Muralidharan Pb : ஆட்சி மாற்றத்திற்கு விதைத்தவர். எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல். விளக்கம்:
கிடைப்பதற்கு அரிய காலம் வாய்க்கும் போது, அதைப் பயன்படுத்திக்கொண்டு அப்போதே செய்யவேண்டிய காரியங்களை செய்து முடிக்க வேண்டும். எமெர்ஜென்சி உச்சக்கட்டத்தில் கலைஞர் ஆற்றிய அரும்பணிகளை நாம் கடந்த 6 பாகங்களாக பார்த்தோம். ஒரு நல்ல வீரனுக்கு அழகு எந்த நேரத்தில் கத்தியை எடுக்கவேண்டும் எந்த நேரத்தில் அரவணைப்புக்காக கட்டி தழுவி சமாதானம் செய்ய கொள்ள வேண்டும் என்பது தெரிந்துவைத்திருந்தால் மட்டுமே அவன் சிறந்த வீரன். கலைஞர் மிகச்சிறந்த போராளி. அவருக்கு இது சமாதானம் செய்துகொள்ளவேண்டிய நேரம் வந்தமையால் அதற்கான முயற்சிகளில் அவர் இறங்கி வேலை பார்த்தார், வெற்றியும் பெற்றார்.
தமிழக முதலமைச்சர்களிலேயே புது டெல்லியோடு சண்டையிட்டும், சமாதானமான முறையில் தமிழகத்துக்கு தேவையானவற்றை பெற்றதில் இவரை மிஞ்சிட ஆளில்லை. இன்று 37 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட ஆளும் கட்சி தமிழகத்திற்க்காக பெற்றது ஒன்றும் இல்லை ஆனால் அடகு வைத்தது மிக மிக அதிகம், குறிப்பாக தன்மானம்.
எமெர்ஜென்சியை முடிவிற்கு கொண்டு வருவதெனமுன்னோட்டம் இந்திராவின் பேச்சில் தெரிந்தது. ஆம் கௌஹாத்தி நகரில் காங்கிரஸ் கூட்டத்தில் சூசகமாக வெளியிட்டார் இந்திராகாந்தி. நேரடியாக அறிவிப்பு செய்ய எனோ அவரது வைராக்கியம் இடம் கொடுக்கவில்லை. சற்றே ஆழம் பார்த்தார் பிரதமர். அந்த பேச்சில்," எதிர்கட்சியினர் எங்களை குறைகூற கூடாது என நான் ஒரு போதும் கூறியதில்லை. அவர்கள் பொறுப்போடு நடந்துகொண்டு வளமான இந்தியாவை உருவாக்க உதவிட வேண்டும். அவ்வாறு அவர்கள் நடந்துகொள்ள தயாராக இருந்தால் இந்த அரசாங்கம் அவர்களுடன் பேச்சு நடத்த தயாராக உள்ளது" என தெரிவித்தார். இதுவே அவர் இறங்கி வருகிறார் என்பதன் அறிகுறி.
"நாட்டின் நலன் கருதியே சில சமயங்களில் கொஞ்சம் தீவர முடிவுகள் எடுக்க நேரிட்டது. அதுவே நாம் அண்மையில் பார்த்துவரும் எமெர்ஜென்சி காலம். எதிர்க்கட்சிகள் எல்லாரும் ஏதாவது சொல்ல நினைத்தால் நான் பேச வருவேன்"
தனித்தனியாக சென்று பேசினால் அதில் நல்விளைவுகள் ஏற்படுவதில் சிக்கல் உண்டாகும். ஆகவே அனைத்து எதிர்கட்சியினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே பேச்சுவார்த்தை பலனளிக்கும் என்பது திமுகவின் எண்ணம். அதன் முதல் முயற்சியாக கலைஞர் புதுடில்லி செல்ல எண்ணினார். அனைத்து தலைவர்களுடன் தொலைபேசியில் பேசினார். அவர்களுக்கும் அந்த எண்ணமே சரியென பட்டது. கேரளாவின் கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு இதில் உடன்பாடில்லை. இருந்தும் அவர்களுக்கும் அழைப்பு கொடுத்தார். கடைசி நேரத்தில் கலந்துகொள்ளவில்லை.
டிசம்பர் 1976,கலைஞர் கருணாநிதி புதுடெல்லி பயணமானார். அங்கு சென்று தலைவர்களை சந்தித்து இந்திரா காந்தியின் இந்த நிலைப்பாடு குறித்து ஆலோசிக்க இரா. செழியனின் வீட்டிற்கு அனைத்து தலைவர்களையும் அழைத்து பேசுவது என திட்டமிட்டிருந்தார். முன்னாளில் அன்றுதான் சிறையில் இருந்து வெளியில் வந்திருந்த வாஜ்பாயீயை(முன்னாள் பிரதமரேதான்) அவரை அவரது வீட்டில் சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு மறுநாள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.
பழைய காங்கிரஸ்
பாரதிய லோக் தளம்
சோசியலிஸ்ட் கட்சி,
ஜன சங்கம்,
திமுக ஏனைய கட்சிகள் பங்கேற்ற கூட்டத்தில் பேசினார் கலைஞர்.
திமுக தலைமையேற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் கலைஞர் வரவேற்று பேசினார்.
"என் அழைப்பினை ஏற்று இங்கு வந்துள்ள தலைவர்களே,நண்பர்களே, இந்திரா இப்போது மனமிரங்கி வந்துள்ளார். நாம் தனித்தனியே போய் பேசுவதை விட ஒன்று சேர்ந்து ஓரணியாக நின்ற பேசினால் நிச்சயம் பலன் கிடைக்கும்" என்றார்.
சிலர் 'பேச்சு வார்த்தை தொடங்க எமெர்ஜென்சியை திரும்ப பெற வேண்டும்' என்றனர். அது நடைமுறைக்கு ஒத்துவராத ஒரு செயல் என்று அறிந்துவைத்திருந்த கலைஞர் கருணாநிதி,
"சகிப்பு தன்மையுடன் மனம் விட்டு பேசி மீண்டும் நாட்டில் இயல்பு நிலை அமைந்திட முயற்சிகளை மேற்கொண்டு நமது பணிகளை வகுத்து கொள்வதே சிறப்புடையது என்று நான் சார்ந்துள்ள திமுக கருதுகிறது, பிரதமருடன் பேச்சு வார்த்தையை தொடங்கிட எதிர்க்கட்சிகள் ஓரணியில் நின்று அமாம் போடுகிற கூட்டம் போடுபவர்களாக இருக்க கூடாது. அதே நேரத்தில் நாட்டின் வலிமைக்கும், வளத்திற்கும் கேடு ஏற்படுகிற எண்ணத்துடன் யாரும் இங்கில்லை. ஒன்றரை ஆண்டு காலத்திற்கு பிறகு நிலைமையை பரிசீலனை செய்ய இருதரப்பினரும் முன் வரவேண்டும்."
மேலும் இரண்டு நாட்கள் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. சொல்லப்போனால் டிசம்பர் 15,16 இந்திய அரசியலில் ஜனதா(மக்களுடைய) கட்சி என்று ஒரு புதிய கட்சி உருவானது. அந்த உருவாக்கத்தில் கலைஞர் கருணாநிதியின் பங்கு அளப்பரியது.
மறுநாள் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் குலதீப் நயார், "கருணாநிதியின் இந்த சீரிய முயற்சி நல் விளைவுகளை தரும், வட தென் துருவமாக இருந்த அனைத்து எதிர்கட்சிகளை கருணாநிதி ஒன்று திரட்டி பேசவைத்தார் என்று கருத்திட்டிருந்தார்.
மேலும் பேச்சுவார்த்தை பல்வேறு கட்டங்களாக பல இடங்களில் நடைபெற்றது. இறுதியாக ஒரு கருத்துரை எழுதப்பட்டு அனைவரது ஒப்புதலுடன் இறுதிவடிவம் பெற்று அனைத்து கட்சியினரால் வெளியிடப்பட்டது. இந்த முயற்சியை வெற்றி பெற செய்த கலைஞருக்கு ஜெ பி, பாட்னாவில் இருந்து பாராட்டி கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.
எதிர் கட்சியின் நீண்ட உரையோடு, "வெளிப்படையான, சுயேச்சையான விவாதத்தின் மூலம் நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த நிலையை நம்மால் தீர்க்க இயலும் என்று எதிர்க்கட்சிகள் நம்பிக்கை கொண்டுள்ளன" என்றும் எழுதி அதையும் சேர்த்து பிரதமருக்கு அனுப்பி இருந்தார்.
அவ்வளவு எளிதில் கறைவரா இந்திரா காந்தி ? தனக்கு சிறிது அவகாசம் தேவைப்படுகிறது என்று கூறி அனைத்து எதிர்க்கட்சிகளின் போக்கினை சில நாட்கள் உன்னிப்பாக கவனித்தார். இதனிடையே இந்தியாவில் இந்த நிலையை நிறைய நாடுகள் கவனித்து கொண்டிருக்கையில், சிறிது சிறிதாக சர்வாதிகார கோரப்பிடியை சற்று தளர்த்தினார் பிரதமர். அதன் படி நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் விடுதலை செய்யப்பட்டனர். இருப்பினும் திமுகவினரை காவல்துறை விடுவிக்கவில்லை. கலைஞர், ராஜாராமுடன் சென்று ஆளுநரை சந்தித்து முறையிட்ட பின் ஒவ்வொரு நாளும் சிறையிலிருந்த கழகக்கண்மணிகள் விடுவிக்கப்பட்டனர்.
சிறையில் போலீஸின் பூட்ஸ் கால்களுக்கு மிதிபட்டுப்போன சிட்டிபாபு இறக்கும் தருவாயில் இருந்த காரணத்தால் அவரைக் காண பொது மருத்துவமனைக்கு சென்று பார்த்தார். சிறிது நேரத்துக்கெல்லாம் அவர் உயிர் பிரிந்தது. காவல்துறை சிட்டிபாபுவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் இறந்துபோனார் என்று கோப்பை மூடியது.
மார்ச் 21 ஒன்றாம் தேதி நாடு முழுவதும் தேர்தல் என வானொலியில் அறிவித்தார் இந்திரா காந்தி. அதுவரை காபந்து ஆட்சி நடைபெறும் எனவும் அன்றுடன் இந்த எமெர்ஜென்சி முடிவிற்கு வரும் எனவும் அறிவித்தார்.
பழைய காங்கிரஸ், பாரதிய லோக்தளம், ஜனசங்கம், சோசலிஸ்ட் கட்சி ஆகிய நான்கும் ஒன்று சேர்ந்து ஜனதா என்று ஒரே கட்சியாக தேர்தலை சந்தித்தது. இந்தியாவில் சர்வாதிகாரம் அணைந்து ஜனநாயகம் தோன்றியது. ஆனால் தமிழகத்திலோ நிலைமை தலைகீழ் அதுவரை கலைஞர் கட்டிக்காத்த ஜனநாயகம் அடுத்த ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால், புரட்சி தலைவர், பொன்மனச் செம்மல், வள்ளல் என்ற பெயரில் தமிழகத்தில் சர்வாதிகாரம் முளைத்தது. அன்று முதல் தமிழகத்திற்கு 13 ஆண்டுகள் ஜென்ம சனி ஆரம்பமானது. நடந்த அத்தனை கூத்துக்களையும் பார்ப்போம் வரும் பதிவுகளில்.
மீண்டும் சிந்திப்போம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக