திங்கள், 28 அக்டோபர், 2019

வெறிச்சோடிய தியாகராஜ நகர் .. வரலாற்றில் முதல்முறையாக தீபாவளி பண்டிகைக்கு ரங்கநாதன் தெரு வெறிச்சோடி. வீடியோ .

கிளைகள் ஏராளம் tamil.oneindia.com - vishnu-priya: சென்னை: தீபாவளிப் பண்டிகையையொட்டி திநகரில் உள்ள ரங்கநாதன் தெருவில் மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கிறது. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
வரலாற்றில் முதல் முறையாக தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் என எந்த பண்டிகை என்றாலும் புதுத்துணி வாங்க மக்கள் ஒன்று கூடும் இடம் திநகரில் உள்ள ரங்கநாதன் தெருதான். இந்த தெருவில் வார இறுதி நாட்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
தீபாவளி, பொங்கல் என்றால் கேட்கவே வேண்டாம். அந்த தெருவில் மக்கள் தலைகள் மட்டுமே தெரியும். பூமியை பார்ப்பது என்பது நள்ளிரவு நேரங்களில் மட்டுமே சாத்தியமாகும். வழக்கம் போல் இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி திநகர் ரங்கநாதன் தெருவில் விற்பனை குறித்து நமது ஒன் இந்தியா தமிழ் தளம் நேரடியாக களத்திற்கு சென்றே களஆய்வு நடத்தியுள்ளது. அதன்படி வழக்கம்போல் இல்லாமல் ரங்கநாதன் தெரு களையிழந்தே காணப்படுகிறது.

இதற்கு சென்னையில் பெய்து வரும் மழையே காரணம் என சொல்லப்படுகிறது. மேலும் மக்களிடம் பணப்புழக்கமும் குறைந்து காணப்படுகிறது. இதுகுறித்து வாடிக்கையாளர்கள் மற்றும் வியாபாரிகளிடம் நமது நிருபர் கேள்வி எழுப்பினர். அதற்கு சிலர் தீபாவளி வழக்கம் போல் களைகட்டியுள்ளது என்றும் இன்னும் சிலர் வியாபாரம் கொஞ்சம் டல்லடிப்பதாக கூறியுள்ளனர். ஏதோ வியாபாரம் சுமாராக இருப்பதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர். இன்னும் சில வாடிக்கையாளர்கள் அடை மழை பெய்த போதிலும் குடையுடன் வந்து தீபாவளிக்காக துணிமணிகளை வாங்கிச் செல்கின்றனர்.

திநகர் ரங்கநாதன் தெரு வரலாற்றிலேயே முதல்முறையாக இந்த ஆண்டுதான் கூட்டம் குறைவாக காணப்படுகிறது. இதற்கு மேலும் சில காரணங்களும் சொல்லப்படுகின்றன. அதாவது சரவணா ஸ்டோர்ஸ், ஜெயச்சந்திரன் உள்ளிட்ட கடைகள் தற்போது சென்னை திநகரில் மட்டுமல்லாமல் மற்ற பகுதிகளிலும் புறநகர் பகுதிகளிலும் கிளைகள் திறக்கப்பட்டுள்ளன.

; இதனால் மக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் இருக்கும் கிளைகளில் சென்று தீபாவளி பர்சேஸ் செய்து கொள்கின்றனர். ஆயிரம் இருந்தாலும் திநகரில் அந்த கூட்டத்தில் சென்று துணிமணிகளை வாங்கிக் கொண்டு அங்கே இருக்கும் கையேந்திபவன்களில் உணவருந்தி விட்டு வருவதுதான் பிடிக்கும் என்று சில வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.