வெள்ளி, 1 நவம்பர், 2019

மருத்துவர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு . பணிக்கு திரும்புகிறார்கள்


/tamil.news18.com :போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள் இன்று காலைக்குள் பணிக்குத் திரும்ப தமிழக அரசு கெடு விதித்திருந்த நிலையில், அரசின் வேண்டுகோளை ஏற்று மருத்துவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
காலமுறை ஊதிய உயர்வு, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ பணியிடங்களை உயர்த்துவது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் கடந்த 7 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
நேற்று பிற்பகல் 2 மணிக்குள் பணிக்கு திரும்பாத மருத்துவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்திருந்தார். ஆனாலும் போராட்டம் தொடர்ந்தது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த 8 பேரில் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் முன்னூறுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு பணிமாறுதல் நோட்டீசும் வழங்கப்பட்டு வருகிறது. அரசின் வேண்டுகோளை ஏற்று 11 மாவட்டங்களில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் முழுமையாக பணிக்கு திரும்பியுள்ளதாக கூறியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், நேற்று மாலை 7 மணி நிலரவப்படி 1,613 மருத்துவர்கள் மட்டுமே பணிக்கு வரவில்லை என்றார்.


9.7 விழுக்காடு மருத்துவர்கள் மட்டுமே போராட்டத்தை தொடர்வதாக கூறியுள்ள அவர் இன்று காலைக்குள் பணிக்குத் திரும்பாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

போராடுபவர்களுக்கு மாற்றாக இன்று 188 புதிய மருத்துவர்களுக்கு பணியாணை வழங்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அதேநேரம் கெடு விதிப்பதை விட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு அழைத்து கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இன்று காலை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் நரசிம்மன், “கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அரசு தெரிவித்துள்ளது. முதல்வர், அமைச்சர், இயக்குநர்களின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுகிறோம்” என்று கூறினார்.

நான்கு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வரும் 25-ம் தேதி முதல் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர் தெரிவித்தார்


DailyhuntReport  : அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகி ''தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 18,000 அரசு மருத்துவர்கள் இருக்கிறோம். இதில் 15,000 மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். ஆனால் சுகாதாரத்துறை அமைச்சரும், செயலாளரும் வெறும் 5 % மருத்துவர்களே போராடுகிறார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாகக் கூறி 15,000 மருத்துவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள். இதிலிருந்தே தெரிந்து கொள்ளுங்கள் தமிழகத்தில் 90% மருத்துவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம்.
சேலத்தில் மொத்தம் 1,000ம் மருத்துவர்கள் இருக்கிறோம். இதில் 950 பேர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். முதல்வர், சுகாதாரத் துறை அமைச்சர், செயலாளர் நேரில் வந்து பார்க்கட்டும். எங்களுடைய நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்திலிருந்து பின்வாங்க மாட்டோம். ஆனால் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளைக் கவனித்து கொள்வதற்காகக் குழுக்கள் அமைத்து அவர்களுக்குக் சிறந்த மருத்துவ சேவை செய்துவருகிறோம்'' என்றார்.

கருத்துகள் இல்லை: