நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கு, மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. 2019-ம் வருடம் பிப்ரவரி மாதம், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் ஒரு கல்லூரி மாணவி அளித்த ஒரு புகார், தமிழகத்தையே அதிர வைத்தது. அந்தப் பாலியல் புகார் விசாரணையின் அடுத்தடுத்த நகர்வுகளில், அவரைப்போல பல இளம் பெண்களும் கல்லூரிப் பெண்களும் குற்றம் சுமத்தப்பட்டவர்களால் பாதிக்கப்பட்டிருப்பதும், அந்தக் குற்றங்களில் அரசியல் பின்புலம் இருப்பதும் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த வழக்கில் ஏற்கெனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஹெரோன் பால் (29), பைக்பாபு என்கிற பாபு (27), அருளானந்தம் (34) ஆகியோர் சி.பி.ஐ போலீஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் அருளானந்தம் பொள்ளாச்சி அ.தி.மு.க மாணவரணிச் செயலாளராகப் பதவி வகித்தார். இந்தத் தகவல் வெளியானவுடன், ஓ.பி.எஸ், இ.பி.எஸ் அவரை அ.தி.மு.க- விலிருந்து நீக்கியுள்ளனர். கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிரடிகாட்டும் சி.பி.ஐ! - அ.தி.மு.க-வுக்கு நெருக்கடியா?
`பெண்களின் எதிரி அ.தி.மு.க’ என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. இந்நிலையில், கோவை நீதிமன்றத்தில், கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக கோஷமிட்ட, தி.மு.க மகளிரணியினர் மற்றும் மாதர் சங்கத்தினரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க குரல் கொடுத்து வந்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க கோவை மாவட்டச் செயலாளர் ராதிகாவிடம், இந்தக் கைது குறித்து பேசினோம். ``இந்தக் குற்றச் சம்பவத்தை வெளியில கொண்டுவராம இருக்குறதுக்கான எல்லா செயல்களையும் தமிழ்நாடு அரசு செஞ்சது. காவல்துறை அதுக்கு துணை நின்னுச்சு. பாலியல் வழக்குகள்ல பாதிக்கப்பட்ட பெண்ணோட பெயரை வெளியிடக் கூடாது. ஆனா, அப்போ போலீஸ் எஸ்.பி பாண்டியராஜன் அந்த விவரங்களை வெளியிட்டார். நீதிமன்றமும் அதைக் கண்டிச்சது. அப்புறம் அவர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாத்தப்பட்டார். காவல்துறை போதிய ஆதாரங்கள் கொடுக்காததால, கைது செய்யப்பட்டவங்க மேல போடப்பட்டிருந்த குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுச்சு.....இதுல, ஹெரோன் பால் அப்பவே போலீஸால கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். அவரை மீண்டும் சி.பி.ஐ கைது செய்ததைக் கவனிச்சாலே, போலீஸாரோட செயல்பாடுகள நல்லா புரிஞ்சுக்க முடியும். இந்தக் குற்றவாளிகளுக்கு எதிராக கோஷம்கூட போட அனுமதிக்காம கைது பண்றாங்க. அதே நேரம், ஆயிரக்கணக்கானோரை வெச்சு ஆளும்கட்சி போடும் கூட்டங்களுக்குக் காவல்துறை பாதுகாப்பு கொடுக்குது. காவல்துறையோட அராஜகத்தை நாங்க கடுமையா கண்டிக்கிறோம்.
இது ஒருவரோ, இருவரோ மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. இதோட பின்னணியில மிகப்பெரிய கும்பல் இருக்கு. தமிழ்நாட்ல பெண்கள், குழந்தைகள் மீது வன்முறைகள் அதிகரிச்சுட்டே இருக்கு. பொதுமக்களுக்கு நம்பிக்கை அளிக்கிற வகைல, குற்றவாளிங்க மீது நடவடிக்கை எடுக்கணும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேணும். எந்த அரசியல் அழுத்தமும் இல்லாம செயல்படணும்” என்றார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்குக்கு எதிராகக் குரல் கொடுத்து வருபவர்களில் ஒருவரான மக்கள் நீதி மய்யம் கட்சி மாநில மகளிரணிச் செயலாளர் மூகாம்பிகை ரத்தினத்திடன் இது குறித்துப் பேசியபோது, ``இப்போ கைது செய்யப் பட்டிருக்கிறவங்க எல்லாருமே, ஏற்கெனவே போலீஸால கைது செய்யப்பட்டு உள்ள போயிட்டு வந்தவங்கதான். இப்போ, அவங்களை திருப்பி கைது பண்றது மூலமா, வழக்கை அவசர அவசரமாக முடிக்கப் பாக்கறாங்களோனு சந்தேகம் வருது. தேர்தல் நெருங்கிறதால, வேற யாரையோ காப்பாத்துறதக்காக இவங்களை கைது பண்ணிருக்காங்க.
யார் தப்பு செஞ்சாலும் அது தப்புதான். ஆனா, இதுல அரசியல் பின்புலத்தோட இருக்கிறவங்க காப்பாத்தப்படுற மாதிரி தெரியுது. பொள்ளாச்சி மக்களும் அப்படித்தான் நினைக்கிறாங்க. எனவே, சி.பி.ஐ பாரபட்சம் பார்க்காம, இந்த வழக்குல சம்பந்தப்பட்ட எல்லாரையும் கைது பண்ணணும். இது சம்பந்தமா, எங்க தலைவர்கிட்ட ஆலோசிச்சு நாங்க அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம்” என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக