வியாழன், 5 செப்டம்பர், 2019

வேட்புமனுவில் கணவரின் வருமானத்தை தெரிவிக்கவில்லை ...கனிமொழிக்குப் புதிய `நெருக்கடி!'

kanimozhi
vikatan - இ.கார்த்திகேயன் :
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி எம்.பி கனிமொழிக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட கனிமொழியின் வேட்புமனுவில் கணவரின் வருமானத்தை தெரிவிக்காததால், அவரின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையம், எம்.பி கனிமொழி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழிசையை எதிர்த்து போட்டியிட்ட கனிமொழி 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வீழ்த்தி தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி எம்.பி-யானார். வெற்றிபெற்றாலும் தேர்தல் களத்தில் சர்ச்சைகளையும் எதிர்கொண்டார்.
வேட்புமனுத்தாக்கல் பரிசீலனையின்போதே கனிமொழி, தமிழிசை உள்ளிட்ட வேட்பாளர்களின் மனுக்கள் நீண்ட நேரம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் ஏ.சந்தான குமார் என்பவர் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். கனிமொழி தாக்கல் செய்த வேட்புமனு படிவத்தில், சிங்கப்பூர் பிரஜையான அவரின் கணவர் அரவிந்தனின் வருமானத்தைப் பற்றி குறிப்பிடவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி அவரது வெற்றியை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி வழக்கு தாக்கல் செய்தார்.
அதில், ``மக்கள் ஒரு வேட்பாளரை பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக வேட்புமனுவில் வருமான விவரங்கள் கேட்கப்படும் நிலையில், தன் கணவர் வருமானத்தை மறைத்தது தவறு. அதைவிட மனுவை அதிகாரிகள் ஏற்றது சட்டவிரோதம். எனவே, கனிமொழியின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க வேண்டும்'' என மனுதாரர் கோரியிருந்தார். இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, `மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் படி, போட்டியிட்ட வேட்பாளருக்கு எதிராக வழக்கு தொடர உரிமை உள்ளது எனக் கூறிய நீதிபதி வழக்கு குறித்து கனிமொழி மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் எனக் கூறி அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்துக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். ஏற்கெனவே தமிழிசை சௌந்தரராஜன் சார்பில் கனிமொழி மீது தொடர்ந்த தேர்தல் வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் இந்த வழக்கும் சேர்ந்துகொண்டது கனிமொழிக்கு புதிய தலைவலியை அதிகரித்துள்ளது எனலாம்

கருத்துகள் இல்லை: