ஸ்டாலினின் இந்த புகாருக்கு அமைச்சர் வேலுமணி கடுமையான மறுப்பு தெரிவித்தார். அந்தக் கூட்டம் நடந்ததே எனக்குத் தெரியாது. அங்கே உள்ள கோயிலுக்குச் சென்ற பெண்கள் ஆட்சி பற்றி அவதூறு பேசியதை எதிர்த்து ஸ்டாலினிடம் கேள்வி கேட்டுள்ளனர். அதற்காக அவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். என் மக்கள் மீது கை வைத்தால் சும்மா இருக்கமாட்டேன் என்று ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில்தான் நேற்று தமிழக டிஜிபியிடம் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
அதில், “ஜனவரி 2 ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூரில் உள்ள தேவராயபுரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மக்கள் கிராம சபைக் கூட்டத்தை நடத்தினார். கூட்டத்தில், அவர் அதிமுக அரசாங்கத்தின் பல்வேறு தோல்விகளைப் பற்றி பேசினார் மற்றும் அதன் ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல்களை எடுத்துரைத்தார். அந்தத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகவும், அரசாங்கத்தில் அமைச்சராகவும் இருக்கும் எஸ்.பி. வேலுமணி மீதும் புகார்களைக் கூறினார்.
திமுக தலைவர் பிரச்சாரம் செய்வதைத் தடுக்கவும், அவர் கட்சி நிர்வாகிகள், பொதுமக்களுடன் தொடர்புகொள்வதை நிறுத்தவும் வேலுமணி முயன்றார். அமைச்சராக தனது தற்போதைய பதவியைப் பயன்படுத்தி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தைப் பயன்படுத்தி அரசியல் மிரட்டல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
அதன்படிதான் அதிமுக மகளிரணி பாசறை துணை தலைவரான குனியமுத்தூர், செந்தமிழ் நகர், சுகுணாபுரம் மேற்கைச் சேர்ந்த பூங்கொடி என்ற பெண் கிராம சபைக் கூட்டத்துக்கு வந்தார். வன்முறையை உருவாக்க அவரது முயற்சிகள் இருந்தபோதிலும், எந்தவொரு வன்முறையும் தவிர்க்கப்பட்டது, மேலும் அவர் கூட்டத்தில் இருந்து காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டார்.
முழு கூட்டமும் வீடியோ பதிவாக இருக்கிறது. அச்சு மற்றும் செய்தி ஊடகங்களும் நிகழ்வை ஒளிரபரப்பின. ஆனால் தொண்டாமுத்தூர் போலீஸார் உண்மையை அறிந்திருந்தாலும் அந்தப் பெண்ணின் புகாரின் அடிப்படையில் திமுகவினர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
கோவையில் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் அமைச்சர் வேலுமணியின் கருவியாக செயல்படுகின்றன. இந்தப் பின்னணியில் குறைந்தபட்சம் தேர்தல் நேரத்திலாவது டிஜிபியாக , நீங்கள் போலீஸ் படையின் பக்கச்சார்பற்ற தன்மையைக் காக்க வேண்டும், தவறு செய்யும் அதிகாரிகளை தண்டிக்க வேண்டும், போலீஸின் ஒழுக்கத்தை பராமரிக்க வேண்டும்.
எனவே இந்த விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் தலையிட்ட. உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, பூங்கொடி, அதிமுக ஒன்றிய செயலாளர் வேலுசாமி மற்றும் தொண்டாமுத்தூர் காவல் ஆய்வாளர், மற்றும் பெயரிடப்படாத பிற நபர்கள் பிரிவு 120 பி, 153, 167, 203, 211 மற்றும் 505 (1) (சி) ஐபிசி ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த புகாரில் கூறப்பட்டிருக்கிறது.
புகார் அளித்துவிட்டு வந்த ஆலந்தூர் பாரதி செய்தியாளர்களிடம் பேசுகையில், “அதிமுகவினரின் இதுபோன்ற நடவடிக்கைகளை தடுக்குமாறு டிஜிபியிடம் புகார் அளித்துள்ளோம். நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் தமிழக முதல்வர் பங்கு பெறும் அனைத்து கூட்டங்களிலும் திமுகவினர் சார்பாக கேள்விகள் எழுப்பப்படும்” என்று தெரிவித்தார்.
வேந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக