புதன், 30 அக்டோபர், 2019

இங்கிலாந்து எம்பி.கிறிஸ் டேவிஸ் : காஷ்மீரில் மோடியின் பிரசார உத்திக்கு உதவி செய்யமாட்டேன்


ககன் சபர்வால் - பிபிசி தெற்காசிய செய்தியாளர் : காஷ்மீரைப் பார்வையிடும் ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் இடம்பெறுவதாக இருந்த வடமேற்கு இங்கிலாந்தை பிரதிநிதித்துவப்படுத்தும் (லிபரல் ஜனநாயக கட்சி) ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் கிரிஸ் டேவிஸ் கடைசியில் தமக்கு அந்தக் குழுவில் இடம் மறுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இந்திய ராணுவத்தின் மேற்பார்வை இல்லாமல், காஷ்மீரில் தான் விரும்பிய இடங்களுக்கு எல்லாம் சென்று பார்க்கவும், விரும்பியவர்களை சந்தித்துப் பேசவும் சுதந்திரம் வேண்டும் என்று இந்தப் பயணத்துக்கு அவர் நிபந்தனை விதித்திருந்தார்.
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி பறிக்கப்பட்ட பின் முதல்முறையாக இத்தகைய பயணத்திற்கு இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பல இடங்களுக்கு செல்லும் இந்த ஐரோப்பிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு, களத்திலுள்ள உண்மையான நிலவரங்களை நேரடியாக தெரிந்து கொள்ளும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், பிபிசி தெற்காசிய செய்தியாளர் ககன் சபர்வாலுக்கு, கிரிஸ் டேவிஸ் அளித்த பேட்டி இதோ:
கேள்வி: காஷ்மீருக்கு வர உங்களுக்கு அழைப்பு கொடுத்தது யார்? இந்திய உயர் ஆணையத்திடம் இருந்து அழைப்பு வந்ததா?
பதில்: இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் ஆதரவாளர்களிடம் (பெண்களின் பொருளாதாரம் மற்றும் சமூக ஆலோசனை அமைப்பு) இருந்து இந்த அழைப்பு வந்தது. இந்திய அதிகாரிகளின் முழு ஒத்துழைப்போடு இந்த ஏற்பாடுகள் அனைத்து செய்யப்படுவதாகக் கூறப்பட்டது.
கேள்வி: காஷ்மீரில் பயணம் மேற்கொள்வதில் நீங்கள் ஏன் மிகவும் ஆர்வமாக இருக்கிறீர்கள்?

பதில்: நான் வட மேற்கு இங்கிலாந்து பகுதியை
பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். இங்குள்ள வாழும் பல்லாயிரக் கணக்கானோர் காஷ்மீர் வம்சாவழியினர். பலருக்கும் காஷ்மீரில் உறவினர்கள் உள்ளனர். உறவினர்களோடு சரியாக தொடர்பு கொள்ள முடியவில்லை என்பது அவர்கள் எழுப்பியுள்ள பிரச்சனைகளில் ஒன்று. வட மேற்கு இங்கிலாந்திலுள்ள ஒவ்வொருவரையும் நான் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த பயணத்திற்கு செல்ல வேண்டியது முக்கியமானது. இங்குள்ள பல மக்களை பாதிக்கும் பிரச்சனை இது என்பதில் சந்தேகமில்லை.
கேள்வி: இந்த பயணத்தால் என்ன பலன் கிடைக்கும் என எதிர்பார்த்தீர்கள்?
பதில்:தனி மனித சுதந்திரம், கருத்து சுதந்திரம் மற்றும் அமைதியாக போராடுவதற்கு உரிமை ஆகியவற்றுக்கு இடையூறு இல்லாமல், காஷ்மீர் பள்ளத்தாக்கில் அடிப்படை உரிமைகள் மீண்டும் நிலைநிறுத்தப்படுவதை உறுதிசெய்ய விரும்பினேன்.
ஆனால், காஷ்மீர் மீதான தனது நடவடிக்கைகளை சுயாதீன ஆய்வுக்கு அனுமதிக்க இந்திய அரசு தயாராக இருக்கிறதா என்பதை சோதித்து பார்ப்பதாக இந்தப் பயணம் இருக்குமென நான் கருதவில்லை.
கேள்வி: இந்தப் பயணத்திற்கு செலவை செய்வது யார்? இந்திய அரசா? தனியார் புரவலரா?
பதில்: இந்தப் பயணத்திற்கான செலவை "அணிசேரா ஆய்வுகளுக்கான சர்வதேச நிறுவனம்" செய்யுமென தெரிவிக்கப்பட்டது. இந்த அமைப்புக்கு நிதியுதவி எப்படி கிடைக்குமென எனக்கு எதுவும் தெரியாது.



கேள்வி: இந்திய அதிகாரிகளிடம் நீங்கள் வைத்த கோரிக்கை என்ன? என்ன செய்ய வேண்டும், என்ன பார்க்க வேண்டுமென விரும்பினீர்கள்?
பதில்: நான் காஷ்மீரில் பயணம் மேற்கொள்ளும்போது, என்னோடு சுயாதீன பத்திரிகையாளர்கள் மற்றும் தொலைக்காட்சி அணியினர் வர வேண்டும். ராணுவம், போலீஸ் மற்றும் பாதுகாப்பு படைப்பிரிவுகள் எதுவும் இல்லாமல் நான் விரும்பிய இடங்களுக்கு செல்ல விரும்புகிறேன். நான் விரும்பிய அனைவரிடமும் பேச விரும்புகிறேன் என்று தெரிவித்திருந்தேன்.
இந்த நவீன சமூகத்தில் பத்திரிகை சுதந்திரம் மிகவும் முக்கியமானது. எந்த நிலைமையிலும், செய்தியை தணிக்கை செய்து வழங்குவதை அனுமதிக்க முடியாது. என்ன நடக்கிறதோ, அவை உண்மையாகவும், நேர்மையாகவும் வெளியிடப்பட வேண்டும்.
கேள்வி: உங்களுடைய இந்த நிபந்தனைகளுக்கு இந்திய அதிகாரிகள் என்ன சொன்னார்கள்?
பதில்: சிறிய அளவு பாதுகாப்பு மிகவும் முக்கியம் என இதன் ஏற்பாட்டாளர் முதலில் தெரிவித்தார். ஆனால், இரண்டு நாட்களுக்கு பிறகு, இந்தப் பயணத்திற்கு தேவைப்படுவோர் அனைவரும் கிடைத்துவிட்டதாகவும், எனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை திரும்ப பெறுவதாகவும் என்னிடம் தெரிவித்தார்.
    கேள்வி: காஷ்மீர் செல்ல உங்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு திரும்ப பெறப்பட்டது ஏன்? இதற்கு இந்திய அதிகாரிகள் கூறிய காரணம் என்ன?
    பதில்: எல்லாம் நன்றாக உள்ளது என பாசாங்கு செய்யும் மோதி அரசின் பிரசார உத்தியில் பங்கேற்க நான் தயாராக இல்லை என்பதை எது மின்னஞ்சல்கள் மூலம் தெளிவுபடுத்தியிருந்தேன்.
    காஷ்மீரில் ஜனநாயக கொள்கைகள் மீறப்பட்டிருந்தால், அதனை உலகம் உற்று கவனிக்க வேண்டியது அவசியமாகும்.
    இந்திய அரசு ஏன் அதனை மறைக்க வேண்டும்? அங்குள்ள உள்ளூர் மக்களோடு சுதந்திரமாக பேச பத்திரிகையாளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் ஏன் அனுமதி வழங்கவில்லை?
    பதில்கள் எனது கோரிக்கைகள் ஏற்றுகொள்ளப்படவில்லை என்பதைக் காட்டின.




    கேள்வி: காஷ்மீர் பயணத்திற்கு உங்களை அழைத்ததை திரும்ப பெறுவதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தபோது உங்கள் எதிர்வினை என்ன?
    பதில்: நான் ஆச்சரியமடையவில்லை. இந்தப் பயணம் பற்றி அறியவந்தபோதே நரேந்திர மோதியை உயர்த்தி பிடிக்கும் விளம்பர உத்தியாகவே எனக்கு இது தோன்றியது.
    காஷ்மீரில் இந்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் உயர்ந்த ஜனநாயகத்துக்கான நல்ல கொள்கைகளை மீறிய செயல்களாகவே நான் கருதுகிறேன்.
    உலக நாடுகள் இதில் எவ்வளவு குறைவாக கவனம் செலுத்துகிறதோ, அவ்வளவுக்கு மோதியின் அரசு மகிழ்ச்சியடையும்.
    கேள்வி: காஷ்மீரில் நடப்பவை பற்றிய உங்களுடைய கருத்துக்களும், எதிர்வினைகளும் என்ன?
    பதில்: இந்த கேள்வியில் நீங்கள் குறிப்பிடும் வார்த்தைகளே பிரச்சனையை சுட்டிக்காட்டுகிறது. காஷ்மீரில் என்னென்ன நடக்கின்றன என்று நமக்கு தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், கைது செய்து சிறையில் அடைப்பது, ஊடகக் கட்டுப்பாடுகள், கடுமையான தகவல்தொடர்பு கட்டுப்பாடுகள் மற்றும் கடும் ராணுவ பாதுகாப்பு பற்றி எல்லாம் கேள்விப்படுகிறோம்.
    அரசும் வகுப்புவாத சார்புகளால் இயங்குகிறது என்கிற கவலைகளை கருத்தில் கொண்டு, இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு என்னதான் காரணங்கள் இருந்தாலும் அவற்றை கட்டுப்பாட்டோடு செயல்படுது்த வேண்டும்.
    இந்து தேசியவாதம் எல்லா நிலையிலும் கருவியாக பயன்படுத்தப்படுவதாக முஸ்லிம்கள் பார்க்கிறார்கள். இது எதிர்கால இந்தியாவுக்கு நல்லதாக அமையாது.
    நாடுகளுக்கு இடையிலான அமைதியின் முக்கியத்துவம் இந்நாட்களில் பொருத்தமற்றதாக பார்ப்பது அதிகரித்து வருகிறது.




    கேள்வி: லண்டனில் நடைபெற்ற சமீபத்திய காஷ்மீர் போராட்டத்தில் முட்டைகள், தக்காளிகள், உறைந்த தண்ணீர் பாட்டில்கள் மற்றும் கற்களால் இந்திய உயர் ஆணையமும், சில இந்தியர்களும் தாக்கப்பட்டது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
    பதில்: அமைதியான போராட்டங்களுக்கான உரிமையை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். இது ஜனநாயகத்தின் மிக முக்கிய பகுதி. பல ஆண்டுகளாக இத்தகைய பல போராட்டங்களில் நான் பங்கேற்றுள்ளேன்.
    சில வாரங்களுக்கு முன்னால்தான், பிரெக்ஸிட்டை தடுக்க "மக்கள் வாக்கெடுப்பு" நடத்த வேண்டும் என்பதற்கு ஆதரவாக சுமார் 10 லட்சம் மக்களோடு நானும் பேரணியில் கலந்துகொண்டேன்.
    பாதிப்பை ஏற்படுத்தும் ஏவுகணை பயன்பாடு சட்டவிரோதமானது. தவறானது. அமைதியானதொரு போராட்டத்தில் நிகழும் உரிமை மீறல்கள், அச்சுறுத்தல் அல்லது தாக்குதல்கள் மிகவும் கவலையளிக்கிறது.
    கேள்வி: பிரிட்டனில் நடைபெறும் இத்தகைய போராட்டங்கள் பலனளிக்கும் என கருதுகிறீர்களா?
    பதில்: கொஞ்சம் பலனளிக்கும். இது பற்றி இந்தியாவை பூர்வீகமாக கொண்ட எமது குடிமக்கள் கலவையான கருத்துக்களை கொண்டுள்ளனர். பிரிட்டன் இந்தியாவின் காலனியாதிக்க நாடாக இருந்துள்ளது. இன்று இந்தப் பிரச்சனையின் தோற்றத்துக்கு பெரிதும் அதுவே மூல காரணமாக இருந்துள்ளதாக குற்றம்சாட்டலாம்.
    பிரெக்ஸிட் நிலைமை எம்மை பலவீனப்படுத்தி வருவதோடு, பிரெக்ஸிட் பிரச்சனையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கையை வகுப்பதில் சரியான பங்காற்ற முடியாத நிலை பிரிட்டனுக்கு ஏற்பட்டுள்ளது.
    உலக அளவிலான பிரச்சனைகளை சுட்டிக்காட்டுவதற்கு நம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும். இதற்கு ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இருக்கும் எனது தளத்தை நான் முடிந்தவரை பயன்படுத்தி கொள்கிறேன்

    கருத்துகள் இல்லை: