tamil.oneindia.com : சென்னை: கட்சியில் இருந்து துரைமுருகனை ஒதுக்கிவிட்டார்கள், ஓரங்கட்டி
விட்டார்கள் என்ற வதந்திகளுக்கு எல்லாம் ஒருமுற்றுப்புள்ளி வைக்கும் தருணம்
நடக்க போகிறது.
கூடிய சீக்கிரம் துரைமுருகனுக்கு தலைமைக்கு அடுத்தபடியாக
உள்ள டாப்-மோஸ்ட் பதவி ஒன்றினை கொடுத்து உயரத்தில் வைத்து அழகு பார்க்க
போகிறது திமுகழகம்!
பொதுச்செயலாளர் பதவி என்பது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த பதவி. தலைவர்
பதவிக்கு அடுத்து, முக்கிய முடிவுகளை எடுக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தது..
கட்சியின் எந்த ஒரு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிடுவதுகூட
பொதுச்செயலாளர்தான். எந்த ஒரு காரியத்தையும் இவர் அனுமதி இல்லாமல் செய்ய
முடியாது. அதனால்தான் கருணாநிதி இந்த பதவியை அன்பழகனிடமே கடைசிவரை தந்தார்.
ஆனால் பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு உடம்பு சரியில்லை.. இப்போது 96 வயது
ஆகிறது. 2 வருஷமாக வயோதிக உடல் நலக்குறைவு காரணமாக ஓய்வில்தான்
இருக்கிறார். தீவிர கட்சிப் பணிகளில் ஈடுபட முடிவதில்லை.
பொதுக்குழு
கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ந்தேதி நடந்த கட்சியின் பொதுக்குழு
கூட்டத்தில் கலந்து கொண்டதுதான் அவரது கடைசி கூட்டமாகும். இருந்தாலும்
ஒருசில முக்கிய முடிவுகளுக்கு வீட்டில் இருந்தபடி ஒப்புதல் அளித்து
வருகிறார். கட்சி தலைவர்களும் அடிக்கடி அவரை வீட்டுக்கு போய் சந்தித்து
உடல்நலம் குறித்து கேட்டு வருகிறார்கள்.
திமுகவின் முக்கிய தலைமை பதவிகள் சிலவற்றில் மாற்றம் கொண்டு வர
போவதாக ஏற்கனவே சொல்லப்பட்டது. இதில் முதலாவதாக, திமுக பொதுச்செயலாளர்
பதவியில் இருக்கும் அன்பழகனுக்கு அப்பொறுப்பில் இருந்து விடுதலை கொடுக்க
முயற்சிப்பதாகவும், அதன்மூலம் அன்பழகனுக்கு முழு ஓய்வு கொடுக்க
திட்டமிட்டுள்ளதாகவும் ஒரு பேச்சு அடிபட்டது.
இப்போது அந்த பேச்சு வலுவாக அடிபட தொடங்கி உள்ளது. வருகிற 10-ம்தேதி
துமுகவின் பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளதால், நிறைய முக்கிய முடிவுகள்
இதில் எடுக்கப்படும் என யூகிக்கப்படுகிறது. அதில், பொதுச்செயலாளர் பதவியை
துரைமுருகன் ஏற்கும் தீர்மானமும் கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை
என்கிறார்கள்.
முக்கியத்துவம் வாய்ந்த பொதுச்செயலாளர் பதவி மூத்த தலைவர்களுக்குதான்
வழங்கப்படும் என்பதால், அதற்கு பொருத்தமானவராக துரைமுருகன் இருப்பதாக கட்சி
கருதுகிறது. அப்படி துரைமுருகனை திமுகவின் பொதுச்செயலாளராக மாற்றிவிட்டால்
பொருளாளர் பதவியை எவ வேலு அல்லது டிஆர் பாலு இவர்களில் ஒருவருக்கு தரவும்
திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக