தினமணி :திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே
நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் ஆழ்துளைக் கிணற்றில்
தவறி விழுந்த இரண்டரை வயது குழந்தை சுஜித் வில்சன் மீட்புப் பணிகளை
தொடக்கம் முதலே சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் களத்தில் நின்று
செயல்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், குழந்தை சுஜித் மீட்பு
நடவடிக்கையில் இறுதி முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில் இருப்பதாக அமைச்சர்
விஜயபாஸ்கர் தெரிவித்தார். இதுதொடர்பாக சம்பவ இடத்திலிருந்து
செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:
ரிக் இயந்திரங்களைக் கொண்டு சுமார் 40
அடிக்கு பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் அதை தாண்டி செல்வது கடினமாக உள்ளது.
இயந்திரத்தால் திட்டமிட்டபடி பள்ளம் தோண்டப்படுமா என்பது கேள்விக்குறியாக
உள்ளது. மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் உள்ள பாறைகள் கடினமாக
இருக்கின்றன. இயந்திரங்களே திணறக்கூடிய அளவுக்கு பாறைகள் கடினமாக உள்ளன.
இவ்வளவு கடினமான பாறைகளை இதுவரை பார்த்தது இல்லை.
விரைவில் மாற்று வழி மற்றும் அடுத்த கட்ட
நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர்
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசிக்க உள்ளோம். குழந்தை
சுஜித்திடம் இருந்து எந்த அசைவும் இல்லை. அனைத்து நிலைகளையும் ஆராய்ந்து
இறுதி முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம் என்று தெரிவித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக