இப்பொழுது தேர்தலில் தான் தோல்வியடைந்தாலும் அதனை நாகரீகமாக ஏற்றுக் கொண்டு நகரும் பண்பு இல்லாத குணத்தால், தான் ஏற்கெனவே ஊட்டி வைத்திருந்த நச்சுக் கூட்டத்திற்கு தூபம் போட்டு உலகமே பார்த்து சிரிக்கும் வகையில் ஒரு கூத்தை அரங்கேற்றி கோமாளி ஆகி நிற்கிறார் உலகரங்கில்.
இது அமெரிக்காவிற்கான அவமானமாக நான் பார்க்கவில்லை. ஒரு முட்டாளின் ஆதி அந்தம் தெரியா தற்குறித்தனமான ஒருவரிடத்தில் ஆட்சி அதிகரம் கையளிக்கப்பட்டால் என்ன நடக்கும் என்பதையே காட்டக் கூடிய நிகழ்வாகப் பார்க்கிறேன். அந்த இடம் தாமஸ் ஜெஃப்பர்சன், லிங்கன், ரோசவெல்ட், கென்னடி போன்ற சிறந்த மனிதர்கள் வந்து போன இடம், இன்று இப்படி ஒரு மனிதர் அந்த இடத்தை கடந்து சென்றிருக்கிறார்.
ட்ரம்ப் அடித்த அத்தனை அலுச்சாட்டியத்தையும் இவருக்கு முன்னால் வந்து போன அந்த மனிதர்களின் மாண்பே மக்களாட்சியின் பொருளை காப்பாற்றி இன்று கரை சேர்த்திருக்கிறது. இதுவே உலகத்திற்கு அமெரிக்காவின் ஓர் ஒழுங்குடன் ஒழுகும் டெமாக்ரசி சொல்லும் செய்தி.
இதுவே ஒரு நாள் இந்தியாவிற்கும் டெஸ்டிங் டைமாக வரலாம். இப்பொழுது அந்த திசையை நோக்கித் தான் நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். நல்வாய்ப்பாக அமெரிக்காவின் ஊடகங்களும், நீதித் துறையும் இந்திய அளவிற்கு சிதைந்து போய் விடாமல் இருந்ததால் இன்று அமெரிக்க டெமாக்ரசி மிக்க சேதாரமில்லாமல் மீட்டெடுக்கப்பட்டுக் கொண்டுள்ளது.
ஆனால், நம் நாட்டில் அதற்கும் வாய்ப்பில்லை. இருண்ட காலம் நமக்கு முன்னால் காத்திருக்கிறது. மீட்டெடுப்பு என்பது மற்றுமொரு சுதந்திர போராட்ட நிகழ்வைக் காட்டிலும் மிக்க உழைப்பை கோரி நிற்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக