செவ்வாய், 5 ஜனவரி, 2021

திரையரங்கில் 100% பார்வையாளர்கள் இருப்பது தற்கொலைக்கு சமம்" - மருத்துவரின் ஆதங்க பதிவு

BBC :மாஸ்டர், ஈஸ்வரன் திரைப்படம் ரிலீஸ்: நடிகர் விஜய், தமிழக அரசுக்கு மருத்துவர் எழுதிய ஆதங்கப்பதிவு.. திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்துள்ள தமிழக அரசின் நடவடிக்கை தொடர்பாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உள்ளுறை மருத்துவராக பணியாற்றும் ஒருவர் மிகவும் உருக்கமான கடிதத்தை தமிழக அரசுக்கும் நடிகர் விஜயக்கும் எழுதியிருக்கிறார்.
விஜய்

இந்த கடிதத்தை தனது முகநூல் பக்கத்திலேயே அந்த மருத்துவர் பதிவிட்டிருந்தபோதும், அவர் எழுதியுள்ள கடிதம் சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த மருத்துவர் பதிவிட்டுள்ள கடிதத்தின் விவரம்: அன்புள்ள விஜய் சார் மற்றும் மதிப்பிற்குரிய தமிழக அரசு,

நான் சோர்வாக இருக்கிறேன். நாங்கள் அனைவரும் சோர்வாக இருக்கிறோம். என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் களைப்படைந்து இருக்கிறார்கள். சுகாதார ஊழியர்கள் களைப்படைந்துள்ளனர். காவல் அதிகாரிகள் சோர்வடைந்து விட்டனர். சானிட்டரி தொழிலாளர்கள் சோர்வாக உள்ளனர்.

இதுவரை நாம் கண்டிராத தொற்றுநோய்க்கு மத்தியில் ஏற்பட்ட பாதிப்புகள், எந்த அளவுக்கு குறைவாக இருக்க முடியுமோ அந்த அவ்வளவு கடுமையாக உழைத்திருக்கிறோம். நான் எங்களுடைய வேலையை போற்றிப்பேசவில்லை. ஏனெனில் அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்பது எனக்கு தெரியும். எங்களுக்கு முன்னாள் கேமிரா இல்லை. நாங்கள் ஸ்டன்ட் சாகசங்களை செய்ய மாட்டோம். நாங்கள் ஹீரோக்களும் அல்ல. ஆனால் மூச்சுவிடவாவது கொஞ்சம் நேரத்தை பெறக்கூடியவர்களாக இருக்கிறோம். ஒருவரின் சுயநலத்திற்கும் பேராசைக்கும் நாங்கள் இரையாக விரும்பவில்லை.

கொரோனா தொற்று இன்னும் முடிந்து விடவில்லை, இன்றுவரையிலும் கூட அந்த வைரஸ் பாதிப்பால் மக்கள் இறக்கிறார்கள். நூறு சதவிகித திரையரங்க ஆக்கிரமிப்பு ஒரு தற்கொலை முயற்சி. மாறாக அது ஒரு கொலைக்கு ஒப்பாகும்.

கொள்கை வகுப்பவர்களோ கதாநாயகர்களோ பார்வையாளர்களுக்கு மத்தியில் படம் பார்க்கப் போவதில்லை. இது ஒரு அப்பட்டமான பண்டமாற்று முறை. உயிரை விலையாகக் கொடுத்து வணிகம் செய்வது போன்றது.

நாம் மெதுவாக இயல்பாக வாழ முயன்று கவனம் செலுத்தி வரும் வேளையில், மெதுவாக எரியும் தீ மேலும் வேகமாக பரவாமல் இருப்பதை உறுதி செய்ய முடியுமா?

இந்தப் பதிவை அறிவியல் பூர்வமாக உருவாக்கி, நாம் ஏன் இன்னும் ஆபத்தில் இருக்கிறோம் என்பதை விளக்க விரும்புகிறேன். பிறகு எனக்குள் நானே என்னதான் பிரச்னை என்று கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு ஒரு ஏழை, களைப்படைந்த உள்ளுறை மருத்துவர் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இடுகையை பதிவு செய்தவரின் பெயர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் என்றும் அவர் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை கல்லூரியில் இளநிலை உள்ளுறை மருத்துவராக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

கருத்துகள் இல்லை: