற்று அதில் நிற்க வேண்டும். தங்கள் கட்சி சின்னத்தில் போட்டியிட
போவதாக அறிவித்துள்ள மற்றொரு கட்சி இந்திய ஜனநாயக கட்சி. அதன் தலைவர்
பாரிவேந்தர் அளித்துள்ள பேட்டியில், தங்கள் கட்சிக்கு 6 தொகுதிகளை
ஒதுக்குமாறு திமுக கூட்டணியிடம் கேட்டுள்ளதாகவும், அவ்வாறு ஒதுக்காவிட்டால்
234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
திமுக தலைமைக்கு யோசனை
கூட்டணி கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் கூட்டணிக்கு
வெற்றி கிடைப்பது எளிது என்பது ஸ்டாலின் கணக்கு. ஆனால், தனித்தனி சின்னம்
கேட்பதால் திமுக தலைமை யோசனையில் உள்ளது. இந்த கட்சிகள் எதற்காக மிகப்
பிரபலமான உதயசூரியன் சின்னத்தை விட்டுவிட்டு தங்கள் சின்னத்தில் போட்டியிட
வேண்டும் என்று பிடிவாதம் காட்டுகின்றன என்பது பற்றி சில அரசியல்
பார்வையாளர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.
கட்சிகளுக்கு அவசியம்
அதில் ஒருவர் நம்மிடம் கூறுகையில், குறிப்பிட்ட அளவுக்கு வாக்கு சதவீதம்
பெற வேண்டும் என்பது ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் உள்ள நிர்பந்தம். அவ்வாறு
செய்யாவிட்டால் அந்த கட்சியின் சின்னம் பறிபோய்விடும். மதிமுக ஏற்கனவே
குடை சின்னத்தை இழந்தபிறகு பம்பரம் சின்னத்தை பெற்றுள்ளது. இப்போது அந்த
சின்னத்தை இழக்க அவர்கள் தயாராக இல்லை. திருமாவளவனுக்கும் இதே போன்ற நிலை
உள்ளது. தங்கள் கட்சி அங்கீகாரத்தை தக்க வைக்க அவர்களுக்கு இது உதவும்,
என்கிறார் அவர்.
கூட்டணி கட்சிகளின் யுக்தி
வேறு சில அரசியல் பார்வையாளர்களோ, இதன் பின்னணியில் ஒரு திட்டம் இருப்பதாக
கூறுகிறார்கள். சட்டசபை தேர்தல், திமுகவுக்கு, வாழ்வா சாவா என்ற நிலையில்
உள்ள ஒரு தேர்தலாகும். லோக்சபா தேர்தலில் திமுக அப்படியான நிலையில் இல்லை.
கடந்த இரண்டு சட்டசபை தேர்தல்களில் தோற்றதால் ஸ்டாலின் தலைமையில் இந்த முறை
எப்படியும் வெல்ல வேண்டும் என்பது அந்த கட்சியின் குறிக்கோள். எனவே ஒரு
சிறு கட்சியையும் கூட்டணியில் இருந்து விட்டு விடக் கூடாது என்பதில் திமுக
தலைமை உறுதியாக இருக்கிறது. இந்த நோக்கத்தை பயன்படுத்திக் கொண்டு, முடிந்த
அளவுக்கு அதிகமான தொகுதிகளில் போட்டியிட கூட்டணி கட்சிகள் கேட்க
ஆரம்பித்துள்ளன.
திமுக கூட்டணி
கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த இடங்களை கொடுத்துவிட்டு அதிக தொகுதிகளில்
திமுக நேரடியாக போட்டியிட வேண்டும் என்று ஸ்டாலின் விரும்புகிறார். எனவே
சின்னம் என்ற ஒரு பிரச்சினையை இப்போது கிளப்பினால்தான், தாங்கள் கேட்கும்
தொகுதிகளில் ஓரளவுக்காவது ஒதுக்கீடு செய்ய திமுக தலைமை முன்வரும் என்று
கூட்டணி கட்சி தலைவர்கள் பலரும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எனவேதான் சின்னம் பிரச்சினையை கிளப்பி திமுக தலைமைக்கு செக் வைக்க முயற்சி
செய்கிறார்கள், என்கிறார் மற்றொரு அரசியல் பிரமுகர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக