திங்கள், 2 செப்டம்பர், 2019

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இங்கிலாந்தில் இருந்து அமெரிக்கா புறப்பட்டார்

இங்கிலாந்து பயணம் நிறைவு: எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா புறப்பட்டார்    தினந்தி :இங்கிலாந்து பயணம் நிறைவு பெற்றதை தொடர்ந்து, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அமெரிக்காவுக்கு புறப்பட்டார்.
லண்டன், வெளிநாடுகளில் இருந்து அதிக முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டார். கடந்த 28-ந்தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய் சென்று, அங்கிருந்து லண்டன் சென்றார்.
இங்கிலாந்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் பணித்தர மேம்பாடுகள் தொடர்பாக சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனம் மற்றும் லண்டன் கிங்ஸ் கல்லூரி ஆஸ்பத்திரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார். இங்கிலாந்தின் அவசர ஆம்புலன்ஸ் சேவை மற்றும் சக்போல்க் நகரில் உள்ள ‘ஐ.பி. சுவிட்ச் ஸ்மார்ட் கிரிட்’ நிறுவனத்தை பார்வையிட்டார். புகழ்பெற்ற கே.இ.டபிள்யூ. தாவரவியல் பூங்காவை பார்வையிட்டு, தமிழகத்தில் உள்ள தாவரவியல் பூங்காக்களை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனையிலும் ஈடுபட்டார்.


அமெரிக்கா புறப்பட்டார்

இங்கிலாந்து பயணத்திட்டம் முடிவடைந்ததை தொடர்ந்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று லண்டனில் இருந்து விமானம் மூலம் அமெரிக்காவுக்கு புறப்பட்டார். இன்று (திங்கட்கிழமை) காலை அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தை அடைகிறார்.

நியூயார்க் நகரில் இருந்து இன்று பல்வேறு இடங்களுக்கு முதல்-அமைச்சர் செல்கிறார். பல கூட்டங்களில் பங்கேற்று, முதலீட்டாளர்கள் மற்றும் தமிழக தொழில் முனைவோர்களை சந்தித்து பேசுகிறார். அமெரிக்கா பயணத்தை முடித்துக்கொண்டு 7-ந்தேதி லாஸ்ஏஞ்சல்ஸ்-ல் இருந்து விமானம் மூலம் 8-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துபாய்க்கு புறப்படுகிறார். 9-ந்தேதி நள்ளிரவு துபாயில் இருந்து விமானத்தில் புறப்படும் எடப்பாடி பழனிசாமி, 10-ந்தேதி சென்னை வந்தடைகிறார்.

சிறுமி வாழ்த்து கடிதம்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி லண்டனில் உள்ள ஓட்டலில் நேற்று தங்கியிருந்தபோது லண்டனில் உள்ள பிர்மிங்காம் நகரில் வாழும் தமிழக தம்பதியினர் முதல்-அமைச்சரை சந்திக்க விருப்பப்பட்டனர். அவர்களது மகள் ஹாஷிளி சரவணன் முதல்-அமைச்சரை சந்தித்து பேச மிகவும் ஆசைப்பட்டாள்.

தகவல் அறிந்த முதல்- அமைச்சர், அந்த மாணவியை உடனடியாக சந்திக்க நேரம் ஒதுக்கினார். எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த அச்சிறுமி எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்ததுடன், அவரிடம் ஒரு கடிதத்தை கொடுத்தார்.

அந்த கடிதத்தில் ‘மாங்கனி நகரத்து மக்கள் முதல்வர்... விமானம் ஏறிவந்த விவசாயிகளின் முதல்வர்... லண்டன் இலக்கை வென்று செல்லும் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றிகள்’, என்று குறிப்பிட்டிருந்தாள். அச்சிறுமிக்கு, நன்றாக படிக்க வேண்டும். வாழ்க்கையில் நிறைய சாதனைகளை எட்டவேண்டும்’ என்று அவர் அறிவுரைகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

3-ம் வகுப்பு படிக்கும் அவளது பெற்றோரின் சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் திருமலைப்பட்டி அருகேயுள்ள நத்தமேடு கிராமம் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: