ஞாயிறு, 27 அக்டோபர், 2019

பாஜக அதிர்ச்சி! மகராஷ்ட்ராவில். 220 தொகுதிகளை எதிர்பார்த்து.. கிடைத்ததோ, 160 மட்டுமே.

   தினமலர் :புதுடில்லி: 'ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல்களில், பா.ஜ., மாபெரும் வெற்றி பெரும்' என, பெருவாரியான கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், தேர்தல் முடிவுகளோ, கருத்துக் கணிப்பு வெளியிட்டோரை மட்டுமன்றி, பா.ஜ.,வையும் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டன.
;மொத்தம், 220 தொகுதிகளில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி வெற்றி பெறும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கிடைத்ததோ, 160 மட்டுமே. இங்கேயாவது பரவாயில்லை; ஹரியானாவில், பா.ஜ.,வுக்கு மெஜாரிட்டியே கிடைக்கவில்லை. அங்குள்ள மாநில கட்சிகளின் தயவுடன், ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த முடிவுகள், மோடி, அமித் ஷா உட்பட, பல சீனியர் தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. ஆனால், அதை வெளியே காட்டாமல் இருந்தனர் தலைவர்கள். தேர்தல் முடிவுகள் வெளியான அன்று மாலை, கட்சி தொண்டர்கள் கூட்டத்தில் மோடி பேசினார்.
'ஒரு மாநிலத்தில் மீண்டும் ஆட்சியில் அமர்வது சாதாரண விஷயம் கிடையாது. இதுவரை, மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில், தொடர்ந்து ஒரே கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்ததில்லை' என, மோடி சொன்ன பிறகு தான், அனைவர் முகத்திலும் தெளிவு பிறந்தது. அதுவரை, குழப்பத்துடன் தொங்கியிருந்த முகங்கள் மாறின.


தேர்தல் முடிவுகளுக்கு பின், கட்சிக்குள் இதுவரை அடக்கி வைக்கப்பட்டிருந்த விஷயங்கள், மெதுவாக வெளியே வர ஆரம்பித்துள்ளன. சில தலைவர்கள் இது குறித்து, வெளிப்படையாக பேச ஆரம்பித்துவிட்டனர். 'காஷ்மீரையும், பாகிஸ்தானையும் வைத்து அதிக நாள் காலம் தள்ள முடியாது என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன' என, கூறியுள்ளனர் இந்த தலைவர்கள்.




வேலைவாய்ப்பு இல்லாமை, மந்த கதியில் பொருளாதாரம், பணப்புழக்கம் முடக்கம் என பல விஷயங்கள், பா.ஜ.,வுக்கு எதிராக உள்ளன. ஆனால், இதைப் பற்றி கட்சி தலைமை கவலைப்படவில்லை. 'இனிமேலும் இப்படியே இருந்தால், நிலைமை மோசமாகும்' என்கின்றனர், கட்சியின் சில மூத்த தலைவர்கள்.
ஹரியானா, மஹாராஷ்டிராவில், பல அமைச்சர்கள் தோல்வி அடைந்துள்ளனர். ஹரியானாவில், ஜாட் இனத்தவர் மெஜாரிட்டியாக உள்ளனர். முதல்வர் மனோகர் லால் கட்டார், ஜாட் இனத்தைச் சேர்ந்தவர் கிடையாது. அதே போல, மஹாராஷ்டிர முதல்வர் பட்னவிஸ், மராத்தி இனத்தைச் சார்ந்தவர் இல்லை.

இவர்களை தேர்ந்தெடுத்தது மோடி தான். முதல் முறை முதல்வர்களாக இவர்கள் காலம் தள்ளிவிட்டனர். ஆனால், 'இனியும் இவர்களை வைத்து காலம் தள்ள முடியாது; மாற்ற வேண்டியிருக்கும்' எனவும், கட்சியில் பேச்சு எழ ஆரம்பித்து உள்ளது.




மோடி - அமித் ஷா அணியை பிடிக்காத, அதிருப்தியில் இருந்த, பா.ஜ., தலைவர்கள் சிலர், இப்போது வெளிப்படையாக பேச ஆரம்பித்துவிட்டனர். ஹரியானாவில், பெண் தற்கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள, சுயேச்சை எம்.எல்.ஏ., கண்டாவின் ஆதரவை, பா.ஜ., பெறக் கூடாது என கட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார், முன்னாள் அமைச்சர் உமா பாரதி. இவரும், மோடி அதிருப்தியாளர்களில் ஒருவராக கருதப்படுபவர்.

'பீஹார் சட்டசபை தேர்தலில் தோற்ற போதும், இப்படித்தான் பேசினர். அதன் பின், 2019 லோக்சபா தேர்தலில், பீஹாரில் பா.ஜ.,வுக்கு தோல்வி ஏற்படும் என்றனர். ஆனால், நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று, வரலாற்று சாதனையை ஏற்படுத்தினோம்' என, அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர், மோடி ஆதரவு தலைவர்கள்.

கருத்துகள் இல்லை: