திங்கள், 28 அக்டோபர், 2019

ஒரு நாயைப் போன்று, கோழையைப் போன்று அல் பாக்தாதி உயிரிழந்தார் - டொனால்டு டிரம்ப்

தினத்தந்தி : ஒரு நாயைப் போன்று, கோழையைப் போன்று அல் பாக்தாதி உயிரிழந்தார். இனிமேல் இந்த உலகம் பாதுகாப்பானதாக இருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார்.
 வாஷிங்டன் ஈராக் மற்றும் சிரியாவில் சில பகுதிகளை 2014 ஆம் ஆண்டு ஐ.எஸ். அமைப்பு கைப்பற்றியது. இதையடுத்து, அந்த அமைப்பின் தலைவர் அல் பாக்தாதி அந்த பகுதிகளை இஸ்லாமிய அரசாக அறிவித்தார். அதன்பின் அமெரிக்கா மற்றும் கூட்டுப்படைகள் நடத்திய தொடர் தாக்குதலில் ஐ.எஸ். அமைப்பின் வசம் இருந்த பல பகுதிகள் மீட்கப்பட்டன. இருப்பினும், ஐ.எஸ்.தீவிரவாதிகள் தொடர்ந்து அமெரிக்க வீரர்கள், கூட்டுப்படையினர் மற்றும் பல்வேறு நாடுகளின் மீது தாக்குதல் நடத்தி வந்தனர். ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதலில் மட்டுமே உலக அளவில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இலங்கையில் நடந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், நீண்ட இடைவெளிக்குப்பின் வீடியோவில் தோன்றிய அல்-பக்தாதி சுமார் 18 நிமிடங்கள் பேசினார். ஐ.எஸ்.தலைவர் பாக்தாதி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 25 மில்லியன் டாலர் பரிசும் அமெரிக்க அறிவித்து இருந்தது.
இந்நிலையில், சிரியாவில் வடமேற்கு பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் சிறப்புப்பிரிவு நடத்திய தேடுதல் வேட்டையில் சனிக்கிழமை இரவு அல் பாக்தாதி, அவரின் 3 மகன்கள், கூட்டாளிகள் பலர் உயிரிழந்ததாக அமெரிக்க அறிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்ப் நிருபர்களுக்கு  வெள்ளை மாளிகையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஏறக்குறைய 3 ஆண்டுகள் தேடுதலுக்குப்பின் அமெரிக்கப் படையினருக்கு வெற்றி கிடைத்துள்ளது. ஆம், உலகத்தை அச்சுறுத்திவந்த ஐ.எஸ். தீவிரவாத தலைவர் அல் பாக்தாதியை அமெரிக்க ராணுவத்தின் கே9 டாக்ஸ் ராணுவப் பிரிவு சிரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஒரு குகையில் வைத்து கொலை செய்துள்ளது.

தப்பிச்செல்ல வேறுபாதை இல்லாத அந்த குகைக்குள் அல் பாக்தாதி, அவரின் 3 மகன்கள் உயிரைக் காத்துக்கொள்ள ஓடினார்கள். தப்பிச் செல்ல வேறு வழியில்லாததால், தங்கள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து உயிரிழந்தனர்.

அல் பாக்தாதி கொல்லப்பட்ட இரவு அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, உலகிற்கே சிறப்பான இரவு. உலகில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த கொடூரமான கொலைகாரர் அழிக்கப்பட்டார்.

இனிமேல் எந்த அப்பாவி மக்களுக்கும் அவரால் துன்பம் வராது. ஒரு நாயைப் போன்று, கோழையைப் போன்று அல் பாக்தாதி உயிரிழந்தார். இனிமேல் இந்த உலகம் பாதுகாப்பானதாக இருக்கும்.

அமெரிக்க ராணுவத்தின் சிறப்பு படையினர் சனிக்கிழமை இரவு மிகவும் ஆபத்தான முறையில் பாக்தாதி இருந்த இடத்தில் ரெய்டு நடத்தினார்கள். ஒரு கட்டத்தில் பாக்தாதி அமெரிக்கப் படையினரிடம் இருந்து தப்பிக்க ஒருவழிப்பாதை உள்ள குகைக்குள் ஓடினார்.

அப்போது எங்களின் ராணுவமும் துரத்தி ஓடும் போது, படைகளிடம் சிக்குவதைத் தவிர்க்கும் பொருட்டு, உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார்கள். இதில் பாக்தாதியின் உடல் சிதைக்கப்பட்டது.

அல் பாக்தாதி உயிரிழக்கும் முன் நோய்வாய்ப்பட்டவராக, பலவீனமாக இருந்தார். ஆனால், அமெரிக்கப் படைகள் துரத்தும்போது, கோழையைப் போன்று குகைக்குள் ஓடி ஒளிந்து, கண்ணீர் விட்டு அழத் தொடங்கினார்.

உலகத்தையே அச்சுறுத்திய ஒரு தீவிரவாத அமைப்பின் தலைவர் அல் பாக்தாதி, குகைக்குள் உயிரைக் காத்துக்கொள்ளத் தப்பி ஓடியதும், அச்சத்தால் கூனி குறுகியதும், அமெரிக்க படைகளைப் பார்த்து அஞ்சி அழுததும் வித்தியாசமாக இருந்தது. அதற்கான வீடியோ ஆதாரங்களும் கிடைத்துள்ளன.

அல் பாக்தாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க வைத்ததும் சுவர் இடிந்து விழுந்தது. அதன்பின் அவரின் உடலை ராணுவத்தினர் கைப்பற்றி டிஎன்ஐ ஆய்வுக்கு உட்படுத்திக் கொல்லப்பட்டது அல்பாக்தாதி என்று உறுதி செய்தபின் அறிவிக்கிறேன்.

அல் பாக்தாதியை பல ஆண்டுகளாக நாங்கள் தேடிவந்தோம். கடந்த சில ஆண்டுகளாக அவரின் இருப்பிடத்தை நெருங்கி தீவிர கண்காணிப்பில் கொண்டு வந்தோம்.

அமெரிக்க ராணுவத்தின் முக்கிய நோக்கமே அல்பாக்தாதியை உயிருடன் பிடிப்பதும், அல்லது கொலை செய்வதும்தான் பிரதானமாக இருந்தது. என்னுடைய நிர்வாகத்தின் கீழ் நாட்டின் பாதுகாப்புத்துறையின் பிரதானக் குறிக்கோள் அதுவாகத்தான் இருந்தது.

கடந்த மாதம் ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடனை அமெரிக்க படைகள் கொன்றது. இப்போது உலகிற்கு அச்சுறுத்தலாக இருந்த ஐ.எஸ். அமைப்பின் தலைவரைக் கொன்றுவிட்டோம். இனிமேல் உலகம் அமைதியானதாக இருக்கும்.

சிரியாவில் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் ஏராளமான அல்பாக்தாதி ஆதரவாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள், கைது செய்யப்பட்டுள்ளார்கள் என கூறினார்.


தினமலர் : வாஷிங்டன்:மத்தியக் கிழக்கு நாடான சிரியாவில் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி 48, தற்கொலை செய்திருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

மத்தியக் கிழக்கு நாடான ஈராக்கை சேர்ந்த பாக்தாதி 2014ல் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை துவக்கினார். பல்வேறு கொடூரமான பயங்கரவாத செயல்களில் இந்த அமைப்பினர் ஈடுபட்டனர். மிக குறுகிய காலத்தில் பிரபலமானதுடன் வலுவானதாகவும் இந்த அமைப்பு உருமாறியது. ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகள் இந்த பயங்கரவாத அமைப்பினர் கட்டுப்பாட்டக்குள்
வந்தது.

இந்த அமைப்பின் தலைவரான அபு பக்கர் அல் பாக்தாதி தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வருகிறார். 'அவர் குறித்து தகவல் அளித்தால் 177 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும்' என
அமெரிக்கா ஏற்கனவே அறிவித்திருந்தது.சிரியாவில் அவர் பதுங்கியிருப்பதாகவும் அமெரிக்கப் படைகளின் தாக்குதலில் உயிரிழந்து விட்டதாகவும் பல முறை செய்திகள் வெளிவந்துள்ளன. சமீபத்தில் வெளியிட்டுள்ள 'ஆடியோ' மற்றும் 'வீடியோ' செய்தியில் 'மீண்டும் படையினர்
ஒன்றாக திரள வேண்டும்' என பாக்தாதி கூறியிருந்தார்.

இந்த நிலையில் சிரியாவின் இட்லிப் என்ற பகுதியில் பதுங்கியிருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது அமெரிக்கப் படை வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது. அப்போது அமெரிக்க படைகளிடம் சிக்காமல் இருப்பதற்காக பாக்தாதி தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இது குறித்து அமெரிக்கபடைகள் கூறியதாக வெளியான தகவல்கள் வருமாறு:இட்லிப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக அமெரிக்க படைகளுக்கு
தகவல் கிடைத்தது. அதையடுத்து போர் ஹெலிகாப்டர்கள் அங்கு அனுப்பப்பட்டன. அந்த வீடு மற்றும் அருகில் இருந்த காரை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.வான்வெளி தாக்குதல் நடத்திய அதே நேரத்தில் தரை வழி தாக்குதலும் நடத்தப்பட்டது. அமெரிக்க படைகளுக்கு
சிரியாவின் குர்து மக்களின் சிரிய ஜனநாயகப் படையும் துணையாக இருந்தது.

அனைத்து தரப்பிலும் சுற்றி வளைக்கப்பட்டதால் தப்பிக்க முடியாது என்ற நிலையில்
வெடிகுண்டுகளை உடலில் கட்டிக் கொண்டு பாக்தாதி அதை வெடிக்கச் செய்துள்ளார்.
அமெரிக்கா நடத்திய இந்த தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: