அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் இர.சிவலிங்கம் அவர்களும் திருச்செந்தூரன் அவர்களும் 1960களில் ஆசிரியர்களாக பணியாற்றினார்கள்.
மாணவர் மத்தியில் சமூக உணர்வுகளை உருவாக்குவதில் இருவரும் தீவிரமாக ஈடுபட்டனர்.
இருவரும் தமிழகத்தில் படித்து வந்த பட்டதாரிகளாவர். சிவா ஆங்கிலத்திலும்¸ தமிழிலும் பேச்சாற்றல் மிக்கவர். செந்தூரன் கலை இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர். இவரும் சிறந்த பேச்சாளர் ஆவார். இவர்கள் இருவரும் மலையக சமூகத்தின் கண்ணீரைக் கொட்டி மாணவர்களின் பாடப் புத்தகங்களை நனைத்தவர்கள். பள்ளி பாடங்களுக்கப்பால் மலையக சமூகத்தின் எழுச்சிகள் பற்றிப் போதித்தனர்.
அன்றைய யு.என்.பி. அரசு (1965-1970) இவர்கள் அரசியலில் ஈடுபடுகின்றனர் என்று வேலை இடை நிறுத்தம் செய்தது. இதனால் தொழில் வருமானம் இன்றி குடும்பத்தை கவனிப்பதில் கஷ்டப் பட்டனர். சிறிமா அம்மையார் ஆட்சிக்கு வந்ததும் ( 1970-1977) மீண்டும் தொழிலைப் பெற்றார்கள். செந்தூரன்¸ நாடகம்¸ வில்லுப் பாட்டு மூலம் சமூக அரசியல் பிரச்சாரங்களை மேற் கொண்டார். சிவா குன்றின் குரல் என்ற அரை மணி நேர வானொலி நிகழ்ச்சியைப் பிரச்சாரமாக நடத்தினார். (1972 முதல் 1974 வரை) அந் நிகழ்ச்சியில் "பீலிக் கரை" என்ற ஓரங்க தொடர் நாடகத்தை நான் நடத்தினேன். அந்த நாடகத்தில் பிரதான பாத்திரமாக அமரர் ராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் நடித்தார். சிவாவுக்குப் பின்னர் பேராசிரியர் மு.நித்தியானந்தனும்(லண்டன்) அவருக்கு அடுத்து..... கொழும்பு கு.இராமச்சந்திரன் ஆகியோரும் நடத்தினர்.
சிவா 60 களில் மலைநாட்டு நல் வாழ்வு வாலிபர் சங்கம் உருவாகுவதற்கு காரணமாகவிருந்தார். 1963 ல் மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் உருவாக செயற்பட்டார். கல்மதுரை எஸ்.எம்.கார்மேகம் அவர்கள் துணையுடன் வீரகேசரியில் தோட்ட மஞ்சரி பக்கத்தை தொடக்கி வைத்தார். 1970 ல் மலையக இளைஞர் முன்னணி என்ற இயக்கத்தை உருவாக்கினார். அந்த இயக்கத்தின் குரலாக "முன்னணி" பத்திரிக்கையை உருவாக்கினார். முதல் ஆசிரியராக வன ராஜன் என்ற ஆ.சுப்பிரமணியம் நடத்தினார்.அவருக்குப் பின் நான் ஆசிரியராகப் பொறுப்பேற்றேன்.(1975-1976)
1983 ல் இனக்கலவரத்தில் தெகிவளையில் வசித்த சிவாவின் குடும்பம் பாதிக்கப்பட்டது. வீடு அழிக்கப்பட்டு அவரது பிரதான சொத்தான பல நூறு புத்தகங்கள் எரித்து சாம்பலாக்கப்பட்டன. மனைவி பிள்ளைகளுடன் வயதான தாயோடு அகதி முகாமில் தங்கி நிர்க்கதியாக தமிழ் நாடு சென்றார். கோயம்புத்தூரில் குடும்பத்தை விட்டு விட்டு நீலகிரி மாவட்டத்தில் குடியேறி துயரப் படும் தொழிலாள மக்களுக்கு சேவை செய்வதற்கு செந்தூரனோடு சென்றார். மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம் என்ற ஒரு தொண்டு நிறுவனத்தை உருவாக்கினார். நீலகிரி மாவட்டத்தில் தாயகம் திரும்பிய மக்களை இந்தியர்கள் "சிலோன் அகதிகள்" என்று தூஷித்தார்கள்.! தங்கள் தொழிலை பறிக்க வந்தவர்கள் என்று தொல்லை கொடுத்தார்கள். மலை பகுதிகளில் குடிசைகள் கட்டி தொழில் செய்தவர்களின் குடிசைகளை எரித்தார்கள். காவலர்கள்¸ நகரத்தவர்கள்¸ அரசியல் பெரும் புள்ளிகள் என பலரும் இந்த வன் செயல்களில் ஈடு பட்டார்கள். சிவா தலைமையில் துணிச்சல் மிக்க இளைஞர்களின் எதிர்ப் போராட்டங்கள் மூலம் எதிர் சக்திகள் அடக்கப்பட்டன.
1991 ம் ஆண்டு பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டதன் பின் "சிலோன் அகதிகள்" என்ற நமது மக்களை பயங்கரவாதிகள்¸ தீவிரவாதிகள்¸ புலிகள் என குற்றஞ் சாட்டி கோத்தகிரி¸ குன்னூர்¸ உதகை¸ கூடலூர் ஆகிய இடங்களில் உள்ள 250 பேர்களை அன்றைய மாவட்ட ஆட்சித் தலைவர் கைது செய்தார். அவர்களை விடுவிக்கக் கோரி சிவா 13 மன்ற அங்கத்தவர்களோடு மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்திக்கச் சென்றார். அவரையும்¸ குழுவினரையும் ஏசி அவமதித்தனர். அவர்களின் பேச்சைக் கேட்க விரும்பாமல் அவர்களை அப்புறப்படுத்த காவலர்களை அனுப்பினர். அடுத்த நடவடிக்கைக்காக முயன்ற போது அந்த 13 பேர்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் கைது செய்து¸ ஜூலை மாதம் கோவை சிறையில் அடைத்து¸ ஆகஸ்ட் மாத இறுதியில் விடுதலை செய்தார். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியாளரிடம் சிவா கடுமையாக நடந்துக் கொண்டார் என்று கைது செய்யப்பட்டு¸ செங்கல்பட்டு சிறைச் சாலையில் அடைக்கப்பட்டார். சிறையில் சித்திரவதைக்குள்ளானார். உடல் நிலை பாதிக்கப்பட்ட சிவாவை சங்கிலியால் பிணைத்து தெருவில் இழுத்துச் சென்று சென்னை அரச பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
முழு நீலகிரி மாவட்டத்திலும் சிலோன் அகதிகள் என்ற மலையக மக்களின் போராட்டங்களினால் சிவா நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டார்.; விடுதலைக்குப் பிறகு¸ சிவாவும்¸ செந்தூரனும்¸ சளைக்காது தொடர்ந்து செயற்பட்டனர். இவர்களுடன் இணைந்து நிர்வாகப் பணிப்பாளராக செயற்பட்ட பதுளையைச் சேர்ந்த மா.சந்திரசேகரனும் முக்கியமானவராவார்.அன்று மலை முகடுகளிலும்..ஓடை ஓரங்களிலும்..சாலை ஓரங்களிலும் பிளாஸ்டிக் சீட்டுகளில்(ரெட்டு) கூரை கட்டி குடிசைகளில் வாழ்ந்த மக்களுக்கு ம.ம.ம.மன்றம் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் நிதி அனுசரணையில் 1987 முதல் 2000 வரை 2058 க்கும் மேற்பட்ட வீடுகளை குடிசை வாழ் மக்களுக்கு கட்டிக்கொடுத்தனர்.வீடமைப்பு வேலைகளுக்கு செந்தூரன் பொறுப்பாவிருந்தார்.கல்வி மேம்பாட்டுக்காக "திருச்செந்தூரன் கல்வி நிதி" ஆரம்பிக்கப்பட்டது.
சிவாவும்¸ செந்தூரனும் தங்களது 67 ..65..வயதுக்குள்ளேயே மறைந்துப் போன துயரம் கொடுமையானது!
படக் குறிப்புகள்
1 இர.சிவலிங்கம்
2 திருச்செந்தூரன்
3 பாக்கிய நகர் வீடமைப்பு
4 மலையக மக்கள் மறு வாழ்வு மன்றக் காரியாலயம்
5 அமரத்துவமடைந்த சிவா.. செந்தூரன் கல்லறைகள்.......(படத்தில் மா. சந்திரசேகரன்.. நான் ...மற்றொரு நண்பர் அடுத்து தாம்பரம் ராஜோக்கியம்)
(வதைப்படலம் தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக