திங்கள், 4 ஜனவரி, 2021

கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி வழங்கியது இந்தியா

dhinamalar :புதுடில்லி:கொரோனா வைரசுக்கு எதிராக, நம் நாட்டில் தயாரிக்கப்படும் இரண்டு தடுப்பூசிகளைப் பயன்படுத்த, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்து உள்ளார். உலக சுகாதார நிறுவனமும், மனம் திறந்து வரவேற்பு தெரிவித்துள்ளது.

கொரோனாவை ஒழிக்க, தடுப்பூசி வழங்கும் பணி, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் ஏற்கனவே துவங்கியுள்ளது. நம் நாட்டில், மூன்று நிறுவனங்கள், தங்கள் தடுப்பூசியை அவசரகாலத்துக்கு பயன்படுத்த அனுமதி கோரி, மத்திய அரசிடம் விண்ணப்பித்து இருந்தன.    இவற்றை, மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு பரிசீலித்தது. அதில், அமெரிக்காவைச் சேர்ந்த, 'பைசர்' நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி குறித்து கூடுதல் விபரங்கள் கேட்கப்பட்டுள்ளன.ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த, ஆக்ஸ்போர்டு பல்கலை தயாரித்துள்ள, 'கோவிஷீல்ட்' தடுப்பூசியை தயாரிக்கும் ஒப்பந்தத்தை, நம் நாட்டில், மஹாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த, 'சீரம்' நிறுவனம் பெற்றுள்ளது.அந்த தடுப்பூசியை பயன்படுத்த, நிபுணர் குழு பரிந்துரை செய்தது.

'கோவாக்சின்'

இதேபோல், தெலுங்கானா மாநிலம் ஐதராபாதைச் சேர்ந்த, 'பாரத் பயோடெக்' நிறுவனமும், ஐ.சி.எம்.ஆர்., எனப்படும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அமைப்பும் இணைந்து, 'கோவாக்சின்' என்ற தடுப்பூசியை தயாரித்துள்ளன.

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு உள்ள இந்த தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்த, நிபுணர் குழு பரிந்துரை செய்தது.இந்த தடுப்பூசிகளை கட்டுப்பாடுகளுடன் அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்த, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, நேற்று ஒப்புதல் அளித்தது.

இது குறித்து, மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவர், டாக்டர், வி.ஜி.சோமானி கூறி உள்ளதாவது:சீரம் நிறுவனம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசிகளை, கட்டுப்பாடுகளுடன், அவசர பயன்பாட்டுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிபுணர் குழு விரிவாக ஆய்வு செய்து அளித்த பரிந்துரையின் அடிப்படையில், இந்த அனுமதி வழங்கப்படுகிறது.

இதையடுத்து, மிக விரைவில், இந்த தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்த தடுப்பூசிகள் ஒவ்வொன்றும், ஒருவருக்கு இரண்டு தவணைகளில் வழங்கப்பட வேண்டும். இந்த தடுப்பூசிகளை, 28 டிகிரி செல்ஷியஸ் தட்பவெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும்.இந்த தடுப்பூசிகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள அதே நேரத்தில், மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை தொடர்ந்து மேற்கொள்ள, இந்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், 'கேடிலா ஹெல்த்கேர்' நிறுவனம், மூன்றாம் கட்டப் பரிசோதனை மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.''மிகவும் முக்கியமான திருப்புமுனை கட்டத்தை எட்டியுள்ளோம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்து உள்ளார்.

மத்திய சுகாதார அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ஹர்ஷ் வர்தன், 'கொரோனாவுக்கு எதிரான நம் போரின் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளோம்' என, சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார்.இரண்டு தடுப்பூசிகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதற்கு, உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்து உள்ளது.


விரைவில் கிடைக்கும்

''இந்தியாவின் இந்த நடவடிக்கை, இந்த பிராந்தியத்தில், வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது,'' என, உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் மண்டல இயக்குனர், டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் கூறியுள்ளார்.மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால், இரண்டு தடுப்பூசிகளும் மிக விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் மிகவும் பாதுகாப்பான சிறந்த பலன் அளிக்க கூடிய நாட்டின் முதல் தடுப்பூசி வரும் வாரங்களில் பயன்பாட்டுக்கு வரும் என சீரம் இந்தியா மையத்தின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவாலா, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பாரத் பயேடெக் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணா இலா கூறி உள்ளதாவது: புதுமை கண்டுபிடிப்பு மற்றும் அறிவியல் ஆராய்ச்சியில் இந்தியா முன்னணியில் உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது நம் அறிவியல் திறனில் ஒரு முக்கிய மைல் கல்லாக அமைந்துள்ளது. மிகவும் பாதுகாப்பான இந்த தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்யும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


எய்ம்ஸ் இயக்குனர் விளக்கம்



தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் உ்ளளிட்ட கட்சியினர் எழுப்பியுள்ள சந்தேகங்கள் குறித்து. 'எய்ம்ஸ்' இயக்குனர் ரன்தீப் குலேரியா கூறியதாவது: சீரம் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி தான் முழுமையாக பயன்படுத்தப்படும். பாரத்பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி துணை மருந்தாக இருப்பு வைத்துக்கொள்ளப்படும்.

உருமாறிய கொரோனா வைரஸ் பெரிய அளவில் நம் நாட்டில் பரவினால் அல்லது பரிசோதனைகள் முழுமையாக முடிவடைந்தால் மட்டுமே பாரத்பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி கொள்முதல் செய்யப்படும். பரிசோதனையில் பக்க விளைவுகள் ஏற்பட்டால் இழப்பீடு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரசின் சந்தேகம்

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான ஆனந்த் சர்மா கூறியுள்ளதாவது: பார்லிமென்டின் உள்துறைக்கான நிலை குழுவின் தலைவராகவும் நான் உள்ளேன். கொரோனா பிரச்னை குறித்து, இந்த நிலைக் குழு விரிவாக ஆலோசனை நடத்தி வருகிறது.கொரோனா வைரசால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், தடுப்பூசி மிகச் சிறந்த நிவாரணமாக இருக்கும். ஆனால், அதற்காக விதிகளை மீற முடியாது; இது, நம் மக்களின் உடல் நலன் தொடர்புடையது.

தற்போது, முதல்கட்டமாக, முன்கள வீரர்களுக்கு தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அவர்களுடைய வாழ்க்கையுடன் விளையாடக் கூடாது.ஆக்ஸ்போர்டு பல்கலை தயாரித்துள்ள தடுப்பூசி, மூன்றாம் கட்ட பரிசோதனையை முடித்துள்ளது. மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகளை, பிரிட்டன் வழங்கியுள்ளது. மக்களுக்கு சந்தேகம் ஏற்படாமல் இருக்க, அந்த தகவல்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

அதே நேரத்தில், பாரத் பயோடெக் நிறுவனம் மூன்றாம் கட்ட பரிசோதனையை துவக்கவில்லை. அந்த தடுப்பூசிக்கு எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது, சர்வதேச விதிகளை மீறியதாகும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


கொரோனாவிலிருந்து விடுதலை!



தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப் பட்டது குறித்து, பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: கொரோனா வைரசில் இருந்து விடுதலை பெறுவதற்கான, நம் உறுதியான நடவடிக்கைகளில் மிகவும் முக்கியமான திருப்புமுனையாக, இந்த ஒப்புதல் அமைந்துள்ளது. இந்த இரண்டு தடுப்பூசிகளும் நம் நாட்டில் தயாரிக்கப்படுகிறது என்பது, ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும்.

தற்சார்பு இந்தியா என்ற கனவை நனவாக்கும் வகையில், நம் அறிவியல் சமூகம் செயல்பட்டு வருகிறது. மற்றவர்களின் நலன், அவர்கள் மீதான அக்கறையை வெளிப்படுத்தியுள்ள விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள்.இந்த நேரத்தில், முன்கள வீரர்களான, டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள், விஞ்ஞானிகள், போலீஸ் துறையினர், துப்புரவு தொழிலாளர்களின் சேவையை நினைவுபடுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை: